சனி, 2 ஜூன், 2018

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட ஆயுள் கைதி சிறையில் உயிரழப்பு .. தற்கொலை என்று அறிவிப்பு

மின்னம்பலம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது கைது செய்யப்பட்ட ஆயுள் கைதியின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: சர்ச்சையை எழுப்பும் கைதியின் மரணம்!தூத்துக்குடி மாவட்டம் மறவன்குடி பகுதியைச் சேர்ந்த பரத்ராஜா (36) கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆயுள் கைதியான இவர் தனது தம்பி தனசேகரனுக்கு மே 23ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மே 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 7 நாள் பரோலில் வந்தார்.
இதற்கிடையில் மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இரவு நேரங்களில் வீடு புகுந்து இளைஞர்களை போலீசார் கைது செய்வதும் தொடர்கதையாகி வந்தது.
அண்ணா நகர் 12ஆவது தெருவில் தனது அண்ணன் வீட்டில் இருந்த பரோல் கைதி பரத்ராஜாவையும் காவல் துறையினர் பலமாகத் தாக்கி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 30 தேதி பரத்ராஜா தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் அவரது குடும்பத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
“நன்னடத்தைக்காக சிறையில் இருந்து வெளியே வர இருந்த நிலையில் காவல் துறையினரால் தாக்கப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரத்ராஜா உயிரிழந்துள்ளார். அதனை மறைத்து, தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தன்னைக் காவல் துறை தாக்கியதாக மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார்” என்று அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நேற்று முன்தினம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்க மறுத்து இன்று (ஜூன் 2) மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது மரணத்துக்கான காரணம் தெரியாமல் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக