சனி, 21 ஜூலை, 2018

50 ஆண்டுகளுக்குப் பின் இமயமலை பனியில் விபத்தில் சிக்கிய இந்திய விமானம், விமானி உடல் கண்டுபிடிப்பு

tamilthehindu : விபத்தில் சிக்கிய விமானத்தின் துருப்பிடித்த பாகங்கள்   -  
படம்: ஏஎன்ஐ; புதுடெல்லி, இமாச்சலப் பிரதேசத்தில், தாஹா பனிமலையில் கடந்த 50ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் உடைந்த பாகங்களும், விமானியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இமயமலைப்பகுதியில் உள்ள லாஹுல் பள்ளத்தாக்கில் தாக்கா பனிப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இந்திய மலையேற்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ் ராவத் என்பவர் தலைமையில் 11 பேர் இந்தச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 

பனிப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உடைந்த விமானத்தின் பகுதிகளும், அதன் அருகே மிகவும் அழுகிப்போன ஆண் ஒருவரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ராணுவத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்துக்கு வந்து உடைந்த பாகங்களையும், உடலையும் கைப்பற்றினர்.
விமானத்தின் உடைந்த பாகம்
 அது குறித்து ராஜீவ் ராவத் கூறுகையில், ''நாங்கள் தாஹா பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது, உடைந்த விமானத்தின் பகுதிகள் தென்பட்டன. அது குறித்து ராணுவத்தினருக்குத் தகவல் அனுப்பினோம். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் அது கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-12 ரக விமானத்தின் உடைந்த பாகங்களாகும்.
இந்த விமானத்தில் அப்போது,98 பயணிகள் விமானிகள் உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 102 பயணிகள் பயணித்தனர். சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு இந்த விமானம் பறந்தபோது அப்போது மோசமான காலநிலையில் விபத்தில் சிக்கியது.
அதன்பின் நீண்ட ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2003-ம் ஆண்டு விமானத்தின் உடைந்த பாகங்களை தாஹா பகுதியில் கைப்பற்றினர். அதன்பின் இப்போது இந்த விமானத்தின் பாகங்களும் படைவீரர் ஒருவரின் உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
முதல் முறையாகக் கடந்த 2003-ம் ஆண்டு எபிவி மலையேற்ற அமைப்பினர் இந்தப் பகுதியில் உடைந்த விமானத்தின் பகுதிகளைக் கண்டுபிடித்தனர். அதன்பின் கடந்த 14 ஆண்டுகளில் அவ்வப்போது சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தன.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் 5 பேரின் உடல்களை மட்டுமே கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக