செவ்வாய், 24 ஜூலை, 2018

மோடியின் கோர முகம் – பகுதி 2.. சவுக்கு

கரண் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்; அன்டோல்ட் ஸ்டோரி’ (Devils Advocate: The Untold Story) என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.
கரண் தாப்பர்
2002 மார்ச்சில் நான் எழுதிய கட்டுரையில் இருந்தது இதுதான்:
“நரேந்திர மோடியை எனக்குத் தெரியும் என நினைத்திருந்தேன். அண்மைக் காலம் வரை அவரை நான் மதித்தேன். அவரது ஆலோசனகளுக்காக நன்றி கொண்டிருந்தேன். 2000இல் ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் (அகில இந்தியத் தலைவர்) தொடர்பான பேட்டிக்கு நான் தயாரானபோது, அவர் அந்த அமைப்பைப் புரிந்துகொள்ள உதவியதோடு, அதன் பலவீனத்தைக் காண என கண்களைத் திறந்துவைத்தார். மிகுந்த சார்பற்ற தன்மையுடன், அந்த அமைப்பின் செயல்பாட்டின் குணாதிசயமாக மாறிவிட்ட சராசரித்தன்மையை அறியவைத்தார்.
மோடி அம்பலப்படுத்திய ஆர்எஸ்எஸ்ஸின் பலவீனங்கள்
“ஆர்எஸ்எஸ் அதன் பொருத்தத்தை இழந்துவருவது குறித்து சுதர்சன்ஜியிடம் கேளுங்கள். இது இனியும் தனிச் சிறப்பின் அடையாளமாக திகழவில்லை. இன்று அது எல்லாவற்றிலும் சராசரித்தன்மையே பெற்றிருக்கிறது” இப்படித்தான் அவர் உரையாடலைத் துவக்கினார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என நான் கேட்டேன். நிச்சயம் இந்தக் கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மோடி ஒரு ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர் (அந்த இயக்கத்தில் உறுப்பினர்களை இப்படித்தான் குறிப்பிடுவார்கள்). அவர் சங்க அமைப்பைப் பாதுகாக்கும் விதத்தில் பேசுவார் என எதிர்பார்த்தேன். விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
“ஆர்எஸ்எஸ் 20,000 பள்ளிகள் மற்றும் 50 நாளிதழ்கள்களை நடத்துகிறது. ஆனால் இவை எதுவுமே தேசிய அளவில் தனித்தன்மை பெறவில்லை. ஆர்எஸ்எஸ் சமூக சேவைக்காகத் தன்னை அர்பணித்துக்கொண்டுள்ளது. ஆனால் சாய்பாபா, ராதா சோமி, பாண்டுரங்க அதுவாலேவின் ஸ்வாதயா குழு ஆகியவை சமூக சேவையில் நன்கு அறியப்பட்டதாக விளங்குகின்றன. ஆர்எஸ்எஸ் ஒரு பொருட்டல்ல.”
நான் அதிர்ந்தேன். மோடி விமர்சன நோக்கில் பேசியது மட்டும் அல்ல காரணம். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குள் இருந்தவந்த எதிர்மறையான கருத்தை எடுத்துக் கொடுக்கிறார். இது ஒன்றும் வழக்கமான, வெற்று இடதுசாரி விமர்சனம் அல்ல. இது வலதுசாரிகளுக்குள் இருந்து எழுந்துள்ள அதிருப்தி. இது வேறுபட்டது.
“ஆர்எஸ்எஸ் ஷாகா வருகைப் பதிவு பற்றிக் கேளுங்கள்,” என மோடி தொடர்ந்தார். அவரது உற்சாகத்தை என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு பத்திரிகையாளர் போல நடந்துகொண்டார். எனக்கு அது பிடித்திருந்தது. அவரது நேர்மையை வியந்தேன். அவரது ஆலோசனைகளுக்கு நன்றி உணர்வு கொண்டேன்.
“கேரளாவைப் பாருங்கள். ஆர்எஸ்எஸ்ஸின் பெரிய பிரிவு அங்கு இருக்கிறது ஆனால், அந்த மாநிலத்தில் அதன் தாக்கம் சொற்பமானது. மாறாக ஆர்எஸ்எஸ் வெறுக்கும் எல்லாம் அந்த மாநிலத்தில் தழைக்கின்றன. கம்யூனிஸ்ட்கள், தேவாலயம், உள்நாட்டு நிதியைச் சார்ந்திராமல் வெளிநாட்டு நிதியைச் சார்ந்திருக்கும் பொருளாதாரம் என எல்லாமே அங்கு அதிகம். இப்படித்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தன் பொருத்தப்பாட்டினை இழந்திருக்கிறது.
“சுதர்சன்ஜியிடம் இது பற்றி எல்லாம் கேளுங்கள். அப்போது என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகளைத் தொடுவீர்கள். அது ஒரு அருமையான பேட்டியாக இருக்கும்.”
சுதர்சனைப் பேட்டி எடுத்தபோது இந்த ஆலோசனையைப் பின்பற்றத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் மடத்தனமாக நான் மரபார்ந்த முறையில் பேட்டியைத் துவக்கினேன். இந்து ராஷ்டிரம், அரசியல் சாசனம், பாஜக கூட்டணிக் கட்சிகள், வாஜ்பாயி அரசு செயல்பாடு பற்றி எல்லாம் கேட்டேன். அதற்குள் நேர்ம முடிந்துவிட்டது. மோடியின் கேள்விகளைக் கேட்க முடியவில்லை.
பலர் அந்தப் பேட்டியைப் பாராட்டினாலும், பத்திரிகைகள் அதற்குக் கருணை காட்டினாலும், இன்னும் சிறப்பாகப் பேட்டி எடுத்திருக்கலாம் என்பதை நான் அறிவேன். இது வேறு விதமாக இருந்திருக்க வேண்டும். இது அசலானதாகவும் இருந்திருக்கலாம். மோடியின் கேள்விகளை எழுப்ப நான் வழி கண்டுபிடித்திருந்தால் அப்படி இருந்திருக்கும்.
மோடியின் இரு வேறு பிம்பங்கள்
கேள்விகள் கேட்கும் உறுதி படைத்தவராக, சவால்விடும் ஆற்றல் கொண்டவராக, அரசியல் பிளவுகளைக் கடந்து தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய பெருந்தன்மையும் அதற்கான பார்வையும் கொண்டவராக மோடியை நான் அந்த நேரத்தில் நினைத்தேன். அவரைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாக நினைத்துக்கொண்டேன். நிச்சயம் அவரைப் பற்றி எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அதை அறிய வேண்டும் எனத் தோன்றவில்லை. நான் பார்த்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் வியக்கவும் செய்தேன். அது எனக்குப் போதுமானதாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக நான் நினைத்தது தவறு. இல்லை, அப்படிச் சொல்வது சரியல்ல. இது முழுவதும் நேர்மையானது அல்ல. தோன்றுகிறது எனச் சொல்வது, சந்தேகம் அல்லது தவறான புரிதலைக் குறிக்கிறது. தவறாக நினைத்தது என்பது தரம்சங்கடத்தைத் தவிர்ப்பதாக அமைகிறது. உண்மை என்னவெனில், நான் நினைத்தது படுமோசமான தவறாக அமைந்தது.
குஜராத்தில் அண்மைக் கால மதக் கலவரங்களைக் கையாண்ட விதம் தொடர்பாக எழும் நரேந்திர மோடியின் பிம்பம் வேறு விதமாக இருந்தது. அந்த மோடி, குறுகிய மனம் கொண்டவராக, பிரிவினைவாதியாக, பரிவில்லாதவராக, தனது வரம்புகளின் கைதிகளாக இருந்தார்.
அவரது அனுபவின்மை, ஏன் அவரது மடத்தனமான தனிப்பட்ட பெருமிதம், ராணுவத்தை முன்கூட்டியே அழைக்காததற்குக் காரணமாக இருக்கலாம் என ஒப்புக்கொள்கிறேன். சூழ்நிலையை வேறு விதமாக, ஆனால், செயல்திறனோடு கையாள முடியும் என அவர் நினைத்திருக்கலாம். கடுமை காட்டும் அதே சமயம், புரிதலையும் வெளிப்படுத்த வேண்டும் என நினைத்திருக்கலாம். எப்படியும், உங்கள் ஆதரவாளர்கள் மீதே, உங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்பவர்கள் மீதே, நடவடிக்கை எடுப்பது எளிதல்ல. இது துயரமானது என்றாலும்கூட, இத்தகைய தவறுகள் மனித இயல்புதான். இவை அடிக்கடி நிகழ்கின்றன.
ஆனால், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று அவர் கூறினார். கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதைக் குறிப்பால் உணர்த்தி ஈஷான் ஜாப்ரி கொலையை விளக்க முயற்சித்தார். அகமாதாபாத்தில் பலியானவர்களைவிட, கோத்ராவில் பலியானவர்களுக்கு இரு மடங்குத் தொகையை அளித்தார். இந்தச் செயல்களால் தார்மிக ரீதியில் அவர் சிறுத்துப்போகிறார். ஒரு முஸ்லிம் உயிரைவிட இந்து உயிரை உயர்வாக நினைப்பது, படுகொலைகளைப் புரிந்துகொள்ளக்கூடியவை எனப் பேசுவது ஆகியவை நினைத்துப் பார்க்க முடியாதவை மட்டும் அல்ல. அவை வெறுப்பின் வெளிப்பாடுகள்.
நான் அறிந்ததாக நினைத்த மனிதர், ஒரு தலைவர். குறுகிய உணர்வுகளில் இருந்து மேலெழும், எதிரிகளை நண்பர்களாக மாற்றும், பத்திரிகையாளர்களிடம் இருந்து போற்றுதலைப் பெறும் ஆளுமை. பிறருக்கு வழிகாட்டிப் பின்பற்ற வைக்கும் ஆற்றலும், அறிவும் கொண்டவர். ஆனால், கடந்த வாரம் நான் கண்டறிந்த மனிதர் வெறும் சாதாரணப் பிறவிதான். காழ்ப்புணர்ச்சி, மோசமான பழிவாங்கும் உணர்வு, இரட்டை நிலை, நாவினால் சுடும் பழக்கம் ஆகிய தன்மைகளைக் கொண்டவர்.
முதல் மோடி முதல்வராகத் தகுதி உடையவர். இரண்டாவது நபர் பதவி நீக்கப்படத் தகுதியானவர்.
– இதுதான் நான் எழுதியது.
இன்று, 17 ஆண்டுகளுக்கு முன் எழுதியதை, அதற்குப் பின் நடந்தவற்றுடன் பொருத்திப்பார்த்து வாசிக்கும்போது, இது எப்படி பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியும் எனப் புரிகிறது. நான் வெளிப்படையாக, தீவிரமாக விமர்சனம் செய்திருக்கிறேன். எங்கு அடித்தால் அதிகம் வலிக்குமோ அங்கு தாக்கியிருக்கிறேன்.
மோடியுடன் நிகழ்ந்த சந்திப்பு
இந்தக் கட்டுரை எழுதப்பட்டு, ஐந்து ஆண்டுகள் கழித்து, 2007இல் நரேந்திர மோடியுடனான எனது பேட்டி நிகழ்ந்தது. அவரைத் தொடர்புகொள்ள அருண் ஜேட்லியின் உதவியை நாடியிருந்தேன் என்று நினைவு. அவரது தலையீடே குஜராத் முதல்வரைப் பேட்டி கொடுக்க ஒப்புக்கொள்ள வைத்தது என நினைக்கிறேன்.
அகமதாபத்தில் அக்டோபர் மாத நண்பகலில் பேட்டி ஏற்பாடானது. நான் காலை விமானத்தில் வந்திறங்கினேன். அன்று காலைதான் பெனாசீர் பூட்டோ பல ஆண்டுகள் வெளிநாட்டு வாசத்தில் இருந்து கராச்சி திரும்பியிருந்தார். அவரது பேரணியைத் தகர்த்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். அகமாதாபாத்தை விமானம் தொட்டபோது, அன்று பிறபகல் நடக்க இருந்த பேட்டியைவிட, பாகிஸ்தானின் நடந்த இந்தச் சம்பவமே என் மனதில் தாக்கம் செலுத்தியிருந்தது.
நான் காரில் ஏறினேன். விமான நிலைய வட்டத்திற்குள் இருந்த போது என் போன் ஒலித்தது. “கரண்ஜி, பஹுன்ச் கயே?” என்னை வரவேற்பதற்காக நரேந்திர மோடிதான் அழைத்திருந்தார். அவர் ஊடகத்தை எத்தனை கவனமாகக் கையாள்கிறார் என்பதற்கான முதல் அறிகுறியாக அது அமைந்தது.
“நம்முடைய பேட்டி 4 மணிக்கு தான். ஆனால் முன்னதாக வாருங்கள் பேசிக்கொண்டிருக்கலாம்” என்றார்.
இவை எல்லாம், 2002இல் நான் எழுதிய பத்தியை அவர் படிக்கவில்லை அல்லது மறந்துவிட்டார் என என்னை நினைக்க வைத்தன. அவர் என்னை இதமாக வரவேற்று, பழைய நண்பர்போலப் பேசிக்கொண்டிருந்தார். பேட்டியில் என்ன விஷயங்கள் வரும் என்பது பற்றி நாங்கள் பேசவில்லை. அதற்கு பதிலாக அரட்டை அடித்து, துணுக்குகள் சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.
இவை என்னை நிராயுதபாணியாக ஆக்குவதற்கான உத்தியா என்று தெரியவில்லை. புத்திசாலி அரசியல் தலைவர்கள் இத்தகைய உத்தியைக் கையாள்வதுண்டு. ஆனால், நிச்சயமாக என்னிடம் இருந்த எல்லா சந்தேகங்களும் உடனே மறைந்துபோயின.
அரை மணிநேரம் கழித்து அவர் காமிரா முன் அமர்ந்தார். அவர் வெளிர் மஞ்சள் நிற குர்தா அணிந்திருந்தார். அவரது தலைமுடி புதிதாகத் திருத்தப்பட்டிருந்தது.
என்னுடைய முதல் சில கேள்விகள் 2002 பற்றி அமைந்திருந்தன. என்னுடைய நோக்கம், இந்த சிக்கலான விஷயத்தை முதலில் கவனித்துவிட்டு பின்னர் மற்ற விஷயங்களுக்கு செல்லலாம் என்பதாக இருந்தது. அவற்றை எழுப்பாமல் இருந்திருப்பது, சமரசப் போக்காக அல்லது கோழைத்தனமாக அமைந்திருக்கும். அதே நேரத்தில் அவற்றை மட்டுமே வைத்துப் பேட்டியை அமைக்கவும் விரும்பவில்லை. எனவே அவற்றை எழுப்பிவிட்டு, விரைவாக அவற்றிலிருந்து விலகிச் செல்லவும் முடிவு செய்திருந்தேன்.
“திரு. மோடி அவர்களே, உங்களை பற்றிப் பேசுவதிலிருந்து துவங்லாம்,” இப்படித்தான் ஆரம்பித்தேன். “நீங்கள் குஜராத் முதல்வராக இருந்த ஆறு ஆண்டு காலத்தில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. இந்தியா டுடே இதழ் இருமுறை உங்களை மிகவும் செயல்திறன் வாய்ந்த முதல்வராக அறிவித்துள்ளது. இருப்பினும், இவற்றை மீறி மக்கள் இன்னமும், படுகொலைகள் செய்தவர் என்றும், முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர் என்றும் உங்கள் முகத்துக்கு நேராகக் கூறுகின்றனர். இத்தகைய மாறுபட்ட எதிர்வினைகளால் உங்களுக்கு பிம்பச் சிக்கல் ஏதேனும் இருக்கிறதா?
அவர் பதைபதைக்கவில்லை. அவரது முகத்தில் என்னால் எந்த உணர்வையும் பார்க்க முடியவில்லை. அவர் அமைதியாக, பாதிக்கப்படாமல் இருந்தார். ஆனால், அவர் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தீர்மானித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. இன்று அவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினாலும், 2007இல் அப்படி இல்லை.
“மக்கள் என்று சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன். இரண்டு அல்லது மூன்று பேர்தான் இந்த வகை மொழியில் பேசுகின்றனர். கடவுள் அவர்கள் ஆசிர்வதிக்கட்டும் என்றே எப்போதும் சொல்கிறேன்.”
“இதை இரண்டு அல்லது மூன்று பேரின் சதி என்று சொல்கிறீர்களா?”
“நான் அப்படிச் சொல்லவில்லை.”
“ஆனால் இரண்டு அல்லது மூன்று பேர்தான் என்று சொகிறீர்களே.”
“இந்தத் தகவல்தான் என்னிடம் உள்ளது. இது மக்களின் குரல் அல்ல.”
இரண்டு மூன்று பேர் மட்டும்தான் இவ்விதம் பேசுகின்றனர் என்று முதல்வர் சொன்னது உண்மையில்லை. தலைமை நீதிபதி உள்ளிட்ட இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதே போன்ற கருத்துக்களை நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து மேலும் கேள்வி கேட்க முற்பட்டேன்.
“2003 செப்டம்பரில் குஜராத் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியதை நான் சுட்டிக்காட்டலாமா? 2004 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பலியாகிக்கொண்டிருந்தபோது நீங்கள் நவீன நீரோபோல வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருந்ததாகக் கருத்து தெரிவித்தார். உங்களுடன் உச்ச நீதிமன்றத்திற்குப் பிரச்சினை இருப்பதுபோலத் தெரிகிறது.”
“கரண், ஒரு சின்ன வேண்டுகோள். உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பாருங்கள். ஏதேனும் எழுத்து வடிவில் இருக்கிறதா? எல்லாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்.”
“இவை எழுத்தில் இல்லை. நீங்கள் சொல்வது சரி. இவை கருத்துகள்தான்.”
“இது தீர்ப்பாக இருந்தால் நான் பதில் சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன்.”
“ஆனால், தலைமை நீதிபதியின் விமர்சனம் ஒரு பொருட்டல்ல என்கிறீர்களா?”
“இது உங்களுக்கு என்னுடைய எளிமையான வேண்டுகோள். நீதிமன்றத் தீர்ப்பைப் பாருங்கள். நீங்கள் மேற்கோள் காட்டும் வாசகத்தைக் கண்டுபிடியுங்கள். இந்திய மக்கள் அதை அறிந்துகொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.”
“தலைமை நீதிபதி தெரிவித்த வெறும் கருத்தல்ல இது. 2004 ஆகஸ்டில் 4,600 வழக்குகளில் 2,100க்கும் மேலான வழக்குகளை (40 சதவீதத்திற்கு மேல்) உச்ச நீதிமன்றம் மறு விசாரணைக்கு உட்படுத்தியது. ஏனெனில் மோடியின் குஜராத்தில் நீதி நிகழ்வில்லை என்பதற்காக இவ்வாறு செய்தது.”
“நான் மகிழ்ச்சி அடைவேன். தீர்ப்பால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனெனில் நீதிமன்றம் முடிவு எடுக்கும்.”
நீதிமன்றத் தீர்ப்பு என்ன கூறியது?
மோடி நீதிமன்றத் தீர்ப்பில் எழுதப்பட்டிருப்பதற்கும், விசாரணையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறார். இருப்பினும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவருக்கான தற்காப்பு பதில் இதுவல்ல. தலைமை நீதிபதி உங்களை விமர்சிக்கும்போது அது எழுத்துபூர்வமானதா, கருத்தா என்பது ஒரு பிரச்சினை அல்ல. அதைவிட முக்கியமாக, இந்த விமர்சனம் எல்லா நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் வெளியானது. எனவே, இதுவே, இரண்டாம் முறை தேர்தலை எதிர்கொண்டபோது மோடி எதிர்கொண்ட பிம்பச் சிக்கலின் மையமாக இருந்தது. எந்த வகையான வார்த்தை விளையாட்டும் இதை மறையச்செய்துவிட முடியாது. அந்த அம்சத்தைத்தான் அவரிடம் எடுத்துச் சொல்ல முயன்று கொண்டிருந்தேன்.
உண்மை என்னவென்றால் – அப்போது இது எனக்குத் தெரியவில்லை என்பது சோகமானது, மடத்தனமானது – நவீன கால நீரோ எனும் கருத்து, அந்தக் காலத்தில் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டதுபோல, விசாரணையில் கருத்தாகச் சொல்லப்பட்டது அல்ல. ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இடம்பெற்றிருந்தது. இந்த மூன்று நிமிடப் பேட்டியை பார்த்த பிறகு டீஸ்டா செடல்வாட் இந்தத் தகவலை எனக்குத் தெரிவித்தார்.  ஜஹிரா ஹபிபுல்லா எச்.தேக் எதிர் குஜ்ராத் அரசு தொடர்பான வழக்கில், துரைசாமி ராஜு மற்றும் ஆரிஜித் பஸயத் அடங்கிய பெஞ்ச், 2004 ஏப்ரல் 12இல் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியிருந்தது; “பெஸ்ட் பேக்கரி மற்றும் அப்பாவிக் குழந்தைகள், பரிதவிக்கும் பெண்கள் எரிந்துகொண்டிருந்தபோது நவீன கால நீரோக்கள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தனர் இதில் ஈடுபடுபவர்களை எப்படிக் காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தனர்.”
வாய் வார்த்தையாகச் சொல்லப்பட்டதாக நான் கூறியதைவிட இது இன்னும் தீவிரமானது. இதில் ஈடுபடுபவர்களை எப்படிக் காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்ததாக மோடி மீது அந்தத் தீர்ப்பு குற்றம் சாட்டியிருந்தது.
மோடியைப் பேட்டி காணும்போது இதை நான் அறியாததால் என் கேள்வி அது இருந்திருக்க வேண்டியதைவிட பலவீனமாக இருந்தது. ஆனால், இந்த நீர்த்துப்போன வடிவமே அவரை அதிருப்தி அடையச்செய்யப் போதுமானதாக இருந்தது.
(பேட்டியில் தொடர்ந்து என்ன நடந்தது, பேட்டிக்குப் பிறகு மோடியின் எதிர்வினை என்ன? – நாளை தொடரும் …)
நன்றி – தி வயர் இணையதளம்
https://thewire.in/books/narendra-modi-karan-thapar-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக