செவ்வாய், 24 ஜூலை, 2018

கனிமொழியை தூத்துக்குடி 13 பேர் கொலை பற்றி பேசவிடாமல் அதிமுக..... ஒரு 'murdered' க்கு பதிலாக ஆறு 'killed


மின்னம்பலம்:   “மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு இப்போதும் நிலைமை மாறவே இல்லை, தூத்துக்குடி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவே இல்லை” என்று மாநிலங்களவையில் திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது (ஜூலை 24) பேசிய கனிமொழி எம்.பி,
“மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றதைப் பார்த்து இந்த தேசமே அதிர்ந்தது’’ என்று ஆரம்பித்தார். கனிமொழி ஆங்கிலத்தில் murdered என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.அப்போது மாநிலங்களவையை நடத்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ‘murdered' என்ற வார்த்தை வேண்டாமே என்று வேண்டுகோள் வைத்தார். அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது.
உடனே சமாளித்த கனிமொழி killed என்ற வார்த்தையைப் பயன்படுத்த அதை துணைக் குடியரசுத் தலைவர் அனுமதித்தார். அப்புறமும் அதிமுக தரப்பில் கூச்சல் அடங்காததால் ஒ.கே. கில்டு, கில்டு, கில்டு, கில்டு, கில்டு என்று ஆறு முறை அதே வார்த்தையை பதிவு செய்தார் கனிமொழி.

அப்போது மாநில அரசு கொன்றது என்று சொல்லக் கூடாது என்று அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த கடுமையாக மறுப்பு தெரிவித்தார். அப்போது மாநிலங்களவைத் தலைவர், ‘விஜிலா... நீங்கள் கனிமொழியின் கருத்துரிமையில் தலையிட முடியாது. அமருங்கள்’ என்றவர் மாநில அரசு என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, “ இப்போதுவரை தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இன்றுவரை அங்கே போலீஸாரின் சித்ரவதைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. நள்ளிரவுத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன, பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். சில நாட்கள் முன்பு நான் அங்கு இருந்தேன். தூத்துக்குடியில் போலீஸாரின் மிரட்டல்கள் இன்னும் தொடர்கின்றன’’ என்று கனிமொழி சொல்லச் சொல்ல விஜிலா மீண்டும் குறுக்கிட்டார்.
“என் நேரத்தை வீணடிக்கிறார் அவர்” என்று கனிமொழி குற்றம் சாட்டினார்.
விஜிலாவை நோக்கி, ‘’உங்களுக்கு வாய்ப்பு வரும்போது பேசுங்கள். அவையை மதியுங்கள்’’ என்று கடிந்துகொண்ட துணைக் குடியரசுத் தலைவர் கனிமொழியை தொடர்ந்து பேச அழைத்தார்.
அப்போது கனிமொழி, “தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. இதுபற்றிய அறிக்கையை மக்களிடம் ஒப்படைக்கும் ஒரு நிகழ்வை தூத்துக்குடியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்த தூத்துக்குடியில் யாரும் இடம் தரக் கூடாது என்று அரங்க உரிமையாளர்களுக்கு போலீஸார் உத்தரவு போட்டிருக்கிறார்கள். இதனால் நிகழ்ச்சி மூன்று முறை இடம் மாற்றப்பட்டது. நான் அங்கே இருந்தேன்.
மூத்த தலைவர் நல்லக்கண்ணு அந்த நிகழ்ச்சிக்கு போகும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அந்த நிகழ்ச்சிக்காக வந்தார். அவர் கூட தடுத்து நிறுத்தப்பட்டு, அவரது வாகனம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது...” என்று கனிமொழி தூத்துக்குடி நிலவரத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ’‘உங்கள் நேரம் முடிந்துவிட்டது’’ என்று சொல்லிவிட்டார் அவைத் தலைவரான துணைக் குடியரசுத் தலைவர்.
அதிமுக உறுப்பினர்களின் தொடர் இடையூறுகளுக்கு இடையிலும் தூத்துக்குடியில் காவல்துறையினரின் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்வதை மாநிலங்களவையில் அம்பலப்படுத்தினார் கனிமொழி எம்.பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக