சனி, 2 ஜூன், 2018

புல்லெட் ட்ரெயின் .. பழங்குடியினர் கடும் எதிர்ப்பு .. நிலம் பறிமுதலுக்கு .


மின்னம்பலம்: புல்லெட் ரயில் திட்டத்துக்கான நிலம்
கையகப்படுத்துதலுக்கு பழங்குடியின மக்களின் கடுமையான எதிர்ப்பால் பணிகள் தாமதமாகி வருகிறது.
நாட்டின் முதல் புல்லெட் ரயில் திட்டம் மகாராஷ்டிரா - குஜராத் பாதையில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 2022ஆம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமாகி வருகின்றன. மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் புல்லெட் ரயில் திட்டத்தின்படி 70க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களின் வழியாகத் தண்டவாளம் அமைக்கப்படவுள்ளது. இந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தால் தங்களது குடியிருப்புப் பகுதிகள் அகற்றப்படுவதை விரும்பவில்லை. இதனால் பழங்குடியின மக்கள் புல்லெட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தின்படி பல்கர் மாவட்டத்தில் புல்லெட் ரயில் 110 கிலோ மீட்டர்களைக் கடந்து செல்கிறது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் நிலத்தைக் கையகப்படுத்த குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் அந்த நிலத்தின் விலையை விட ஐந்து மடங்கு கூடுதலான விலை வழங்க அந்த மக்களுக்கு உறுதியளித்துள்ளோம். பல்கர் மாவட்டத்தில் 200 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் பழங்குடியினர்கள்தான்' என்று கூறப்பட்டுள்ளது.
508 கிலோ மீட்டர் தொலைவில் புல்லெட் ரயில் திட்டம் அமையவுள்ளது. 12 இடங்களில் நின்று செல்லும் இந்த புல்லெட் ரயில் திட்டத்துக்கான செலவு ரூ.1.25 லட்சம் கோடி வரை ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் - இந்தியா கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்துதல் தாமதமாவதால் மொத்த செலவு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக