ஞாயிறு, 22 ஜூலை, 2018

BBC : “சென்னை வராததற்கு காரணம் என்ன?” - சுவிட்சர்லாந்து வீராங்கனையின் தந்தை பேட்டி

சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்
போட்டியில், சுவிட்சர்லாந்து அணியின் முதல்நிலை வீராங்கனை ஏம்பர் அலின்க்ஸ் "இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு" என்பதால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறியதாக பல ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டு வந்த நிலையில் அது வெறும் வதந்தி என ஏம்பர் அலின்க் ஸின் தந்தை பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்
இந்த செய்தியை, தற்போது சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் பாஸ்கல் புரினிடம் உறுதி செய்து நேற்று (சனிக்கிழமை) பிபிசி தமிழும் செய்தி வெளியிட்டிருந்தது.
அப்போது, "எங்களது நாட்டின் சார்பில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என்று ஆறு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளோம். ஆனால், நாட்டின் முதல்நிலை வீராங்கனையான ஏம்பர் அலின்க்ஸ் பாதுகாப்பு காரணங்களால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது வருத்தமான ஒன்று" என்று மற்ற செய்தி ஊடகங்களிடம் தான் கூறியதை பாஸ்கல் புரின் ஒப்புக்கொண்டார். "ஏம்பர் அலின்க்ஸ் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு மிகவும் ஆவலுடன்தான் இருந்தார். ஆனால், இந்தியாவில் பெண்களுக்கெதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களால், அவரது தாயார் தங்களது மகளை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அனுப்ப முடியாது என்று உறுதிபட கூறியதால்தான் அவர் பங்கேற்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

இந்த விடயம், ஊடகங்களில் மட்டுமல்லாது, சமூக இணைதளங்களிலும் பெரும் விவாதத்திற்குள்ளானது.</>இதுகுறித்து, தமிழகத்தின் முதல் சர்வதேச பெண் கால்பந்து நடுவரான ரூபா தேவியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இது மிகவும் அவமானகரமான செய்தி. நமது நாட்டில் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டில் ஒரு சர்வதேச போட்டியை நடத்துவது என்பது கடினமான விடயமாக இருக்கும்போது, அதில் பெண்களுக்கான பாதுகாப்பை காரணம் காட்டி ஒரு முன்னணி வீராங்கனை பங்கேற்காதது சர்வதேச அளவில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையே காட்டுகிறது" என்று கூறியிருந்தார்.
பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி
அதனைத் தொடர்ந்து, போட்டியில் பங்கேற்காத சுவிட்சர்லாந்து வீராங்கனை ஏம்பர் அலின்க்ஸை தொடர்பு கொண்டு இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்கும், மேலதிக தகவல்களை பெறுவதற்கும் பிபிசி தமிழ் முயற்சித்தது.
இந்நிலையில், இந்திய ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து ஏம்பர் அலின்க்ஸ் மற்றும் அவரது தந்தை இகர் ஆகியோர் பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அதில், "இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எனது மகள் ஏம்பர் அலின்க்ஸுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் அவரின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது மற்றும் நாங்கள் இதனால் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம்" என்று அவரது தந்தை இகர் கூறினார்.
"சென்னையில் நடக்கும் உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் ஏம்பர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் தவறானவை" என்று கூறிய இகர், "ஏம்பர் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டாமென பெற்றோர்களாகிய நாங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே முடிவு எடுத்துவிட்டோம். அதற்கு, இரண்டு காரணங்கள் உள்ளன."

e>"முதல் காரணம், 16 வயதேயாகும் ஏம்பருக்கு இதுபோன்ற பல போட்டிகளில் பங்கேற்பதற்கு எண்ணற்ற வாய்ப்புகளுள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையிலான போட்டியில் பங்கேற்க செய்து ஏம்பருக்கு உடல்ரீதியாக அழுத்தமளிக்க வேண்டாமென நினைத்தோம்.
"இரண்டாவதாக, நாங்கள் நீண்டகாலம் விடுப்பெடுத்து குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு இதுவே சரியான வாய்ப்பு என்று நாங்கள் நினைத்தோம். எனவே, தற்போது ஸ்குவாஷ்க்கு பெயர்போன எகிப்துக்கு சுற்றுலா வந்திருக்கிறோம். எங்களுடன் ஏம்பர் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி" என்று அவர் மேலும் கூறினார்.எனவே, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று நாங்கள் கூறியதாக பரப்பப்படும் வதந்திகளை நிறுத்துங்கள் என்ற இகர், "வயது, குடும்ப சுற்றுலா போன்றவற்றால்தான் இம்முறை ஏம்பரால் இந்தியாவுக்கு வர இயவில்லை. வருங்காலத்தில் வேறு காரணங்கள் இருந்தால் இந்தியாவுக்கு வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்று மேலும் கூறினார்.
தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து ஸ்குவாஷ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "16 வயதான சுவிட்சர்லாந்தின் முதல்நிலை வீராங்கனை ஏம்பர் அலின்க்ஸ் சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்காதது குறித்து பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் பொய்யானவை. இது ஏம்பர், அவரது பெற்றோர் மற்றும் சுவிஸ் ஸ்குவாஷ் அமைப்பு மீது தவறான எண்ணத்தை உண்டாக்கியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.e>"சுவிஸ் ஸ்குவாஷ் அமைப்பு பாதுகாப்பு மற்றும் அரசியல் அபாயத்தின் அடிப்படையில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் அனைத்தையும் எப்போதும் பரிசோதிக்கிறது. இந்திய ஸ்குவாஷ் சங்கம் நடத்தும் இந்த போட்டியில் பங்கேற்பு நாடுகளின் பாதுகாப்பு இதுவரை கேள்விக்கு உட்படுத்தப்படாததை தொடர்ந்து நாங்கள் எங்களது அணியினரை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம்."
"ஆனால், இந்த போட்டியில் ஏம்பர் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணம் வருத்தத்திற்குரியதாக இருந்தாலும், வீரர் ஒருவரை போட்டிக்கு அனுப்பும்போது அவரது எண்ணம், குடும்பத்தினரின் முடிவு மற்றும் மற்ற விடயங்களை கருத்திற்கொள்வது மிகவும் அவசியமானது."
எனவே, வயது மற்றும் குடும்ப சுற்றுலா ஆகியவற்றின் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்காத ஏம்பர் மீது தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துவதுடன், சமூக வலைதளங்களில் தாக்குவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்வதாக சுவிஸ் ஸ்குவாஷ் அமைப்பு தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக