சனி, 4 ஆகஸ்ட், 2018

இந்து அறநிலைய துறையை ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் சதி! சி பி ஐ விசாரணையை திராவிடர் கழகம் வரவேற்கிறது! ...


கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்*
*இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் நேர்மையான பார்ப்பனரல்லாத அதிகாரிகளைப் பழிவாங்குவதா?*
*இந்து அறநிலையத் துறையையே ஒழித்துக்கட்டி மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கொண்டுவரும் முயற்சி - சூழ்ச்சிக்கான முன்னோட்டம்!*
*சி.பி.அய். விசாரணை மாற்றம் வரவேற்புக்குரியதே!*
*சூழ்ச்சிகளையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தி கி.வீரமணியின் முக்கிய அறிக்கை*
நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்து அறநிலையத் துறை சட்டத்தினை ஒழித்து, மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தின்கீழ் கோவில்களைக் கொண்டுவர பார்ப்பனர்கள் மேற்கொண்டுவரும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் *ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:*
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை (Hindu Religious Endowment Board) என்னும் அத்துறை, அரசின் தனிச் செயலாளரைக் கொண்ட துறையாகவும், 'நீதிக்கட்சி' ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரசு பார்ப்பனர்களால், குறிப்பாக சத்தியமூர்த்தி போன்ற வைதீக வெறிகொண்ட பார்ப்பனர்களாலும் கடுமையான எதிர்ப்புக் கிடையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சமூகப் புரட்சியை உருவாக்கிய சட்டம் ஆகும்!
*பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டம்!*
இதன்வரலாற்றை வாசகர்கள் தெரிந்துகொண்டால்தான் இப்போது நடைபெறும் வழக்குகளும், சட்ட நடவடிக்கைகளும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற பிரச்சினையின் அடிநீரோட்டமாகக் கொண்டது என்ற சூழ்ச்சி விளங்கும்.

பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில், பிரிக்கப்படாத பழைய சென்னை மாகாண அரசின் 1817 ஆம் ஆண்டுச் சட்டம் VII ஆவது பிரிவு, கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ரெவின்யூ போர்டுக்கு வழங்கியது.
*விக்டோரியா மகாராணியின் சாசனம்*
1863 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அறநிலையச் சட்டம் XX -ன்படி - இந்திய மதங்களில் தலையிடுவதில்லை என்ற பொதுக் கொள்கையோடு (விக்டோரியா ராணி சாசனப்படி) கோவில் நிர்வாகங்களிலிருந்து பிரிட்டிஷ் அரசு விலகிக் கொண்டது. இந்தச் சட்டப்படி அரசு எல்லாப் பொறுப்புகளையும் கோவில்களின் அறங்காவலர்களுக்கு வழங்கியது.
பல ஆண்டுகளாக கோவில் நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை; மிக மோசமான நிர்வாகச் சீர்குலைவுகள் இதனால் நடைபெற்று வந்தன.
*1905 பெல்லாரி மாநாட்டுத் தீர்மானம்*
1905 ஆம் ஆண்டு பெல்லாரியில் கூடிய சென்னை மாகாண மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.
"இந்து அறக்கட்டளைகளில் நிர்வாகச் சீர்குலைவும், நிதி மோசடிகளும் அதிகமாக உள்ளன. ஆகவே, தேவஸ்தான கமிட்டிகளின் உறுப்பினர்களை அளவாக நியமிக்கவும், கணக்கை பருவம்தோறும் வெளியிடவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது" என்பது அத்தீர்மானம்.
இந்தப் போக்குகளில் அதிருப்தியுற்ற பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத பலரும் கிளர்ந்து தர்ம ரட்சண சபை என்ற ஒன்றை 1907 இல் மதுரையில் உருவாக்கினர். இந்த தர்ம ரட்சண சபை நடவடிக்கைகள் மறைமுக பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்த வழி வகை செய்வதை பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் உணர்ந்த பின் எதிர்த்தனர்.
*நீதிக்கட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம்*
17.11.1916 ஆம் ஆண்டு 'மெயில்' ஆங்கில நாளேட்டில் "சமூகநீதி" என்ற புனை பெயரில், "தர்ம ரட்சண சபையின் இந்த நடவடிக்கைகள் பார்ப்பனரல்லாத அறங்காவலர்கள் உள்ள இடத்தில் பார்ப்பனர்களை நியமிப்பதற்காகத்தான் என்று பொதுவாகப் பேசப்படுகிறதே, இது உண்மையா?" என்ற கேள்வியை எழுப்பினர்.
*1917 ஆம் ஆண்டில்* சமஸ்கிருதப் பள்ளிகளைத் திறக்க வற்புறுத்தினர். 1917 ஆம் ஆண்டு கோவையில் கூடிய மாநாட்டில், அதனால் பார்ப்பனர்கள் மட்டுமே பயனடைய முடியும் என்பதை பலர் வற்புறுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக நீதிக்கட்சி ஆட்சியில் 1922 ஆம் ஆண்டு ஒரு மசோதாவைத் தயாரிக்க குழு போடப்பட்டது, ஆண்டுக்கணக்கில் அம்மசோதா கிடப்பில் போடப்பட்டு, பல எதிர்ப்பு - போராட்டங்களுக்கிடையே *சட்டமன்றத்தில் 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு*, நிறைவேற்றப்பட மசோதா வைசிராயினுடைய கையொப்பம் பெற்று *1925 ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமாக்கப்பட்ட நிலையில்*, தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து கொண்டே அதை வரவேற்றார்!
இதன் விளைவாக (நீதிக்கட்சி ஆட்சியில்) கோவில்களில் பார்ப்பனர் கொள்ளைகள் தடுக்கப்பட்டன. தணிக்கை செய்யும் உயர் அமைப்பு உருவாக்கப்பட்டது. கோவில்களின் உபரி நிதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு சுதந்திர அமைப்பாக வாரியம் ஒன்று செயல்படத் தொடங்கியது.
*இந்து அறநிலையத் துறையை ஒழித்துக்கட்ட சூழ்ச்சி*
"கோவில் பூனைகள்", "சுரண்டல்", "கோவில் பெருச்சாளிகள்" திருட்டு இவற்றைத் தடுக்க உண்டாக்கப்பட்ட இந்து அறநிலையத் துறையை ஒழித்துக்கட்ட மீண்டும் பார்ப்பன பழைய சுகபோகச் சுரண்டலைத் தொடரவே, இந்து அறநிலையத் துறையும், வாரியமும் கலைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்குமுன் வழக்குத் தொடுத்த தயானந்த சரசுவதி என்பவர் யார் தெரியுமா?.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள மஞ்சக்குடி நடராஜ அய்யர் என்ற பார்ப்பனர்தான் "தயானந்த சரசுவதி" என்று அவதாரம் எடுத்தப் பேர்வழி! (இவர் மறைந்துவிட்டார்)
இதில் சு.சாமிகள், எச்.இராஜாக்கள், சங் பரிவார் மற்றும் இராமகோபாலன் போன்ற பல பார்ப்பனர்கள் மும்முரமாக இறங்கி, இந்தத் துறைக்கு எதிராக ஒரு திட்டமிட்டப் போரைத் தொடுத்துள்ளனர். சில இடங்களில் நடைபெறும் கோவில் சிலை திருட்டுகளுடன், *உண்மையிலேயே இவைகளில் சம்பந்தப்பட்ட பார்ப்பன அர்ச்சகர்களை விட்டுவிட்டு, அத்தகைய* திருட்டு அர்ச்சகர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள பார்ப்பனரல்லாத இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் மற்றும் முக்கிய அதிகாரிகளின் பக்கம் அதனைத் திருப்பி நேர்மையான அந்த அதிகாரிகள்மீது ஆதாரம் இல்லாவிடினும் அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி, அவமானப்படுத்தும் திருப்பணியில் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றனர். (மத்திய அரசு அமைத்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் குழு - தமிழகக் கோவில்கள், அர்ச்சகர்கள், மந்திரங்கள் தெரியாத - கோவில்களைச் சுரண்டுகிறவர்களாக இருப்பதை வெளிப்படுத்தியதே!)
*பார்ப்பனரல்லாத அதிகாரிகளை சிக்க வைக்க சூழ்ச்சி!*
நீதிமன்றங்களில்கூட இதற்கென உள்ள காவல்துறையின் ஒரு பிரிவின் தலைமைக் காவல்துறை அதிகாரி தமிழக அரசின் கீழ் பணிபுரிபவர் என்பதையும் மறந்து, அரசுக்கே அறிக்கைகள் தராது, நீதிமன்றங்களில் அரசின்மீதே பல குற்றங்களைக் கூறி, ஒரு இக்கட்டான நிலையை தமிழக அரசுக்கு ஏற்படுத்தி உள்ளார்.
இதுவரை கைதான அதிகாரிகள், ஸ்தபதிகள் ஆகியவர்களில் எத்தனை பேர் பார்ப்பனர் - எத்தனை பேர் பார்ப்பனரல்லாத மற்றையோர் என்று கணக்குப் பார்த்தால், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை யோக்கியமற்றவர்களாக சித்தரித்துள்ளது புரியும்.
*தமிழக அரசின் வரவேற்கத்தக்க முடிவு*
அண்மையில் பழிவாங்கும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர் கூடுதல் ஆணையரான *திருமதி. கவிதா என்பவர்*. இவர் சிறீரங்கம், சென்னை உள்பட பிரபல கோவில்களில் முக்கிய நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர். சட்ட திட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி, செயல்பட்ட நேர்மையான அதிகாரியாக இருந்துள்ளவர். அதனால்தான் பார்ப்பனர் மற்றும் நேர்மையற்றவர்களின் எதிர்ப்புக்கு ஆளானாவர்.
ஓராண்டுக்கு முன்பு போடப்பட்ட எப்.அய்.ஆர். மீது இப்போது திடீரென்று கைது செய்து, திருச்சி சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை உயர்நீதிமன்ற நீதிபதிகளே கேட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, சிலை திருட்டு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கைகூட தராது குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி தானடித்த மூப்பாக நடக்கிறார் என்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கூறும் அளவுக்கு நடந்துகொள்ளும் போக்கு இருந்து வருகிறது. இந்த இரண்டு நிலையும், மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
*இந்நிலையில், வழக்குகளை சி.பி.அய்.க்கு மாற்றிட, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.*
உண்மையான குற்றவாளிகளை தயவு தாட்சண்யமின்றி, பழிவாங்கும் உணர்ச்சிக்கு இடமின்றி, வழக்குகள் முறையாக நடத்தப்பட்டு, தீர்ப்புகள் வருவதுபற்றி நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை.
பொதுவாக, முந்தைய பல வழக்குகள் பொதுநல உணர்வாளர்கள், வழக்காடிகள் சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று கேட்பதும், மாநில அரசு அதை மறுப்பதையும்தான் நாம் கேள்விப்பட்ட, கேள்விப்படும் செய்திகள்.
இந்த வழக்கில் தமிழக அரசே, *கொள்கை முடிவாக* சி.பி.அய். விசாரணைக்கு விட முன்வந்திருக்கிறார்கள். சிலை திருட்டு வழக்குகள் தவறான போக்கில் எப்படி அதீதமாகச் சென்றுள்ளது என்பது எவருக்கும் இதன்மூலம் புரியக்கூடிய ஒன்றாகும்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பல உண்மைகளை - தகவல்களை இப்போது நாம் வெளியிடுவது சட்டப்படி சரியாகாது என்பதால் இத்துடன் முடிக்கிறோம்.
சில மாதங்களுக்கு முன்பே விடுதலையில் இத்துறைபற்றி தொடர் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
*உண்மைகள் ஒரு நாள் வெளியாகும்!*
ஓர்ந்து கண்ணோடாது நீதி பரிபாலனம் நடைபெறவேண்டும் என்ற பொது நோக்கில்தான் இதனை எழுதுகின்றோம் - யாரையும் காப்பாற்றவோ, யாருக்கும் வக்காலத்து வாங்கவோ அல்ல!
உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில்
பொய்யும், புரட்டும் பலியாகும்
*- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்*
*- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்*
சென்னை,3.8.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக