ஞாயிறு, 1 ஜூலை, 2018

டெல்லி .. ஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் ... கொலையா? தற்கொலையா?


BBC :டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது. வட டெல்லியில் உள்ள சத்நகர் புராரியில் 4A தெருவிற்குள் நுழைந்த போது, மூன்றடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அங்கு தற்போது ஒரு செல்ல பிராணியான நாய் மட்டும் உயிருடன் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை இந்த வீட்டில் 11 பேர் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
பாட்டியா குடும்பம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட அந்த வீட்டில், 10 பேர் தூக்கிட்ட நிலையில் இருந்தனர். மேலும் ஒரு வயதான பெண்ணின் சடலம் தரையில் இருந்தது.
மொத்தம் ஏழு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள். இதில் 3 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
ராஜஸ்தானை சேர்ந்த இந்த குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக புராரியில் வாழ்ந்து வந்தனர்.75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியான நாராயண், அவரது இரண்டு மகன்கள் பூப்பி (46) மற்றும் லலித் (42), அவர்களது மனைவிகளான சவிதா (42) மற்றும் டீனா (38) ஆகியோர் இறந்து கிடந்தனர்.
பூப்பியின் இரண்டு மகள்கள், ஒரு மகன் மற்றும் லலித்தின் 12 வயதான மகனும் இறந்துள்ளனர்.
மேலும், நாராயணின் மகளும், பேத்தி ப்ரியங்காவும் (30) அந்த வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
சமீபத்தில் ஜூன் 17ஆம் தேதியன்று ப்ரியங்காவிற்கு நிச்சயதார்தம் நடைபெற்றது.

ஆகஸ்டில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
"முதல்கட்ட விசாரணையில் எந்த தகவலையும் தெளிவாக கூற முடியாது" என்று மத்திய சரக இணை ஆணையர் ராஜேஷ் குராணா தெரிவித்தார். விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என தற்போது கூற இயலாது என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது என்ன?
இவர்கள் இருந்த வீட்டின் தரை தளத்தில் இரண்டு கடைகள் உள்ளன. ஒன்று பூப்பி நடத்தி வந்த மளிகை கடை. மற்றொன்று லலித்தின் ப்ளைவுட் கடை.
பாட்டியா குடும்பம் உயிரிழந்ததை முதலில் கண்டுபிடித்தது அண்டைவீட்டுக்காரரான குர்ச்சரண் சிங்.
குர்ச்சரணின் மனைவி பாட்டியா குடும்பத்தினரின் கடையில்தான் தினமும் பால் வாங்குவார். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி ஆகியும், கடை திறக்காததால் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துவருமாறு மனைவி கூறியதையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.
"நான் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது, கதவுகள் எல்லாம் திறந்து கிடந்தன. அனைவரின் உடல்களும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்களின் கைகள் பின்னாலிருந்து கட்டப்பட்டிருந்தது. அத்தனை பேரும் தூக்கிட்டு இறந்த காட்சியை பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 


உடனே வீட்டிற்கு சென்று என் மனைவியிடம் கூறினேன். அவள் அங்கே போய் பார்க்க வேண்டும் என்றாள். நான் அவளை தடுத்து விட்டேன்" என்று விவரிக்கிறார் குர்ச்சரண் சிங்.இதனை தொடர்ந்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார் குர்ச்சரண்.
பாட்டியா குடும்பம் நல்ல மாதிரியானவர்கள் என்று கூறும் அவர், பொருள் வாங்கியபின், பிறகு பணம் தந்தால் போதும் என்று அவர் கூறுவார்கள் என்று தெரிவித்தார்.
பாட்டியா குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர் நவ்நீத் பத்ரா. பாட்டியா குடும்பம் மிகவும் நல்லமாதிரியான குடும்பம் என்றும் எப்போதும் வழிபாட்டில் ஈடுபடுவார்கள் என்றும் இவர் கூறுகிறார்.
நாராயணின் மேலும் ஒரு மகள் திருமணமாகி பானிபட்டில் வாழ்ந்து வருவதாகவும், ஒரு மூத்த மகன் ராஜஸ்தானில் இருப்பதாகவும் நவ்நீத் தெரிவித்தார். 

;மத நம்பிக்கை கொண்ட குடும்பம்
உத்தர பிரதேசம், பிகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து வந்த மக்கள் புராரி பகுதியில் குடியேறியுள்ளனர்.
போட்டித் தேர்வுகள் எழுதுவதற்காக பல மாணவர்களும் அங்கு தங்கி படித்து வந்தனர். பாட்டியா குடும்பத்தினரின் வீட்டிற்கு வெளியே ஒரு தனியார் நூலகம் ஒன்று இருந்தது.
பாட்டியா குடும்பத்தின் அண்டை வீட்டுக்காரரான டி.பி.ஷர்மா கூறுகையில், "அவர்களுக்கு யாருடனும் பகைமை இருக்கும் என்று நான் கேள்விப்பட்டதில்லை" என்றார்.
"நல்ல குடும்பம். பாட்டியா குடும்பம் யாருடனும் சண்டையிட்டு கூட நாங்கள் பார்த்ததில்லை. குடும்ப பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் அவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்" என்றும் ஷர்மா கூறினார்.

;பாட்டியா குடும்பத்தினர் மிகுந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதே பகுதியில் வசிக்கும் பூசாரியான முல்சந்த் ஷர்மா கூறுகையில், தான் அக்குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்ததாகவும் அவர்கள் செல்வ செழிப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது அனைத்து உடல்களும் உடற்கூறாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்று காவல்துறை விசாரணை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கைக்கு பிறகே தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக