வெள்ளி, 27 ஜூலை, 2018

ஸ்டாலின் : கலைஞருக்கு சிறப்பான சிகிச்சை; விரைவில் அவரே நன்றி சொல்வார்

THE HINDU TAMIL : தலைவர் கருணாநிதிக்கு சிறப்பான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து அவரது வார்த்தைகளாலே நன்றி சொல்வார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, ஒன்றரை ஆண்டுகளாக பேச முடியாமல் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த 24-ம் தேதி மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. ‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில், வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர் ’ என்று காவேரி மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து  கோபாலபுரத்திலுள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறுகையில்,”ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். உதவிகள் தேவைப்பட்டால் செய்யத் தயாராக இருப்பதாக கூறினேன். கருணாநிதி முழுமையாக குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் திகழ கடவுளைப் பிரார்த்திக்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு  திமுக சார்பில் நன்றி. தலைவர் கருணாநிதிக்கு சிறப்பான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்கள் உதவிகளுக்கு நன்றி. அவர் விரைவில் குணமடைந்து அவரது வார்த்தைகளாலே நன்றி சொல்வார்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக