வெள்ளி, 29 ஜூன், 2018

டாக்டர் ராமதாஸ் : எட்டுவழிசாலை இழப்பீடு கிடைக்காது

பசுமைச் சாலைக்கு இழப்பீடு கிடைக்காது : ராமதாஸ்மின்னம்பலம்:  சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு கிடைக்கும் எனத் தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையிலிருந்து  சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடவுளிடம் மனு கொடுத்தல், தற்கொலை முயற்சி என பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் கொடுப்பவர்களுக்கு சந்தை மதிப்பைக் காட்டிலும் நான்கு மடங்கு இழப்பீடு உயர்த்தித் தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பசுமைச் சாலைக்கு இழப்பீடு கிடைக்காது என்று பாமக கட்சி நிறுவனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (ஜூன் 29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை 136 கி.மீ தொலைவுக்குத் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், திருமண அரங்குகள், கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம், கிணற்றுக்கு ரூ.10 லட்சம், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
நிலம் கொடுக்க பெரும்பாலான விவசாயிகள் தயாராக இல்லாத நிலையில், அவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசி, இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தால் ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்று ஆசைக் காட்டினர்கள். அதை உண்மை என்று நம்பியவர்கள் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக தங்களின் நிலங்களை வழங்கினார்கள்
ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு மிகக் குறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டது. நியாயமான இழப்பீடு வழங்கக் கோரியவர்கள் மிரட்டப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை 2013ஆம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம் நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை இன்று வரை அரசு நிறைவேற்றவில்லை’’ என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார் பாமக நிறுவனர்.
சென்னை- சேலம் பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ரூ.9 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்திருந்தார். ஆனால், அது மக்களை ஏமாற்றும் வேலை என்பதால், எந்தெந்த நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்களை வெளியிடும்படி முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு தான் விட்ட சவாலுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்பதைக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ்,
“இத்தகைய சூழலில் பசுமை வழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உளுந்தூர்பேட்டை - சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றப்பட்டதைப் போல இவர்களும் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்று எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக