ஞாயிறு, 1 ஜூலை, 2018

கறுப்புப் பணத்தை மக்களுக்கு அளிக்கும் நைஜீரிய அரசு!

கறுப்புப் பணத்தை மக்களுக்கு அளிக்கும் நைஜீரிய அரசு!மின்னம்பலம் :  சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு பணத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை நைஜீரிய அரசு செயல்படுத்தவுள்ளது.
நைஜீரியாவில் 1990ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தவர் ராணுவ தளபதி சானி அபாஷா. தான் கொள்ளையடித்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் அபாஷா பதுக்கியிருந்தார். தற்போது இதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தைத் திருப்பி ஒப்படைப்பதற்கு சுவிஸ் வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஜூலை மாதம் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணத்தை 14 டாலர் வீதம் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க நைஜீரிய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக நைஜீரியாவில் உள்ள 36 மாநிலங்களில் 19 மாநில மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளை மீட்க உள்ளதாக 2015 தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிபர் முகமது புஹாரி அறிவித்தார். தற்போது மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே, முகமது புஹாரியின் நடவடிக்கை அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலில் வாக்காளர்களைக் கவரவே வழிவகுக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று இந்தியப் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதி அளித்திருந்தார்.
அதற்கான நடவடிக்கை ஏதும் இந்திய அரசால் எடுக்கப்படாத நிலையில், தற்போது சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக