புதன், 6 ஜூன், 2018

ப.சிதம்பரத்திடம் அடுத்தடுத்து விசாரணை!

ப.சிதம்பரத்திடம் அடுத்தடுத்து விசாரணை!மின்னம்பலம் : ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் நேற்று மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று (ஜூன் 6) ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சம்பந்தமாக சிபிஐ அவரிடம் விசாரணை செய்து வருகிறது.
2006ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முறைகேடாக அனுமதி வழங்கியதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இரண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விசாரணையை துரிதப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டுமென்று நோட்டீஸ் அளித்தது மத்திய அமலாக்கத் துறை. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இதனையடுத்து, ஜூலை 10ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை விதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். அன்றைய தினம், இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தவுள்ளது.
நேற்று (ஜூன் 5) ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு விசாரணைக்காக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக ப.சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் சுமார் ஆறரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிதம்பரம். அதில், கோப்புகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டதாகவும், கோப்புகளில் பதிவு செய்த பதில்களையே தான் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். “பாதி நேரத்திற்கும் மேலாகப் பதில்களைத் தவறில்லாமல் டைப் பண்ணுவது, அதனை வாசிப்பது மற்றும் அதில் கையெழுத்திடுவதிலேயே கழிந்தது” என்று அவர் கூறியுள்ளார். குற்றப்பத்திரிகை மற்றும் குற்றச்சாட்டுகள் இல்லாமலேயே, வழக்கு விசாரணை நடத்தப்படுவதை வலியுறுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிதம்பரம்.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் டெல்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார் ப.சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை விமானநிலையத்தில் வைத்து கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்தது சிபிஐ. அதன்பின், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த மாதம் சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகன் ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை நான்கு குற்றப்பத்திரிகைகளைப் பதிவு செய்தது. வெளிநாட்டில் இருக்கும் சொத்து விவரங்களைத் தெரிவிக்காமல் இருப்பதன் அடிப்படையில், கருப்புப்பணச் சட்டத்தின் கீழ் சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் நடந்த இரு வேறு வழக்குகளின் விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் ஆஜராகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக