புதன், 25 ஜூலை, 2018

கேரளாவில் 2 போலீஸாருக்கு மரண தண்டனை: விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை அடித்துக் கொன்ற வழக்கில் தீர்ப்பு

tamilthehindu :காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட உதயகுமாரின் தாய் பிரபாவதி அம்மாள் ..படம்: மணிஷா கேரளாவில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த பிரபாவதி அம்மாவின் மகன் உதயகுமார், (வயது 24) அங்குள்ள கடை ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். 2005-ம் ஆண்டு ஓணம் பண்டிகை சமயத்தில் தனது நண்பர் சுரேஷ் குமாருடன், அவர் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில், இருவரையும் கோட்டை காவல்நிலைய போலீஸார் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது உதயகுமார் கையில் 4 ஆயிரம் ரூபாய் இருந்ததால் அவர் திருடியதாக கூறி போலீஸார் ‘லாக்-அப்பில்’ வைத்து அடித்து உதைத்தனர். ஆனால் அவர் அந்த பணத்தை ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் வழங்கிய போனஸ் பணம் என்று கூறினார்.

ஆனால் போலீஸார் இதனை நம்ப மறுத்து அவரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.
தனது மகன் உதயகுமாரை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக கூறி பிரபாவதி அம்மாள் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் இந்த வழக்கை போலீஸார் உரியமுறையில் விசாரிக்கவில்லை. மாறாக புகாருக்கு ஆளான போலீஸாருக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆவணங்கள் திருத்தப்பட்டன. வழக்கு நீர்த்துபோக செய்யப்பட்டது.
இந்த விவகாரம் கேரளாவில் பெரிய அளவில் ஊடகங்களிலும், பொதுவெளி சமூகத்திலும் கவனத்தை ஈர்த்தது. பார்வதி அம்மாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தனர். காவல்துறையினரை கண்டித்து போராட்டங்களும் நடந்தன.
இதையடுத்து வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட
காவல்துறை அதிகாரிகள் எஸ்.ஐ ஜிதுகுமார் மற்றும் மூத்த காவலர் ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி நாசர் உத்தரவிட்டார். மேலும் அவர் கூறுகையில் ‘‘சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே குற்றம் செய்துள்ளது இந்த வழக்கில் உறுதியாகியுள்ளது. போலீஸ் காவலில் அப்பாவி ஒருவர் கொலை செய்யப்பட்டதை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே குற்றவாளிகளுக்கு அதிபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுகிறது’’ எனக் கூறினார்.
மேலும் வழக்கில் ஆவணங்களை அழித்து குற்றவாளிகளை காப்பற்ற முயன்றதாக முன்னாள் போலீஸ் எஸ்பிக்கள் ஹரிதாஸ் மற்றும் சாபு மற்றும் டிஎஸ்பி அஜித் குமார் ஆகியோருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீர்ப்பு வெளியானதையொட்டி உதயகுமாரின் தாய் பிரபாவதி அம்மா நீதிமன்றம் வந்திருந்தார். தீர்ப்பை கேட்டு அவர் கண்கலங்கினார்.
இதுகுறித்து பிரபாவதி அம்மா கூறுகையில் ‘‘இந்த வழக்கை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்த ஊடகங்களுக்கு எனது நன்றி. அந்த இரு காவலர்களும், 13 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகனை ஓணம் பண்டிகையின்போது அடித்துக் கொன்றார்கள்.
தற்போது அவர்கள் சிறையில் ஓணம் கொண்டாடுவார்கள். அவர்களை எந்த நீதிமன்றமும் விடுவிக்காது. அப்பாவியை கொலை செய்தனர். ஒரு தாயின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றியுள்ளார்’’ எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக