திங்கள், 16 ஜூலை, 2018

எடப்பாடியை நோக்கி ரெய்டுகள் ... கமிஷன் பத்தலையோ? கொள்ளை கூட்டத்தில் குத்து வெட்டு?

மின்னம்பலம் :“தமிழகத்தை உலுக்கி
வரும் வருமான வரித்துறை ரெய்டுகள்
பற்றி விரிவான தகவல் சேகரித்துவிட்டேன். முதலில் இந்த சிறு ஃபளாஷ் பேக் செய்தியைப் படியுங்கள். ரெய்டு பற்றி விரிவான செய்தி விரைவில்” என்ற குறிப்போடு ஃப்ளாஷ் பேக் வந்தது.
“இது கடந்த 12ஆம் தேதி நமது மின்னம்பலத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணை. அதில் ஒரு பகுதி மட்டும் இங்கே... ‘இரண்டு வாரங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரிய தூதர் ஒருவர் டெல்லியில் அமித்ஷாஜியை சந்தித்துப் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி சொன்னதாக சில விஷயங்களை அவர் அமித்ஷாவிடம்
சொன்னார். வரப் போகும் தேர்தலில் நாம் கூட்டணி சேராமல் இருப்பதுதான் நம் இருவருக்குமே நல்லது. தனித்துப் போட்டியிட்டால் 40 இடங்களிலும் நாங்க ஜெயிக்க முடியாது என்பது தெரியும். ஆனால், கணிசமான இடங்களில் நாங்கள் ஜெயித்துவிடுவோம்.
தமிழகத்தில் எப்படியும் தனித்து நின்றாலும் 25 இடங்களில் எங்களால் ஜெயிக்க முடியும். அப்படி ஜெயித்த பிறகு நாங்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம். இப்போதே நாம கூட்டணி வைத்துதான் ஆக வேண்டும் என நினைத்தால், நீங்களும் ஜெயிக்க முடியாது. நாங்களும் ஜெயிக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் அமித் ஷா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். ‘ இனி நீங்களே கேட்டாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பிஜேபிக்கு விருப்பம் இல்லை. தமிழ்நாட்டு எலெக்‌ஷனை எப்படி சமாளிக்கணும்... எப்படி ஜெயிக்கணும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த மீட்டிங்கிற்கு பிறகுதான் அமித்ஷா சென்னைக்கு வந்தார். தமிழகத்தில் ஆட்சி அமைத்தே தீருவோம்... என்றெல்லாம் கொந்தளித்தார். அமித்ஷா . “ - சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறேன். முழுமையாக படிக்க இந்த லிங்க்கில் கிளிக் பண்ணுங்க...” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
சொன்ன மாதிரியே சில நிமிடங்களில் அடுத்த மெசேஜ்ஜும் வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது. ”அமித் ஷா தமிழகத்துக்கு வந்து, தமிழகமே ஊழலில் முதலிடத்தில் இருப்பதாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் ஃபாலோ அப் தான் இன்று நடந்திருக்கும் ரெய்டு. அதிமுகவுக்கு செக் வைக்க முதல் வேலையாக வருமான வரித் துறையைக் களமிறக்கி இருக்கிறது பிஜேபி.
அருப்புக்கோட்டை கீழ்முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் செய்யாதுரை. இவர் தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவரது நிறுவனம்தான் எஸ்.பி.கே. அந்த நிறுவனத்தில்தான் இன்று வருமான வரித் துறையினர் உள்ளே புகுந்து அலசி ஆராய்ந்தனர்.
இன்று ரெய்டுக்கு உள்ளாகியிருக்கும் காண்ட்ராக்டர் செய்யாதுரை சேராத இடம்தன்னில் சேர்ந்து சிக்கிவிட்டார் என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களில். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரைக்கு இன்னமும் கையெழுத்துக்கூடப் போடத் தெரியாதாம். கோடிகோடியாய் குவித்து வைத்திருக்கும் அவருக்கு கையெழுத்து போடத் தெரியாது என்பதை அறிந்து வருமான வரித்துறை அதிகாரிகளே ஆடிப் போய்விட்டார்களாம். அதிகாரிகளின் வியப்பு இன்னும் தீரவில்லை.
செய்யாதுரை கடுமையான உழைப்பாளி. ஆரம்ப காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டுத் தோல் வியாபரம் செய்தவர். ஆட்டுத் தோல் வியாபாரத்துடன் அதிமுகவிலும் தன்னை இணைத்துக் கொண்டார் செய்யாதுரை. கமுதி ஒன்றிய செயலாளர் பொறுப்பும் இவருக்கு கிடைத்தது. பிறகு சிறு கிராம சாலைகள்,பழுதடைந்த சாலைகள் என ஒப்பந்தம் எடுக்க ஆரம்பித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் என்பதால் ஒப்பந்தம் கிடைப்பதில் சிக்கல் இல்லை. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தன்னுடைய நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரோடு சேர்ந்து எஸ்.ஆர். அன்கோ என்ற பெயரில் சிறு சிறு வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்துச் செய்துவந்திருக்கிறார்கள். தலையில் துண்டை போட்டுக் கொண்டு கான்ட்ராக்ட் வேலை நடக்கும் இடங்களில் இரவு பகல் பார்க்காமல் தங்கி கவனம் எடுத்துச் செய்வாராம். இருவரும் இணைந்து மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
இதெல்லாம் ஏழு வருடங்களுக்கு முன்பு வரைதான். எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில், செய்யாதுரையின் மகன் நாகராஜ் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்திருக்கிறார். தொழிலை டெவலப் செய்யும் பொருட்டு நாகராஜ் நெடுஞ்சாலைத் துறையில் சிலர் மூலமாக எடப்பாடியை அணுகியிருக்கிறார். அதன் பேரில் அப்போது அதிமுகவில் கோலோச்சிக் கொண்டிருந்த சசிகலா குடும்பத் தொடர்பும் நாகராஜுக்கு கிடைத்திருக்கிறது. இதன் பிறகுதான் பெரிய பெரிய கான்ட்ராக்ட் தொழிலுக்குள் முழுமையாக வந்தார் செய்யாதுரை.
அவர் மகன் நாகராஜ் செய்வது பார்ட்னரான ராமகிருஷ்ணனுக்கு ஒத்து வரவில்லை. எனவே அவர் செய்யாதுரையிடம் இருந்து பிரிந்து சுகன்யா என்ற பெயரில் தனியாக தொழில் நடத்த ஆரம்பித்தார். அதன் பின் செய்யாதுரை எஸ்.பி.கே. என்ற கம்பெனி மூலமாக நெடுஞ்சாலைத்துறைக்குள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருக்கிறார்.
அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலமாக கிடைத்த சசிகலாவின் தொடர்பு இன்னொரு பக்கம் ஓ.பன்னீர் செல்வத்தின் தொடர்பு என்று செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனம் கான்ட்ராக்ட்டுகளை அள்ளியது. ஆனால் எடப்பாடி முதல்வர் ஆன பிறகு அவரோடு மட்டுமே நெருக்கத்தை அதிகமாக்கினார் செய்யாதுரை. சென்னை அண்ணாசாலை கான்ட்ராக்ட் முதல் மதுரை பைபாஸ், நெல்லை 500 கோடிக்கு டிவிஷன் சாலைகள் டெண்டர், ராமநாதபுரம், பொள்ளாச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை டெண்டர்கள் எல்லாம் செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கே கிடைத்தது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள சாலைகளை 5 வருடங்களுக்கு பராமரிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் மூலமாக இந்த நிறுவனத்துக்கு லேட்டஸ்டாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் டார்கெட்டாக வைத்துதான் வருமான வரித்துறை செய்யாதுரை வீட்டுக்குள் நுழைந்திருக்கிறது. தமிழகத்தில் ஊழல் நடக்கிறது என அமித் ஷா பேசியதை ஆதாரத்துடன் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அதிரடி ரெய்டு. இது ஆரம்பம்தான்... இனி அடுத்தடுத்து ரெய்டு இருக்கும் என்று ஒருதரப்பில் சொல்கிறார்கள். செய்யாதுரையோடு எடப்பாடியின் மகன், சம்பந்தி ஆகியோருக்கு இருக்கும் தொடர்புகளை எடுத்து வைத்துள்ள வருமான வரித்துறை அடுத்தடுத்த ஆதாரங்களுடன் நேரடியாக எடப்பாடியை நோக்கி செல்வதே மத்திய அரசின் திட்டம் ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், அடுத்த ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்தது.
“இந்த மெகா ரெய்டுக்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அண்மையில் இந்த எஸ்.பி.கே. நிறுவனத்தின் சார்பில் மும்பையில் ஒரு வங்கியில் 250 கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார்கள். அதே வங்கியில் கோவையைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவரும் கடன் கேட்டிருக்கிறார். அவருக்கு பேப்பர்கள் சரியாக இருந்ததால் உடனடியாக கடன் கொடுத்துவிட்டார்கள். ஆனால் எஸ்.பி.கே. நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த பேப்பர்களில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்ததால் கடன் வழங்க மறுத்துவிட்டனர். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் இருக்கும் முரண்பாடுகளைக் கண்டறிய அந்த வங்கிக் கடன் விவகாரமும் ஒருவகையில் உதவியிருக்கிறதாம். அதனால் ரெய்டுக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்” என்று பதிவிட்டது.
இதற்கு ஆச்சரியக் குறியை பதிலாக வெளிப்படுத்திய வாட்ஸ் அப் மீண்டும் ஒரு தகவலை டைப்பிங் செய்தது.
“அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி இருக்கிறார் அல்லவா... அவரது கணவர் சரவண பாண்டி என்பவர் ஒப்பந்ததாரர். சரவண பாண்டியும்,செய்யாதுரையின் கடைசி மகன் பாலசுப்ரமணியனும் நண்பர்களாம். நிர்மலா தேவியும் சரவண பாண்டியும் பல வருடங்களாகவே பிரிந்துதான் இருக்கிறார்கள். நிர்மலா தேவிக்கும் கவர்னர் அலுவலகத்துக்கும் இருக்கும் தொடர்புகளை சரவண பாண்டிதான் பாலசுப்ரமணியனிடம் சொல்லியிருக்கிறார். பாலசுப்ரமணியன் மூலமாக செய்யாதுரைக்கு விஷயம் போக, அவர்தான் ஆட்சி மேலிடத்திடம் எல்லாவற்றையும் கொட்டியிருக்கிறார். அதன் பிறகுதான் நிர்மலா தேவி ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதாவது தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் கவர்னருக்கு செக் வைக்க நிர்மலா தேவியை பலிகடா ஆக்குவது என முடிவெடுத்துதான் ஆடியோவை வெளியிட்டார்கள். இந்த விஷயம் எல்லாம் இப்போது மத்திய அரசுக்கு போயிருக்கிறது. அந்தக் கோபத்தில்தான் செய்யாதுரை நிறுவனத்தின் மீது ரெய்டு நடவடிக்கை பாய்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ, தமிழக அரசு மீது இருக்கும் கோபத்தில்தான் இந்த ரெய்டு நடவடிக்கை என்பது தெளிவாக தெரிகிறது”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக