ஞாயிறு, 22 ஜூலை, 2018

7 மாத குழந்தை பலாத்காரம் 19 வயது குற்றவாளிக்கு மரண தண்டனை,, ராஜஸ்தான் மாநில புதிய சட்டப்படி ..

tamilthehindu : குழந்தையைப் பலாத்காரம் செய்த 19 வயது குற்றவாளிக்கு
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய சட்டத்தின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டில் ராஜஸ்தானில் 7 மாத குழந்தையைப் பலாத்காரம் செய்த 19 வயது குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ராஜஸ்தானில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி முதல் முறையாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த 2-வது மாநிலம் ராஜஸ்தான் என்பது குறிப்பிடத் தக்கது. முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் இதுபோல் ஒரு புதிய சட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வந்தது.

ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் வசிக்கும் தம்பதியின் பெண் குழந்தையை, அவர்களது உறவினர் ஒருவர் கவனித்து வந்தார். கடந்த மே மாதம் 9-ம் தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த போது குழந்தையைக் காணவில்லை. எங்கே குழந்தை என்று கேட்ட போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பையன் தூக்கிச் சென்றதாக அந்த உறவினர் கூறியிருக்கிறார்.
குழந்தையைத் தேடிய போது, வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் குழந்தை அழுதபடி இருந்தது. காயங்களுடன் இருந்த குழந்தையை ஆல்வார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு 20 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், 7 மாதக் குழந்தையைப் பலாத்காரம் செய்த 19 வயது குற்றவாளியைப் போலீஸார் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் குழந்தையைப் பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் குல்தீப் ஜெயின் கூறும்போது, ‘‘நாட்டிலேயே குழந்தையைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இது மூன்றாவதாகும். ராஜஸ் தானில் முதல் முறை. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு 13 முறை விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக