திங்கள், 16 ஜூலை, 2018

ஓபிஎஸ் மீது சொத்துக் குவிப்பு புகார்; விசாரணைக்கு உத்தரவிட: உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

ஆர்.எஸ்.பாரதி, ஓபிஎஸ்
tamil.thehindu.com/ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
“துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர். 2011 தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016-ல் 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதுதொடர்பாக மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது ஊழியருக்கு எதிராகப் புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தவேண்டிய கடமை உள்ளதால், ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’.
இவ்வாறு தனது மனுவில் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக