வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ஆளூர் ஷா நவாஸ் கேள்வியும் துரை தயாநிதி பதிலும்

துரை தயாநிதிவிகடன் :மலையரசு: சுப்பிரமணியன் சுவாமி குறித்த ஆளூர் ஷாநவாஸ் கேள்விக்கு,  மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய அவரின் மகன் மு.க.அழகிரி, ``உண்மையான தி.மு.க விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள்'' எனக் கூறியது, தி.மு.க-வில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க தொடர்பாக அவர் தெரிவித்துவரும் கருத்துகள் அக்கட்சி தொண்டர்கள், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறினாலும், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் எந்த ஒரு ரியாக்‌ஷனும் காட்டாமல், பொதுக்குழு வேலைகளிலும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கவனம்செலுத்திவருகிறார். மேலும், அழகிரியின் கருத்துக்கு இரண்டாம்கட்ட தலைவர்களே பதிலளித்து வருகின்றனர். 

இந்நிலையில், சமீபத்தில் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் அழகிரி பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ``வீட்டில் இருப்பவர்களை மட்டும் கேளுங்கள். வெளியில் இருந்து உண்ண வருபவர்களைப் பற்றி கேட்க வேண்டாம்" எனக் காட்டமாகப் பதிலளித்தார். இதற்கு எதிர்வினை ஆற்றிய அழகிரியின் மகன் துரை தயாநிதி, ``காலம் காலமாக தி.மு.க-விலும், அ.தி.மு.க-விலும், ஓசி சோறு உண்ணும்  ஐயா கி.வீரமணி அவர்கள் இதைப்பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்" எனக் கோபமாக ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்கிடையே, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அழகிரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ``தி.மு.க-வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் மட்டுமே. அழகிரியால் தி.மு.க-வில் நுழைய முடியாது. அவரால் இட்லி கடை மட்டுமே வைக்க முடியும்" எனக் கிண்டலாகத் தெரிவித்தார்.  சுப்பிரமணிய சுவாமியின் இந்தப் பதிலை மேற்கோள்காட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், ``கி.வீரமணிக்கு எதிராகப் பொங்கோ பொங்குனு பொங்கிய துரை தயாநிதி இதற்கு என்ன சொல்கிறார்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு, தற்போது அழகிரி மகன் துரை தயாநிதி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், ``மனநோயாளிகளுக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை, அதுவே காரணம்" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார். ட்விட்டரில் இவர்களது கருத்துக்குக் கீழே, பலரும் கமென்ட்டுகள் பதிவிட்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக