சனி, 25 ஆகஸ்ட், 2018

திருநாவுகரசர் : அமித் ஷா பங்கேற்பு: கூட்டணியில் மாற்றம் வராது!

அமித் ஷா பங்கேற்பு: கூட்டணியில் மாற்றம் வராது!மின்னம்பலம் :திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்னும் தலைப்பில் தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திமுக விழாவில் பாஜக பங்கேற்பது குறித்தும் பல்வேறு விவதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

இந்நிலையில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று(ஆகஸ்ட் 25) காலை காங்கிரஸ் சார்பில் சேமிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், “30ஆம் தேதி அகில இந்திய தலைவர்கள் பலர் வருகை தருகின்றனர். வருகின்றவர்கள் அனைவரும் இந்த கூட்டணியில் இருக்கின்றார்கள் என்று அர்த்தம் கிடையாது. கூட்டணி கட்சிகளும் வருகின்றன. கூட்டணியில் இல்லாத கட்சிகளும் வருகின்றன. தோழமை கட்சிகளும் வருகிறார்கள், ஒத்த கருத்துடைய கட்சிகளும், கருத்து வேறுபாடற்ற கட்சிகளும் கூட வருகிறார்கள். அதுபோல அமித் ஷா வருகிறார் என்பதை நான் அழைப்பிதழில் பார்த்தேன். அதற்கு சுப்ரமணிய சாமி வரவில்லை என்று சொல்லியிருக்கிறார் அந்த செய்தியையும் பார்த்தேன்.
அமித் ஷா வருகிறாரா அல்லது வரவில்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவர் வந்தாலும், வராவிட்டாலும் காங்கிரஸுக்கு எந்த கவலையும் இல்லை. எல்லாத் தலைவர்களையும் அழைத்த மாதிரி அவரையும் அழைத்திருப்பார்கள். அமித் ஷா வந்தால் கலைஞரைப் பற்றி புகழ்ந்து பேசிவிட்டு போவார். அதற்கும் கூட்டணிக்கும் சம்மந்தம் கிடையாது. அதனால் திமுக கூட்டணியில் பாஜக சேரும் என்றோ, காங்கிரஸ் விலகும் என்றோ அர்த்தம் கிடையாது” என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக