வெள்ளி, 27 ஜூலை, 2018

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் .. பீகார் குழந்தைகள் காப்பகத்தில்

குழந்தைகள் காப்பகம்: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்!மின்னம்பலம்: பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் குழந்தைகள் காப்பகத்தில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபூர் பகுதியில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் தங்கும் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து சிறுமிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 29 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், பல சிறுமிகளுக்கு கருகலைப்பு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இன்னும் மீதமுள்ள சிறுமிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் வரவுள்ளது.
இதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், அந்த விடுதியில் இதற்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், விடுதியில் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருப்பதாக சிறுமிகள் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நீதிபதி பிரியா ராணி குப்தா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், போலீசார் நேற்று (ஜூலை 26) விடுதியின் உள்ளே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பூட்டியிருந்த ஒரு அறையிலிருந்து பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மனித எலும்புக்கூடுகள்தான் என உறுதி செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விடுதியில் இருந்து இதுவரை எத்தனை சிறுமிகள் வெளியேறி உள்ளனர், உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக