செவ்வாய், 12 ஜூன், 2018

காலா – ரீலும் ரியலும்.

சவுக்கு - Jeevanand Rajendran : தளபதி முதல் நாள் படம் பார்க்க ஆரம்பித்ததில்
தொடங்கியது எனது ரஜினி மோகம்.  பார்த்தால் முதல் நாள் இல்லாவிட்டால் பார்ப்பதே இல்லை என்ற முடிவுடன் அனைத்து ரஜினி படங்களையும் பார்த்து விடுவேன். ரஜினி படம் என்றாலே திருவிழா கோலம் தான் கட்டவுட், தோரணம் என்று முதல் ஒரு வாரம் டிக்கெட் வாங்குவதே சாதனை தான்.
காலா எனக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக அமைந்தது.  ரஜினி படம் 2 ஆவது நாள் இவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைப்பதில் தொடங்கி திரையரங்கு நிரம்பாத வரை ஒரு ரசிகனாக நான் இப்படி ஒரு நாளை எதிர்பார்க்கவே இல்லை. ஆரவாரம், விசில் சத்தம், சூப்பர் ஸ்டார் டைட்டில் போடும் போது ஏற்படும் கூஸ் பம்ப் என எதுவும் இல்லாமல் அபியும் நானும் படத்துக்கு வந்த மனநிலையில் திரையரங்கு முழுவதும் ஒரே family crowd
ரஞ்சித் படம்னாலே நீலம், அம்பேத்கர் படம், புத்தர் சிலை, தலித் அரசியல் பேசும் புத்தகம்னு ஏதாவது குறியீடு படம் முழுக்க இருக்கும், காலாவில் ரஜினியே ஒரு குறியீடு தான்.

ரஜினி கிரிக்கெட்டில் கிளீன் போல்ட்  ஆவதில் தொடங்குகிறது படம், அடுத்து வரும் காட்சிகளில் அவர் குடும்பம், முன்னாள் காதலி என்று நகரும் போது கபாலியில் வரும் காட்சிகளை நினைவு படுத்தினாலும் அடுத்து சில காட்சிகளிலேயே அசுர வேகம் எடுக்கிறது குறிப்பாக பிரிட்ஜ் சண்டை காட்சி ரஜினி ரசிகர்களுக்கு விருந்து.
காலாவில் மூன்று பெண்கள் கதாபாத்திரம் வரும், அவரின் மனைவி செல்வி, காதலி சரினா, மருமகள் புயல். இந்த மூவரையும் ரஞ்சித் உருவகப்படுத்தி இருப்பதே அலாதி, மூவரும் ஆண்களுக்கு அஞ்சாதவர்கள். ஏன் காலாவிற்கே அஞ்சாதவர்கள். மற்ற ரஜினி படங்களில் வருவதை போல் அவர் பெண்களை அடங்கி இருக்க சொல்வதில்லை, மாறாக அவர்களுக்கான இடத்தை கொடுக்கிறார். மூவரும் அவர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் காலாவின்  ஒப்புதலுக்கோ, அனுமதிக்கோ காத்து இருப்பதில்லை சுய மரியாதையோடு இருப்பதாக காட்சிப்படுத்தி இருப்பார். ஒரு கலவரத்தில் புயலின் ஆடைகள் அவிழ்க்கப்படும் போது அவள் ஆடையை எடுத்து அணியாமல், கட்டையை எடுத்து எதிரியை அடிப்பது போல் ஒரு காட்சி வரும். அது அனைத்தும் டைரக்டர் டச். பழைய பாலசந்தர், பாக்யராஜ் படத்தில் இதற்கு ஒத்த காட்சிகள் வரும் .
தூய்மை மும்பை திட்டத்துடன் ராமர் பக்தராக வெள்ளை உடை அணிந்து வரும் வில்லன் யாரை உருவகப்படுத்துகிறது என்று யூகிக்க தேவை இல்லை, நானா படேக்கர் ஹரி தாதாவாக பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அவரை எதிர்த்து ராவணனாக காலா, இவர்களுக்கு இடையேயான நிலத்தின் உரிமைக்கான போரே படத்தின் கரு.
ஹரி தாதா கருப்பை அசிங்கமாக கருதுகிறார், காலா வீட்டில் தண்ணீர் கூட அருந்த மறுக்கிறார். அவருடைய கட்சி கோடி ஒரு சுவாரசியம். நாம் தமிழர் கட்சியில் உள்ள புலி படத்திற்க்கு பதில் சிங்கம் இடம் பெற்றிருக்கும். பாஜக ஹிந்து முஸ்லீம் பிரிவினை வாதம் பேசுவதையும் , “நாம் தமிழர்” வந்தேறி வாதம் பேசுவதையும் ஒப்பிடுகிறார் ரஞ்சித்

காலாவின் ஒரு மகனின் பெயர் லெனின்.  இவர்கள் இருவரும் தன் மண்ணை நேசிப்பவர்கள். ஆனால் அந்த உரிமையை இவர்கள் இருவரும் நேரெதிர் பாணியை கையாளுகிறார்கள். லெனின் ஆயுத போராட்டத்தை எதிர்ப்பவராக வருகிறார்.  என்ன ஒரு முரண். லெனின்னு பேரு வச்சதால் உன்ன திட்ட கூட முடியல என்று காலா ஒரு முறை குறைபட்டு கொள்வார்.
ஒரு வசனம் வரும்
“உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ, நல்லா இருக்கோ இல்லையோ   நீ போடற ரோட்டில் போய்கிட்டு, குடுக்கற தண்ணிய குடிச்சிகிட்டு, நீ வீசி எறியிர அரிசியை தின்னுகிட்டு இருக்கணும். அரிசி நல்லா இல்லனு சொன்னா, திங்க சோத்துக்கே வழி இல்லாத நாயிங்க என்ன திமிர் பாருனு பேசுவ.”
எவ்வளவு நிதர்சனம் ? இது தான் கதையின் அடிநாதம். படத்தில் உள்ள எல்லா காட்சிகளிலும் இதை ஒத்தே அமைந்திருக்கும். மற்ற படங்கள் போல் இரண்டு பக்கங்களிலும் எதாவது ஒரு நியாயம் இருப்பது போல் அல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே அநீதி நடப்பதை பிளாக் அண்ட் வைட்டாக கூறுகிறார்.
காலாவில் ரஜினி சட்டத்தை மதிப்போம். அது எங்களை நசுக்கும் போது தூக்கி  போட்டு மிதிப்போம் என்கிறார். போராட்டம் தான் தீர்வை தரும் என்கிறார், படம் முழுவதும் ஒடுக்கப்பட்டவரின் அரசியலை பேசுகிறார்.
நிஜத்தில் நாம் காணும் ரஜினிக்கும் இந்த கதாபாத்திரத்திற்கும் எவ்வளவு வேற்றுமை ? சினிமா துறையில் ரஜினி ஒரு தெளிவான ஆள்.  அவருடைய லிமிட் என்னவென்று அவருக்கு நன்றாக தெரியும். ஏன் நீங்கள் கமலை போல் வித்யாசமான கதைகளில் நடிப்பதில்லை என்று கேட்டால் ரசிகரகள் அதை ஏற்கமாட்டார்கள் என்று ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக்கொள்வார். ஆனால் நிஜத்தில் அவருக்கு அந்த தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது, காலவில் ரஞ்சித்தின் முகமூடியாக வரும் அவர் நிஜத்தில் குருமூர்த்தியின் முகமூடியாக இருக்கிறார்.
படத்தில் ஒரு அதகளமான விசாரணை காட்சி வரும் அதில் மந்திரியை பார்த்து ரஜினி “ஆமா இவரு யாரு” என்று திரும்ப திரும்ப கேட்டு மந்திரியை கடுப்பேற்றுவார். அந்த காட்சியை காணும் போது “நான் தான்பா ரஜினிகாந்த்” நினைவுக்கு வந்து தொலைக்குது.
சினிமாவில் மட்டுமல்ல.  நிஜ வாழ்விலும் மக்கள் காலா போன்ற தலைவர்களைத்தான் விரும்புகிறார்கள்.   தங்களுக்காக குரல் கொடுக்கும், வீதியில் இறங்கிப் போராடும், போராட்டத்தில் தங்களோடு நிற்கும் தலைவர்களைத்தான் மக்கள் விரும்புவார்கள் விரும்புகிறார்கள்.
போராட்டம் செய்தால் நாடு சுடுகாடாகி விடும் என்று அறிவுரை கூறும் அதிமேதாவிகளை அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக