புதன், 22 ஆகஸ்ட், 2018

துரைமுருகன் பொருளாளர் ... டி ஆர் பாலு முதன்மை செயலாளர்... கனிமொழி துணை பொதுசெயலாளர் ... ?

மாலைமலர் : விரைவில் நடைபெற இருக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும், கனிமொழி துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு வருகிற 28-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. அண்ணா காலத்தில் தி.மு.க.வில் தலைவர் பதவி இல்லை. அவர் பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்து வந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, மு.க.ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவர் ஆனார்.
தற்போது கட்சியை நடத்தி வரும் அவர் பொருளாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார். நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் கட்சி பொறுப்பாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய தலைவரையும், பொருளாளரையும் தேர்ந்து எடுக்கிறார்கள்.

தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வருகிற 26-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தி.மு.க. தலைமை கழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் வேட்புமனு கட்டணமாக செலுத்த வேண்டும்.


வேட்பு மனுக்களை திரும்ப பெற விரும்புவோர், 27-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் திரும்ப பெற வேண்டும். மனுக்கள் பரிசீலனை 27-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய வேண்டும் என்று தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகிறார்கள். எனவே, தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் தயாராக இல்லை. ஆகவே, அவர் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

தி.மு.க.வில் ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்க கூடாது என்று கட்சியில் விதி உள்ளது. எனவே, மு.க.ஸ்டாலின் தான் வகித்து வரும் பொருளாளர் பதவியை விட்டுக் கொடுக்கிறார். இந்த பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுகிறார். அவரும் போட்டியின்றி தி.மு.க. பொருளாளர் ஆகிறார்.

கனிமொழி எம்.பி. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார். டி.ஆர்.பாலு தி.மு.க.வின் முதன்மை செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரை முருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவதும் முறைப்படி அறிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக