புதன், 4 ஜூலை, 2018

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு போலீஸ் மிரட்டல். கக்கூஸ் . மற்றும் ஒருத்தரும் வரல


ஆவணப்பட இயக்குநருக்கு மிரட்டல்: தமுஎகச கண்டனம்!மின்னம்பலம் : ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி வீட்டிற்குள் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்ததற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கக்கூஸ் ஆவணப்படம் மூலம் மலம் அள்ளும் தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகிற மக்களின் துயரங்களைப் பதிவு செய்தவர் திவ்யபாரதி. தற்போது ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரளா மற்றும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து மீனவர்களை மீட்கத் தவறிய அரசு பற்றியும் தென்னிந்தியக் கடற்கரையில் கொண்டுவரப்படும் திட்டங்களின் பின்னுள்ள அரசியல் பற்றியும் ‘ஒருத்தரும் வரேல’ என்ற ஆவணப்படத்தை இயக்கிவருகிறார். கடந்த வாரம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருந்தார். இது குறித்து நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

ஜூன் 2ஆம் தேதி சேலம் க்யூ பிராஞ்ச் போலீஸார் என்று சொல்லிக்கொண்ட சிலர் திவ்யபாரதியின் தந்தையிடம் சென்று படம் பற்றிய தகவல்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர். தனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துவிட்ட நிலையில் நேற்று (ஜூன் 3) அதிகாலை 5 மணி முதலே பெண் காவலர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட போலீஸார் திவ்யபாரதியின் வீட்டைச் சுற்றிவளைத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவரது "ஒருத்தரும் வரேல" படத்தின் வீடியோ எங்கிருக்கிறது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் இருந்த அவரது கணவர் கோபாலை திவ்யா எங்கே எனக் கேட்டு மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து திவ்யபாரதியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த போலீஸார், நேற்று பிற்பகல் அவர் நீதிமன்றம் சென்றிருந்தபோது அங்கும் வந்து திவ்யபாரதியின் வண்டிச்சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு எங்களுடன் வா விசாரிக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்களுடனும் போலீஸார் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதற்கு தமுஎகச கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “காவல் துறையினரின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின்படி இயங்கும் ஒருவரது கலைச் செயல்பாட்டு உரிமையில் இதுபோல அராஜகமான முறையில் போலீஸார் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. உரிய காரணங்கள் சொல்லாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வீட்டைச் சோதனையிடுவதும் விசாரணைக்கு ஒருவரை அழைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்ட வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் விசாரணைக்கு அழைப்பதும், நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி நடப்பதும் சட்டமீறலாகும்.
கருத்துச் சுதந்திரத்தைக் கைகொள்ளவிடாமல், அச்சுறுத்தி முடக்கும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கருத்துரிமை மீதும் கலைச் செயல்பாட்டின்மீதும் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் காவல் துறையின் இந்த அராஜகச் செயலைக் கண்டிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக