சனி, 14 ஜூலை, 2018

டி.ராஜேந்தர் : நடிகை ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுக்களுக்கு இயக்குனர்களும் நடிகர்களும் பதில் கூறவேண்டும்

ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக டி.ஆர்மின்னம்பலம்: நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியுள்ள இயக்குநர்களும், நடிகர்களும் அந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாகத் தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது. இனி வரும் தலைமுறை நடிகைகளுக்கு இது போன்று நிகழக்கூடாது என்ற நோக்கில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகிறார் ஸ்ரீ ரெட்டி.
தற்போது தெலுங்கு திரையுலகைத் தாண்டி, தமிழ் திரையுலகிலும் சிலரது பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக இன்று(ஜூலை 14) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “திரைப்படத்தில் 1979ஆம் ஆண்டு எண்ட்ரி ஆனேன்.
ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்தது இல்லை. நடிகைகளுக்கு வசனம் சொல்லி தர வேண்டுமென்றாலும் கூட தொட்டு சொல்லிக் கொடுத்தது கிடையாது. தனிமனித ஒழுக்கத்தோடு வாழ்ந்து வருகிறேன். என் மீது எந்த கிசுகிசுவும் வந்ததில்லை . தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக இப்படி ஒரு அவப்பெயரை ஏற்க முடியவில்லை. சமுதாயத்தில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. திரைப்படத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும், அவர்களிடம் வாய் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக வாய்ப்பு தருவதாகக் கூறி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக