சனி, 14 ஜூலை, 2018

தியேட்டர்களில் வீட்டு தின்பண்டங்களுக்கு அனுமதி மகாராஷ்டிரா ..

தியேட்டர்களில் வீட்டு தின்பண்டங்களுக்கு அனுமதி!மின்னம்பலம்: மகாராஷ்டிராவிலுள்ள மல்டிப்ளெக்ஸ்
தியேட்டர்களில் வீட்டிலிருந்து எடுத்துவரும் தின்பண்டங்களுக்குத் தடையில்லை என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு. அவ்வாறு அனுமதி மறுக்கும் தியேட்டர் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
சினிமா பார்க்கச் செல்லும் ரசிகர்களைக் கவரும் விதமாக, பல நிறுவனங்கள் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களை நாடெங்கும் இயக்கி வருகின்றன. இவற்றில் படம் பார்ப்பது புதுவித அனுபவத்தைத் தருவதாகக் கருதுகின்றனர் ரசிகர்கள். ஒரு படத்தின் வசூல் மட்டுமே தியேட்டருக்குப் பிரதான வருமானம் என்ற நிலை, மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. இவற்றில் விளம்பரம் மற்றும் இதர வழிகள் மூலம் 40 சதவீதத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்படுகிறது. நொறுக்குத்தீனி அல்லது தின்பண்டங்கள் விற்பனை அதற்குக் காரணமாக இருக்கிறது.
பெரும்பாலான மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் வீட்டில் இருந்து கொண்டுவரும் நொறுக்குத்தீனிகளுக்கு அனுமதி கிடையாது. தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு தியேட்டர் வளாகத்திலேயே வாங்க வேண்டுமென்ற கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஏற்காதவர்கள் சினிமா பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.
இதனை எதிர்த்து, சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிக்கெட் விலையை விட மல்டிப்ளெக்ஸ்களில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகளின் விலை அதிகமிருப்பதாகவும், அதனைக் கட்டாயம் வாங்கும் வகையில் வீட்டிலிருந்து கொண்டுவரும் தின்பண்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மகாராஷ்டிர மாநில அரசு அங்குள்ள மல்டிப்ளெக்ஸ்களில் அதிக விலையில் தின்பண்டங்கள் விற்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வியை எழுப்பியது உயர் நீதிமன்றம். விலையை ஒழுங்குபடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
தற்போது மகாராஷ்டிர மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. நேற்று (ஜூலை 13) இந்த விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் பேசினார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்சி தனஞ்ஜெய் முண்டே. மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க மகாராஷ்டிரா அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். வீட்டிலிருந்து கொண்டுவரும் தின்பண்டங்களை அனுமதிக்காமல், உணவுப்பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைகொடுத்து வாங்குமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு அம்மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் ரவீந்திர சவான் பதிலளித்தார். அப்போது, ஒரே பொருளுக்கு இரண்டுவிதமான விலைகள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறினார். “வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் எம்ஆர்பி விலையில் உணவுப்பொருட்களை மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் விற்பனை செய்ய வேண்டும். இதுகுறித்த செயல்திட்டத்தை, அடுத்த ஆறு வாரங்களில் சட்டமன்றத்தில் மாநில அரசு கொண்டுவரும். இதன் மூலமாக, அதிக விலையில் தின்பண்டங்கள் விற்பது முடிவுக்கு வரும். அது மட்டுமல்லாமல், வீட்டில் இருந்து மக்கள் தின்பண்டங்கள் கொண்டுவர எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அதனை மீறி தியேட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் புனே நகரிலுள்ள ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் அதிக விலையில் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்படுவதாக பிரச்சினை எழுந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகியை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சித் தொண்டர்கள் தாக்கினர். இந்த சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், எம்என்எஸ் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை நேரில் சந்தித்தனர் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் அதிபர்கள். அப்போது, மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் சரியான விலையில் விற்கப்படும் என்று உறுதியளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக