புதன், 25 ஜூலை, 2018

குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்.. குரோஷியாவின் மறுபக்கம் வெளிவருகிறது

soodram .com :(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம் மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம் கற்க, நிறைய உண்டென,வெற்றியில் மகிழ்ந்திருப்போம். உண்மைகளைக் கொஞ்சமும் தேடி அறிய,ஆவலாய் இல்லாத சமூகம், தனக்கான புதைகுழியைத் தானே தோண்டுகிறது.
கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் முடிந்துவிட்டது. பேச்செல்லாம் குரோஷிய அணி பற்றியும் அனைவரையும் கட்டியணைத்த குரோஷிய ஜனாதிபதி பற்றியுமாய் இருக்கிறது.
விளையாட்டில் வெற்றிகள் கொண்டாடப்பட வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இன்று வெற்றிகள், தோல்விகள் கொண்டாடப்படுவதன் அடிப்படைகள், விளையாட்டின் தரம், திறமை என்பது பற்றியதல்ல. அதனாலேயே இக்கட்டுரையை எழுத நேர்ந்தது.

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்குத் தெரிவுசெய்யப்பட்ட நான்கு அணிகளில், ஐரோப்பிய மய்ய இரசிகர்களின் விருப்புக்குரிய அணியாக குரோஷியா இருந்தது. இதைக் குறிப்பாக, உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றாத, ஏற்கெனவே வெளியேறிய நாடுகளில் காணக் கிடைத்தது.
குறிப்பாக, இங்கிலாந்து, பெல்ஜிய அணிகள் எதிர்பார்ப்பை மீறி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றும் கூட, அவை விருப்புக்குரிய அணிகளாக இருக்கவில்லை. அதேவேளை, உலகக்கிண்ணப் போட்டிகளில் மிகவும் திறமையான அணியாக அறியப்பட்ட பிரான்ஸ் அணிகூட, விருப்புக்குரியதாக இருக்கவில்லை. இது மிகவும் ஆச்சரியமான விடயமாகப் பட்டது.
கால்பந்தாட்ட இரசிகர்களின் தெரிவாக, குரோஷியா இருந்தமைக்கான காரணம், விளையாட்டுத் திறனா, விளையாட்டுப் பாணியா அல்லது வேறெதுவாக இருக்க முடியும் என்ற வினா துளைத்துக் கொண்டே இருந்தது. இதனால், சக ஐரோப்பிய நண்பர்களுடன் இதுகுறித்து விவாதித்து, இதற்கான காரணத்தை அறிந்து கொள்வது என்று முடிவு செய்தோம்.
இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் விசாரித்துப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், மிகவும் அதிர்ச்சியான தகவல் எமக்குக் கிடைத்தது.
கால்பந்தாட்டம் சாராத ஒரு காரணியே, இத்தெரிவுக்கான காரணமாகும். அரையிறுதிக்குத் தெரிவான நான்கு அணிகளில், கறுப்பர்கள் எவரும் இல்லாத, தூய வெள்ளையர்களைக் கொண்ட ஒரே அணி குரோஷியா ஆகும்.
இதனாலேயே ஐரோப்பிய கால்பந்து இரசிகர்களின் விருப்புக்குரிய அணியாக குரோஷியா திகழ்ந்தது. உலகக்கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின், 25 வீரர்களில் 17 பேர் பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல.
குரோஷியா, வெள்ளை நிறவெறிக்குப் பெயர் போன நாடென்ற உண்மை பலருக்குத் தெரியாது. உலகிலேயே ஆக்ரோசமான நிறவெளி கொண்ட, கால்பந்தாட்ட இரசிகர்களைக் கொண்ட நாடு குரோஷியா.
கால்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் போது, குரோஷியாவின் முதற்போட்டி, நைஜீரிய அணிக்கு எதிராக இருந்தது. இப்போட்டிக்கு முன்னதாக, குரோஷிய இரசிகர்கள், மைதானத்துக்கு வெளியே, வெள்ளை நிறவெறிப் பதாதைகளையும் கறுப்பு நைஜீரியர்களுக்கு எதிரான பாசிச முழக்கங்களையும் எழுப்பினர்.
போட்டிகளின் போது, இரசிகர்களின் நிறவெறி நடவடிக்கைகளுக்கு, அணியைத் தண்டிக்கவோ, போட்டிகளில் இருந்து வெளியேற்றவோ சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு (பீபா) அதிகாரம் உண்டு. இருந்தபோதும், பீபா இதைக் கண்டும் காணாமல் விட்டது. இதை இப்போது பீபாவே ஒத்துக் கொண்டுள்ளது.
கடந்தாண்டு, குரோஷிய கால்பந்தாட்ட அணி தொடர்பில், மூன்று நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. நோர்வேக்கு எதிரான போட்டியில், குரோஷிய இரசிகர்கள் நிறவெறிக் கோஷங்களை எழுப்பினர். இதனால் சில இரசிகர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதனையடுத்துக் கோபமடைந்த குரோஷிய இரசிகர்கள், இத்தாலியுடனான அடுத்த போட்டிக்குத் தயார் செய்யப்பட்டிருந்த மைதானத்தில், ‘சுவெஸ்டிக்கா’வை முழு மைதானத்திலும் வரைந்திருந்தனர்.
கடந்த ஒக்டோபரில், குரோஷியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி, பார்வையாளர்கள் இன்றி, மூடிய அரங்கில் நடந்தது. அதேபோல், குரோஷியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான முதல் இரண்டு தகுதிகாண் போட்டிகளும் கூட, நிறவெறிக் கூச்சல்களால் பார்வையாளர்கள் இன்றியே நடாத்தப்பட்டது.
குரோஷிய இரசிகர்கள் நிறவெறிக்கூச்சல்களுக்கும் கொடிகளுக்கும் பெயர் போனவர்கள். 2016ஆம் ஆண்டு, யூரோக் கிண்ணப் போட்டிகளின் போது, எதிரணியின் கறுப்பின வீரர்கள் மீது, ‘குரங்குகள்’ எனத் தொடர்ச்சியாக கூக்குரலிட்டுக் குழப்பம் விளைவித்தனர். கடந்த சில ஆண்டுகளாக, குரோஷிய கால்பந்தாட்டச் சம்மேளனம், நிறவெறிக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு இடம் கொடுப்பதாகப் பலமுறை பீபாவால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு, குரோஷிய வீரர் ஜோசெப் சிமியுனிக் (Josip Simunic) போட்டியின் போது, இரசிகர்களை நிறவெறிக் கோஷங்களை எழுப்பத் தூண்டியமை நீரூபிக்கப்பட்டு, 10 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக, குரோஷிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் டெவோர் சூக்கர், சிமியுனிக்கை உதவிப் பயிற்றுவிப்பாளராக நியமித்து, சிமியுனிக்கின் செயலை நியாயப்படுத்தினார். சூக்கர், 1998ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் போது, தங்கப்பாதணி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இறுதிப்போட்டிக்கு முன்னதாக, குரோஷிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர், “இறுதிப்போட்டியில் குரோஷியா, பிரான்ஸுடன் விளையாடவில்லை; ஆபிரிக்கர்களுக்கு எதிராவே விளையாடுகின்றது” என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இவை குரோஷியாவில் புரையோடிப் போயுள்ள நிறவெறிக்குச் சில உதாரணங்கள். இவை, இன்றைய குரோஷிய சமூகத்தின் பகுதியாக மாறியுள்ளன.
இன்னொரு வகையில், இன்று ஐரோப்பாவில் தீவிரமாகச் செல்வாக்குப் பெற்றுவரும், தீவிர வலதுசாரி நிறவெறிப் பாசிசத்தின் குணங்குறிகளே இவையாகும்.
இதை, ஆழமாக நோக்குவதற்கு, குரோஷியாவின் வரலாற்றை நோக்குதல் வேண்டும்.
யூகோஸ்லாவியா துண்டுதுண்டானதன் விளைவால் உருவான நாடுகளில் ஒன்றுதான் குரோஷியா. யூகோஸ்லாவியா, ‘ஸ்லாவ்’ தேசிய இனங்கள் பலவற்றின் ஒன்றிணைவால், உருவான நாடு ஆகும். இங்கே எவ்விதமான தேசிய இன ஒடுக்கலும் இருந்ததில்லை; இங்கே வாழ்ந்துவந்த தேசிய இனங்களிடையே போட்டி இருந்தது; இடையிடையே பகைமை உணர்வுகளும் இருந்தன. ஆனால், அது மோதல்களுக்கோ, பிரிவினைக்கோ 1990கள் வரை இட்டுச் செல்லவில்லை.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. மிகமோசமான பொருளாதார நெருக்கடி இருந்து வந்த 1980 களில், பிரிவினைக்கான இயக்கங்கள் உருப்பெறவில்லை. உண்மையில், 1945 முதலாக, சோவியத் யூனியனுடன் யூகோஸ்லாவியா முரண்பட்டு நின்றது. அதன்வழி, அணிசேரா நாடுகளின் கூட்டை உருவாக்குவதில், யூகோஸ்லாவியாவின் பங்கு பெரிது.
மதத்தாலும் மொழிப் பிரிவுகளாலும் இனப்பிரிவுகளாலும் வேறுபட்ட யூகோஸ்லாவியத் தேசிய இனங்களைப் பிரிப்பதில் திருச்சபைக்கும், ஜேர்மனிக்கும் பயன் இருந்தது.
ஆனாலும், யூகோஸ்லாவியாவில் தன்னுடைய படைகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்காவுக்கு, பொஸ்னியா – ஹெர்ட்ஸ் கொவினா (பொஸ்னியா என்றே பலராலும் அழைக்கப்படுவது) ஒரு வாய்ப்பான இடமாயிற்று. அங்கே பிரிவினை தூண்டிவிடப்பட்டது.
ஜேர்மனிய, வத்திக்கான் ஊக்குவிப்புடன் ஸ்லொவ்னியாவும், குரோஷியாவும் யூகோஸ்லாவிய சமஷ்டியினின்று பிரிந்துபோக முற்பட்டபோது, யூகோஸ்லாவியக் குடியரசுத் தலைவரான ஸ்லபொடான் மிலஷோவிச், சேர்பியப் பேரினவாதியாகத் தன்னை அடையாளப்படுத்தவில்லை.
மாறாக, யூகோஸ்லாவியா தொடர்ந்தும் ஒன்றுபட்ட நாடாக இருக்கும் தேவையையே வற்புறுத்தினார். குரோஷியப் பிரிவினையின் போது, மேலைநாட்டுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்த அதன் தலைவர் பிரெஞ்சோ துஜ்மன், பின்னர் சேர்பியர்களுக்கு எதிரான இனத் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.
அதுமட்டுமன்றிக் குரோஷியாவின் க்றயினா மாகாணத்திலிருந்து, இரண்டரை இலட்சம் சேர்பியர்கள் ‘இனச் சுத்திகரிப்புக்கு’ உள்ளாகினர்.
தனிநாடாக முன்னரே, இனத்துவேசமும் வெள்ளை நிறவெறியும் குரோஷியாவின் அரசியல் அடிப்படைகளாகின.
1989ஆம் ஆண்டு, துஜ்மனால் உருவாக்கப்பட்ட குரோஷிய ஜனநாயக யூனியன் என்ற கட்சியின் அடிப்படை, இனத்துவேசமும் வெள்ளை நிறவெறியுமேயாகும்.
மிலஷோவிச், பொஸ்னியாவின் இரத்தக் களரிக்குப் பங்களித்தவரல்ல; ஆனால், யூகோஸ்லாவிய யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட, முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், மிலஷோவிச்சை ‘மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தை’ இழைத்தார் என முடிவு செய்தது.
எனினும், வெளி உதவியுடன் சேர்பியர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் குரோஷிய இனத் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம் பற்றி, இன்னமும் பேசப்படுவதில்லை.
2002ஆம் ஆண்டு, இத்தீர்ப்பாயத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற கார்ளா டி பொன்டே, துஜ்மனைக் குற்றவாளியாகக் கண்டதோடு, அவர் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் மேற்கொண்டிருப்பதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். தனக்கு முன்னர் இத்தீர்ப்பாயத்தில் இருந்தவர்கள் இவ்விடயத்தை கவனிக்காமல் விட்டது ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார்.
ஆனால், 1999ஆம் ஆண்டே, துஜ்மன் இறந்துவிட்டமையால், அவருக்குத் தண்டனை அளிக்க முடியவில்லை. இதில் கவனிப்புக்குரிய விடயம் யாதெனில், முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்தத் தீர்பாயத்தின் விசாரணைகள், மிலஷோவிச்சைக் குற்றவாளியாகக் காண்பதிலேயே குறியாக இருந்தன. போரில் நிகழ்த்தப்பட்ட ஏனைய குற்றங்கள், கண்டும் காணாமல் விடப்பட்டன.
இந்தத் தீர்ப்பாயம் சர்வதேச நீதி முறைகளுக்கு முரணாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கிகாரம் இன்றியும் உருவாக்கப்பட்டுள்ளதால், மிலஷோவிச் இதனை ஏற்க மறுத்தார்; தனக்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்க மறுத்தார். தனது வழக்கில் தானே வாதாடினார். இறுதிவரை அவரது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவர் மர்மமான முறையில், சிறை வைக்கப்பட்டிருந்த அறையில் இறந்து கிடந்தார்.
இவை இப்போதும் சொல்லப்படாத செய்திகள். மிலஷோவிச்சைப் போர்க்குற்றவாளியாகக் குறிப்போர், அவரது குற்றம், இறுதிவரை நிரூபிக்கப்படவில்லை என்ற உண்மையை மறைக்கிறார்கள்.
குரோஷியா, தனிநாடாக உருவானதன் பின்னர், அதன் அடையாள உருவாக்கத்தில் பாசிச சின்னங்கள் முக்கிய பங்கு வகித்தன. அவற்றைத் தேசிய அடையாளமாக்குவதில் குரோஷியாவின் முதல் ஜனாதிபதி துஜ்மன் பிரதான பங்கு வகித்தார்.
தனது, குரோஷிய ஜனநாயக யூனியன் கட்சியின் அடித்தளத்தை, தேசத்தின் அடித்தளமாக்குவதன் மூலம், என்றென்றைக்குமான அதிகாரத்துக்கான பாதையை அவர் உருவாக்கினார். பாசிசத்தின் மோசமான விளைவுகளை, ஐரோப்பா அனுபவித்திருந்த போதும், துஜ்மனின் பாசிச அடையாளப்படுத்தல்கள் உலகக் கவனம் பெறவில்லை.
இதேவேளை, கடந்த ஒரு தசாப்த காலமாக, குரோஷியாவில் பாசிச அமைப்பான உஸ்டாசே (Ustashe) மீள்உருவாக்கம் பெற்று, சமூகத்தில் செல்வாக்கு மிக்க சக்தியாக, வளர்ந்து வருகிறது.
உஸ்டாசே 1929 முதல் 1945 வரை குரோஷியாவில் இயங்கிய அதிதீவிர வெள்ளை நிறவெறி, இனவெறி ஆகியவற்றை உடைய பாசிச அமைப்பாகும். இது இரண்டாம் உலகப் போர் காலத்தில் 600,000 பேரை (இதில் யூதர்கள், சேர்பியர்கள் மற்றும் ரோமாக்கள் (நாடோடிகள்) அடங்கும்) கொலை செய்த அமைப்பாகும்.
இவ்வமைப்பின் மீள் எழுச்சி, குரோஷிய அரசியலுடன் பின்னிப் பிணைந்தது. குறிப்பாக, குரோஷிய ஜனநாயக யூனியன் கட்சிக்கு, இவ்வமைப்பின் இருப்பு, அரசியல் ரீதியாகத் தேவையானது.
அதேவேளை, பெரும்பாலான குரோஷிய கால்பந்தாட்ட இரசிகர்கள், இந்த உஸ்டாசே அமைப்பின் ஆதரவாளர்கள். தற்போதைய குரோஷிய ஜனாதிபதி கொலின்டா கிராபர், கித்தரோவிச் துஜ்மனின் வழித்தடத்தில் வந்தவராவார். குரோஷிய ஜனநாயக யூனியன் கட்சியின் உறுப்பினர்.
குரோஷிய கால்ப்பந்தாட்ட அணியுடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொள்வதன் மூலம், தேசியவாத நாட்டுப்பற்றாளராகத் தன்னைக் காட்ட அவர் முனைகிறார். இதேவேளை, சமூக பொருளாதார நெருக்கடிகளால், குரோஷியா அவதிப்படுகிறது.
இந்நிலையில், இவ்வுலகக்கிண்ணத்தை தனது மடைமாற்றும் கருவியாகப் பயன்படுத்துகிறார். இதற்கு ஆதரவு தராதவர்கள், பொருளாதார நெருக்கடி குறித்துக் கேள்வி எழுப்புபவர்களைத் தேசத்துரோகிகள் என்றும் நாட்டின் மீது பற்றில்லாதவர்கள் என்றும் அடையாளப்படுத்துகிறார்.
இம்முறை, குரோஷியா விளையாடிய அனைத்துப் போட்டிகளின் போது, பாசிசப் பாடல்கள் பாடப்பட்டன. அவை, குரோஷிய அணியின் இளைப்பாறும் அறையிலும் தொடர்ந்தன. அங்கு விஜயம் செய்து, வீரர்களைப் பாராட்டி, பாடல்களில் பங்கெடுத்ததன் மூலம், தனது தேசப்பற்றையும் பாசிச நிறவெறி விருப்பையும் ஜனாதிபதி கொலின்டா உறுதிசெய்தார்.
நவபாசிசம் நோக்கிய நகர்வு, குரோஷியாக்கு மட்டும் உரியதல்ல. ஐரோப்பிய நவபாசிசக் குழுக்கள், ஐரோப்பிய இடதுசாரிகளின் தோல்வி விளைவித்த அரசியல் வெற்றிடத்தை வாய்ப்பாக்கி, பொருளாதார நெருக்கடிச் சுமையைத் தாங்கும் கீழ்-நடுத்தர வகுப்பினரிடையிலும், தொழிலாளி வர்க்கத்தினரிடையிலும் ஜனரஞ்சக சுலோகங்களால் இனவாதத்தைத் தூண்டுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஐரோப்பாவில், பாசிச வெறுப்பு வலுவாக உள்ளதால், வெளிப்படையான பாசிச அல்லது பாசிச ஆதிக்கமுள்ள ஓர் ஆட்சி, விரைவில் அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பு பலவீனமாக இருந்தது.
ஆனால், உலகப் பொருளாதார நெருக்கடியும் அதைச் சார்ந்த ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையீனமும் ஐரோப்பாவில் நவபாசிசக் குழுக்கள் செல்வாக்குப் பெறக் காரணமாயுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தேர்தல்களில் அடுத்தடுத்து நவபாசிசக் கட்சிகள் காணும் முன்னேற்றங்களால், மிரளும் ஐரேப்பிய அரசாங்கங்கள், சுயமாகவோ அன்றியோ, குடிவரவும் குடியேறிகளின் உரிமைகளும் பற்றி, நவபாசிச இனவாத நிலைப்பாடுகளையே தாமும் எடுக்கின்றனர்.
குரோஷியா இன்று அடையாளப்படுத்தி நிற்பது, வெள்ளை நிறவெறியின் புதிய அத்தியாயத்தையாகும். இதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். நிறவெறி விளையாட்டுகளையும் விட்டுவைப்பதில்லை என்பதை இவ்வுலக்கிண்ணப் போட்டிகள் காட்டியுள்ளன.
அதேவேளை, விளையாட்டு எவ்வாறு நிறவெறியினதும் பாசிச அடையாளப்படுத்தல்களினதும் கருவியாகிறது என்பதை குரோஷியா அணி காட்டி நின்றது. இது உண்மையில், அதிவலது தீவிரவாதத்தில் மூழ்கிப்போன சமூகத்தின் வெளிப்பாடு என்பதை மறக்கவியலாது.
விளையாட்டை வெறுமனே விளையாட்டாகப் பாருங்கள் என்று சொல்பவர்களுக்கு, மார்டின் நெய்மோலரின் கவிதையை நினைவுபடுத்துவதைத் தவிர, வேறெதையும் செய்யவியலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக