வியாழன், 19 ஜூலை, 2018

ராஜ்ய சபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி

தினமலர் : புதுடில்லி : 'ராஜ்யசபாவில், உறுப்பினர்கள், 22 இந்திய மொழிகளில் பேசலாம்' என, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.ராஜ்யசபாவில், ஏற்கனவே, தமிழ், அசாமி, வங்கம், குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது உள்ளிட்ட, 17 மொழிகளில் பேச அனுமதி வழங்கப்பட்டது. உறுப்பினர்கள், இந்த, 17 மொழிகளில், ஒன்றில் பேசினால், அதை பிற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும் வகையில், மொழிமாற்றம் செய்து அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிதாக, தோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சாந்தாலி, சிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கு, மொழி மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 'புதிதாக சேர்க்கப்பட்ட ஐந்து மொழிகள் உட்பட, 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில், ராஜ்யசபா உறுப்பினர்கள் பேசலாம்' என, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார். இருப்பினும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழிகளில் பேச விரும்பினால், ராஜ்யசபா செயலகத்தில், முன்னரே தெரிவிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக