சனி, 28 ஜூலை, 2018

கலைஞர் நேற்று இரவு ஆபத்து கட்டத்தை மீண்டு வந்தார் ... என்ன நடந்தது ?

டிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் என்ன நடந்தது?மின்னம்பலம் : "நேற்று இரவு 10 மணிக்குக் கருணாநிதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நலமாக இருப்பதாகச் சொன்ன பிறகே ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கோபாலபுரத்திலிருந்து கிளம்ப ஆரம்பித்தனர்.
ஆனால், சரியாக நள்ளிரவு 12.10 மணிக்குக் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. நார்மலாக ஒருவருக்கு 120/80 என இருக்க வேண்டும். அதாவது குறைந்த அளவு 80 ஆகவும் அதிகம் 120 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால் கருணாநிதிக்கோ 120/ 20 ஆகக் குறைந்துவிட்டது. ரத்த அழுத்தம் 20 என்பதெல்லாம் மிகவும் ஆபத்தான கட்டம். இதனைக் கண்ட டாக்டர் உடனடியாக அமீனோ ட்ரிப் செலுத்தினார். அதன் பிறகுதான் ரத்த அழுத்தம் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தது.

என்றாலும், ரத்த அழுத்தம் இந்த அளவுக்கு மோசமானதைக் கண்ட மருத்துவர்கள் உடனடியாக காவேரி மருத்துவமனையில் இருக்கும் ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொல்லிவிட்டு ஸ்டாலினுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் சாப்பிட்டு முடித்துவிட்டு உட்கார்ந்தாராம் ஸ்டாலின். உடனே பதறியபடி கோபாலபுரத்துக்கு வந்தார். டாக்டர்களிடம் விசாரித்தார். 'உடனே அட்மிட் பண்ணியாகணும். வீட்டில் வெச்சு எதுவும் செய்ய முடியாது..' எனச் சொல்ல... ஸ்டாலின் கலங்கியபடி தலையாட்ட... மாடியிலிருந்து கலைஞரை விறுவிறுவென ஆம்புலன்ஸுக்குத் தூக்கி வந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்து ஸ்டாலினால் அழுகையை அடக்கவே முடியவில்லை. எவ்வளவோ அழுகையை அடக்க முயன்றும் தோற்றுப்போனார் ஸ்டாலின்.
இன்னொரு பக்கம், கருணாநிதியைத் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்த தொண்டர்கள், ‘தலைவா..’ எனப் பெருங்குரலெடுத்துக் கதற ஆரம்பித்துவிட்டார்கள். ஆம்புலன்ஸில் கனிமொழியும் ஆ.ராசாவும் ஏறிக்கொண்டார்கள். கோபாலபுரத்தில் கூடியிருந்த தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோபாலபுரத்தை விட்டு ஆம்புலன்ஸ் நகரவே சில நிமிடங்கள் ஆனது. அப்போது போலீசாரும் அங்கே இல்லை. இந்நிலையில் தொண்டர்கள் சிலரே கூட்டத்தினரை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழியை ஏற்படுத்தித் தந்தார்கள். ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்து காவேரி மருத்துவமனை வரை ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்ந்து வந்தார்கள் தொண்டர்கள்.
ஆம்புலன்ஸ் போன சில நிமிடங்களுக்கு பிறகுதான் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் காரில் பின் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்தார்கள். ஆனால், மருத்துவர்களிடம் என்ன விபரம் என்பதைக் கேட்கும் தைரியம்கூட இல்லாமல் கலங்கிய கண்களுடன் ஸ்டாலின் காத்திருந்தார். காவேரி மருத்துவமனையில் 4ஆவது மாடியில் உள்ள ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு, ரத்த அழுத்தத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவர ஹெவி டோஸ் மருத்துகளைச் செலுத்தினார்கள் மருத்துவர்கள். நள்ளிரவு 1.30 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு, 2.20 மணிக்குள் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தது. இந்தத் தகவலை மருத்துவர்கள் ஸ்டாலினிடம் சொன்னார்கள். அவருக்கு அருகே நின்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான் முதலில் வெளியே வந்து மீடியாவுக்கு சொன்னார்.
அதை ராசா சொல்லச் சொல்ல கதறியபடி நின்றிருந்த தொண்டர்கள், விசிலடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கும்போதே ‘சந்திர கிரகணத்தை விழுங்கிய சூரியனே... எழுந்து வா’ என்றெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்தது. கருணாநிதிக்கு செலுத்தப்பட்ட மருந்துகளை அவரது உடலும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. ‘சாதாரணமாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தால் மருந்தே செலுத்தினாலும் இயல்பு நிலைக்கு வர சில மணி நேரங்கள் ஆகும். ஆனால், கலைஞருக்கு வில்பவர் அதிகம். இந்த வயதிலும் 40 நிமிடங்களுக்குள் இயல்பு நிலைக்கு வந்த ஒருவரை இப்போதுதான் பார்க்கிறோம்...’ என மருத்துவர்களே வியந்து போய் சொன்னார்களாம். எப்படியோ அபாய கட்டத்தைக் கடந்து வந்துவிட்ட, கலைஞருக்கு சிகிச்சை தொடர்கிறது. பொழுது விடிந்தது. சந்தோஷத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்த தொண்டர்கள் மருத்துவமனையில் இருந்து கலைந்து போனார்கள்!
என்றாலும், ஹெவி டோஸ் மருந்துகளைத் தொடர்ந்து கொடுக்க முடியாது என்பதால் அடுத்து என்ன செய்வது என்று டாக்டர்கள் ஆலோசித்துவருகிறார்கள். லண்டலில் இருக்கும் டாக்டர்களிடமும் ஆலோசனை நடந்துவருகிறது”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக