புதன், 18 ஜூலை, 2018

மருத்துவத்தில் பழந்தமிழர்கள்: கீழடியில் ஆதாரம் !

மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழந்தமிழர்கள்: கீழடியில் ஆதாரம் கண்டெடுப்பு!tamil.news18.com : கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ல் மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தமிழக தொல்லியல்துறை மூலம் 4ம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் 19ம் தேதி 55 லட்ச ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் 26 குழிகள் தோண்டப்பட்டு அதில் ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். 3 மாதமாக நடந்த அகழாய்வில் 4 ஆயிரத்து 500 பொருட்கள் கண்டறியப்பட்டன. எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், உறைகிணறு, சமையல் அடுப்பு, தங்க காதணி, அரசு முத்திரை, மண் சக்கரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தாலும் தமிழக தொல்லியல் துறை இதுவரை எந்த பொருட்களையும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் காண்பிக்கவில்லை.


கடந்த பத்து நாட்கள் நடந்த அகழாய்வில் மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள், மருத்துவ குறிப்பு எழுதி வைக்கப்பட்ட ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மருந்து கிண்ணங்கள் அனைத்தும் புனல் போன்ற அமைப்பை கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருசில பொருட்களின் அடியில் கருமை நிறம் காணப்படுவதால் மருந்துகளை அனலில் வைத்து அவர்கள் தயாரித்துள்ளதும் கண்டுபிடிகப்பட்டுள்ளது.

பல மண்பாண்ட பொருட்கள் விரிசல்களுடன் இருந்தாலும் உடையாமல் காணப்படுவதாகவும், மண் கிண்ணங்கள் அனைத்தும் கீழ்பகுதி கூர்மையாக இருப்பதால் மருந்துகளை அரைக்கும் போது கீழ்பகுதி வழியாக மருந்துகள் சேகரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்விற்கு அனுப்ப உள்ளதாகவும் அதன்பின்தான் இவற்றின் காலம், பயன்பாடு தெரியவரும் எனவும் தெரிவித்தனர். மத்திய தொல்லியல் துறையினர் கண்டெடுத்த பொருட்களை பொதுமக்களிடம் காண்பித்து விளக்கமளித்தனர் என்றும், அதே போல தமிழக தொல்லியல் துறையினரும் இதுவரை கண்டெடுத்த பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 18, 2018

5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!
மேட்டூர் அணை
news18
Updated: July 18, 2018, 7:43 PM IST
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்ததை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டுர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை அடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாசனத்துக்காக மேட்டூர் அணையை நாளை காலை 9 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து கபினி, கே,ஆர்.எஸ். அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 40,000 கன அடியாக உள்ளது. 65 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 62.78 அடியாக உள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 40,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 18.2 டி.எம்.சியாக உள்ளது. மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 122.08 அடியாக இருக்கிறது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 71,353 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு சுமார் 81,000 கன அடியிலிருந்து 61,561 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 45.73 டி.எம்.சியாக உள்ளது.

மொத்தத்தில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மேற்புறத்தில் பல வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  அணையிலிருந்து பல வண்ணங்களில் காவிரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த விளக்குகள் பிரதிபலிப்பதால், நீர் பல வண்ணங்களாகக் காட்சியளிக்கின்றன. இதனால், இரவு நேரத்தில் கண்கவர் வண்ணங்களில் காவிரி பாய்ந்தோடும் காட்சி, அனைவரையும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விளைவாக ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 1 லட்சத்து 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 18, 2018

ரூ.20 நோட்டை காண்பித்து டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

ரூ.20 நோட்டை காண்பித்து டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
டிடிவி தினகரன்
news18
Updated: July 18, 2018, 6:39 PM IST
தனது சொந்த தொகுதிக்கு சென்ற டிடிவி தினகரன் கார் மீது ஒரு தரப்பினர் கல்வீசிய நிலையில், டிடிவி தரப்பினரும் பதிலுக்கு கல்வீசியதால் அந்த பகுதி சில மணி நேரம் பதற்றத்துடன் காணப்பட்டது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 20 ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களுக்கு டோக்கனாக வழங்கியதாகவும், ஆனால் உறுதி அளித்தபடி வெற்றி பெற்ற பின் பணம் தரவில்லை என்றும் அத்தொகுதியை சேர்ந்த சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை டிடிவி தினகரன் மறுத்துவரும் நிலையில், ஏற்கெனவே 2 முறை தண்டையார்பேட்டை சென்ற தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தண்டையார்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்பதாக இருந்தது. நிகழ்ச்சியை தடுக்க சிலர் முயற்சித்து வருவதாக டிடிவி தினகரன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காசிமேடு, வைத்தியநாதர் பாலம் போன்ற இடங்களில் சிறு சிறு குழுக்களாக ஒரு தரப்பினர் குழுமியிருந்தனர். பின்னர் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடம் அருகே மொத்தமாக கூடினர். அதில் ஒருசிலர் 20 ரூபாய் நோட்டுகளை கையில் பிடித்தபடி நின்றனர். அவர்களை, எம்எல்ஏ அலுவலகத்துக்கு அருகில் வர விடாமல் போலீசார் தடுத்து வந்தனர்.

இந்நிலையில், தினகரனின் கார் வருவதை பார்த்த அவர்கள், காரின் மீது கற்களை வீசினர். அந்த கற்கள் தினகரனின் கார் மீது விழாமல் மற்றொரு காரின் மீது விழுந்தன. இந்நிலையில், விழுந்த கற்களை எடுத்து தினகரன் தரப்பினர் எதிர்தரப்பு மீது வீசத் தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே போலீசார் மேலும் குவிக்கப்பட்டு, எதிர் தரப்பில் இருந்தவர்களை கலைத்து அந்த சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து எம்எல்ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இதுபோன்று பிரச்னையை மதுசூதனன் ஆட்களை வைத்து செய்வதாகவும், ஆர்கே நகர் தொகுதிக்கு எந்த நலத் திட்டமும் செய்யக் கூடாது என சதி நடை பெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இருதரப்பும் கல்வீசிக் கொண்டதில் காவல் ஆய்வாளர் பிரேமா காயமடைந்தார். போராட்டம் நடத்தியவர்களில் சிலரும் காயமடைந்தனர். டிடிவி வருகையை எதிர்த்து நடந்த இந்த நிகழ்வுகளால் அந்தப் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல்பதற்றம் காணப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த செல்போன் காட்சிகளை சேகரித்து, தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: July 18, 2018




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக