புதன், 25 ஜூலை, 2018

ஸ்டாலின் ; ராணுவ ஹெலிகாப்டர் பன்னீர்செல்வத்தின் குடும்ப தேவைக்கு ... நிர்மலாவும் பன்னீரும் பதவி விலகவேண்டும்

ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்ற வராத ராணுவ ஹெலிகாப்டர்கள் பன்னீரின் தம்பிக்கு உருகிறதே?
tamilthehindu : ராணுவ ஹெலிகாப்டர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் தேவைக்காக வழங்கப்பட்டது எப்படி என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். இதற்குக் காரணம், ஓ.பி.எஸ் தம்பியின் சிகிச்சைக்கு ரகசியமாக ராணுவ ஹெலிகாப்டர் கொடுத்ததை வெளியில் சொல்லி விட்டதால் தான் என்று சொல்லப்படுகிறதே?
இந்த டெல்லி பயணத்தை நான் அரசியல் ரீதியாக மேற்கொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறேன் என ஓபிஎஸ் கூறியிருந்தார். தன்னுடைய உடன்பிறந்த சகோதரருக்கு ஹெலிகாப்டர் தந்து உதவிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

 ராணுவ ஹெலிகாப்டர் தனிப்பட்ட ஒருவரின் தேவைக்காக எப்படி வழங்கப்பட்டது என்பது மர்மமாக இருக்கின்றது. இந்தச் செய்திகள் அனைத்தும் இப்போது தான் வெளிவந்திருக்கிறது. ஆகவே, முறைகேடாக அதனைப் பயன்படுத்திய ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும், அதனை அனுப்பி வைத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவி விலக  வேண்டுமென்பது தான் என்னுடைய எண்ணம்.
ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறதே?
வழக்குப் பதிவு செய்தது உறுதியாகிவிட்டது. இன்றைக்கு ஓபிஎஸ், நாளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்குத்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஆளுநரை சந்தித்து, ஏழு வருடங்களில் இவர்கள் என்னென்ன கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்பதைப் பட்டியிலிட்டு கொடுத்து வந்திருக்கிறோம். ஏற்கெனவே, திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி மூலமாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு இது நீதிமன்றத்திலும் பதிவாகி இருக்கிறது. உண்மை வெளிவரப்போகிறது. விரைவில் இவர்களை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்போவது மட்டுமில்லை, சிறையில் இருக்கக்கூடிய சூழ்நிலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-க்கு மட்டுமில்லை அந்த அமைச்சரவையில் இருக்கும் அனைவருக்கும் வரப்போகிறது.
உங்கள் புகார் மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் திமுக அடுத்தகட்டமாக என்ன செய்யும்?
ஓபிஎஸ் மீதான புகார் இன்றைக்கு நீதிமன்றத்தில் வந்து பதிவாகி விட்டது. அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழல்கள் முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் நாங்கள் நீதிமன்றம் போக இருக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயார் என எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு மட்டுமல்ல, ஊழலுக்கும், நாட்டில் முழு மூச்சோடு கொள்ளையடிக்கவும் தயாராகி விட்டார். ஏனெனில், ஆட்சி பறிபோகப் போகிறது, பதவியில் இருந்து தூக்கப் போகிறார்கள். அதனால் தான் திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்றால் திமுக அதனை ஏற்குமா?
தேர்தல் வருகிறபோது அதற்கான பதில் தெளிவாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக