செவ்வாய், 19 ஜூன், 2018

காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா பதவி விலகினார் .. ஆதரவைத் திரும்பப் பெற்றது பாஜக,

BBC :ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான கூட்டணி
அரசில் அங்கம் வகித்து வந்த பாரதிய ஜனதா கட்சி, அந்த அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.;பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள சூழ்நிலையில் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பதவி விலகியுள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோதி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கும் முடிவை எடுத்ததாக பாஜக தெரிவித்துள்ளது. கூட்டணி அரசில் உள்ள பாஜக அமைச்சர்கள் தங்கள் பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக, துணை முதல்வர் பதவியில் இருந்த பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் கூறியுள்ளார்.
நியமன உறுப்பினர்கள் இருவர் உள்பட 89 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காஷ்மீர் சட்டமன்றத்துக்கு 2014இல் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 இடங்களும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும் கிடைத்தன.


இந்த கூட்டணி அமைக்கும்போதே செயல்திட்டம் முடிவு செய்யப்பட்டதாகவும், அமைதியை நிலைநாட்டுவதே அதில் முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
"ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அகண்ட பாரதத்தின் ஒரு முக்கிய அங்கம். அங்கு உண்டாகும் பிரச்சனைகளால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பாதிப்பு உண்டாகக்கூடாது," என்று கூறிய ராம் மாதவ், "அதற்காக மத்திய உள்துறை அமைச்சர் காஷ்மீருக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டார்," என்று தெரிவித்தார்.ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், தற்போது மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளது.
ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் காஷ்மீரில் இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை நன்றாக இல்லையென்றும், கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், சமீபத்தில் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி ராம் மாதவ் கூறியுள்ளார்.
சமீபத்தில் தீவிரவாத நடவடிக்கைகளும், இளைஞர்களை மூளைச் சலவை செய்வதும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக