புதன், 6 ஜூன், 2018

சவூதிப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம்!

சவூதிப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம்!மின்னம்பலம்: பெண்கள் வாகனம் ஓட்டலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சவூதியில் முதன்முறையாகப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து,"சவூதியில் இனி பெண்கள் வாகனம் ஓட்டத் தடையில்லை. அதற்காக பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவுள்ளது. இந்த நடைமுறை வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்" என்று சவூதி அரசர் சல்மான், கடந்த ஆண்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த திங்கள் முதல் தொடங்கியுள்ளன. திங்களன்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த சவூதியைச் சேர்ந்த 10 பெண்களுக்கு சில பரிசோதனைகளுக்குப் பின் சவூதி அரேபியா ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சவூதியில் முதன்முறையாக ஓட்டுநர் உரிமம் பெறும் பெண்கள் இவர்கள்தான்.

அடுத்த ஒரு வாரத்தில் சுமார் 2000 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் ஆண்களிடம் அனுமதி பெற்றுதான் பெண்கள் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்தது. ஆனால் பெண்களுக்கு மேலும் ஒரு திருப்புமுனையாக வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் இந்த நடைமுறைக்கும் தடை விதிக்கப்படுவதாக சவூதி பிரஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு சவூதியில் பெண்கள் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லவும், திரையரங்குகளுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக