புதன், 22 ஆகஸ்ட், 2018

புதிய கேரளத்தை உருவாக்க மெகா திட்டம்:.. பினராஇ அரசு திட்டம் ,,, மத்திய அரசிடம் ...

தீக்கதிர் : புதிய கேரளத்தை உருவாக்க மெகா திட்டம்: பினராயி
மத்திய அரசிடம் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு ஆக.30இல் சட்டமன்ற சிறப்புக் கூட்டம்
திருவனந்தபுரம், ஆக.21-
பெருமழையால் துயரங்களை சந்தித்துள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவர்களுக்கு புதிய வாழ்க்கையை அளிக்கவும், கேரளத்தை புனரமைக்கவும் பொருத்தமான மெகா திட்டம் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. “தகர்ந்துபோன கேரளத்தை இதற்கு முன்புள்ள நிலைக்கு புனரமைப்பதல்ல இலக்கு. புதியதொரு கேரளத்தை படைப்பதற்கான திட்டத்தை தயாரிப்பதாக” முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் கூறியதாவது:கேரள மாநிலத்தை புனரமைப்பதற்காக பெரிய அளவிலான ஆதாரங்கள் கண்டறியப்பட வேண்டும்.

இந்த சூழ்நிலையில் மாநிலத்திற்கு வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை ஏற்படுத்த மத்திய அரசை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தின் மொத்த அத்தியாவசிய பொருள் உற்பத்தியில் (ஜிஏசிடிபி) 3 சதவீதம் மட்டுமே இப்போது கடன் பெற வாய்ப்பு உள்ளது. அதை 4.5 சதவீதமாக உயர்த்துமாறு கேட்டுள்ளோம். இந்த அடிப்படையில் கடன் எல்லையை உயர்த்தினால் கேரளத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதலாக சந்தையிலிருந்து சேகரிக்க முடியும். முன்புள்ள வசதிகளை புனரமைக்கவும், விவசாயம், பாசன வசதிகள் உள்ளிட்ட துறைகளிலும், சமூக துறையிலும் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த தனியாக திட்டம் செயல்படுத்துமாறு நபார்டு வங்கியிடம் கோரப்பட்டுள்ளது.
துயரத்தின் பின்புலத்தில் மத்திய திட்டங்களில் கேரளத்திற்கு தனியான தொகுப்பு தேவை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இந்த ஆண்டு 2,600 கோடி ரூபாய்க்கு தனி தொகுப்பு வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிவாரணம், புனர் வாழ்வு, புனர் நிர்மாணம் போன்றவை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்துமாறு ஆளுநரிடம் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கி கடன் வசூலை நிறுத்தி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும் இது பாதகமானது. துயரத்தில் வாழும் மக்களுக்கு இது பெரிய நிம்மதியை அளிக்கும். ஆனால் சில தனியார் நிதி நிறுவனங்கள் இதற்கு மாறாக கடினமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன.
அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் நிவாரண முகாம்களில் சென்று கடன் நிலுவைத் தொகையை வசூலிக்க முயன்றதாக புகார்கள் வந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் கைவிட வேண்டும். மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ள நிலைப்பாடுகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.<>தீக்கதிர்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக