செவ்வாய், 12 ஜூன், 2018

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்.. சுப்பராயலு கொலை ... தேனீ ஜெயக்குமாரை காப்பாற்றிய ப.சிதம்பரம்

சுப்பராயலுவின் தாய்
தேனீ ஜெயகுமார்
savukkuonline.com :  ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒரு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டபோது, சிபிஐயில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.   அவர்களும் மனிதர்கள்தான்.  சிபிஐ அமைப்பை விட, தமிழக காவல்துறை சிறந்தது என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஆனாலும், சிபிஐ அமைப்பின் மீதான நம்பிக்கை இன்னும் தகர்ந்து போகவில்லை. இன்றும் எந்த முக்கிய குற்றச் செயலாக இருந்தாலும், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைதான் முதலில் வருகிறது.
சுப்பராயலு
சிபிஐ ஒரு மிகச் சிறந்த அமைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   பெரும்பாலான விசாரணைகளை அறிவியல்பூர்வமாக செய்யும் பல அற்புதமான அதிகாரிகள் சிபிஐயில் இன்னும் உள்ளனர்.   என் மீதான இரண்டு வழக்குகளையும் சிபிஐ அதிகாரிகள் மிகச் சிறப்பாகவே புலனாய்வு செய்தனர்.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர்கள் எந்த விசாரணையையும் செய்வதில்லை.
ஆனால் சிபிஐயிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன.  அப்படி ஒரு கருப்பு ஆடு குறித்த புலனாய்வுக் கட்டுரைதான் இது.
சுப்பராயலு.   29 வயது இளைஞன்.  பாண்டிச்சேரியின் சின்னக் கரையாம்புதூர்தான் அவனது சொந்த ஊர்.    காவல்துறையில் சேர வேண்டும் என்பது அவனது கனவு.   காவல்துறையில் வேலை கிடைக்கவில்லை என்பதால், பாண்டிச்சேரி ஊர்க்காவல் படையில் சேர்கிறான் சுப்பராயலு.

முதலில் ஒரு அரசியல்வாதியிடம் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி விட்டு, பின்னர் பாண்டிச்சேரியின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தேனீ ஜெயக்குமார் வீட்டில் பாதுகாப்புப் பணியில் சேர்கிறான் சுப்பராயலு.    எப்போதும் இரவுப் பணிதான் சுப்பராயலுவுக்கு.

சுப்பராயலு
தேனீ ஜெயக்குமாரின் வளர்ச்சி, அண்ணாமலை ரஜினிகாந்தின் வளர்ச்சியை விட அதி வேகமானது.  யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் சொந்த ஊர் பாண்டிச்சேரிதான்.   தேனி மாவட்டத்தில் இருந்து ஒரு லாரியை வாங்கி, அதில்தான் முதலில் தொழில் தொடங்குகிறார் ஜெயக்குமார்.   அந்த லாரியின் முகப்பில் தேனி என்று எழுதப்பட்டிருக்கும்.   அந்த தேனி நாளடைவில் மருவி தேனீயாக, ஜெயக்குமார் சுறுசுறுப்பானவர் என்பதை குறிப்பதாக மாறிப் போனது.   அந்த அடைமொழி பிடித்தமானதாக இருந்ததால், ஜெயக்குமாரும் அந்த பெயரை பயன்படுத்திக் கொண்டார்.
ஜெயக்குமாரின் அண்ணன் பாண்டிச்சேரி பொதுப் பணித் துறையில் உதவிப் பொறியாளர்.   தேனீ ஜெயக்குமார், பொதுப் பணித் துறையின் பதிவு செய்த காண்ட்ராக்டராக உருவெடுக்கிறார்.  அதைத் தொடர்ந்து ஜெயக்குமாருக்கு பல அரசு காண்ட்ராக்டுகள் வாரி வழங்கப்படுகின்றன.

தேனீ ஜெயக்குமார்
முதன் முதலாக ஜனதா தளம் கட்சியின் சார்பில், சக்கரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் ஜெயக்குமார்.  வெற்றி பெற்றதுமே உடனடியாக உள்ளாட்சித் துறை அமைச்சராகிறார்.  அப்போது பாண்டிச்சேரி போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய ஜெயக்குமாரின் நண்பர் ஒருவர், அவர் மனைவி பெயரில், ஆசிரியர் பயிற்சி கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுத் தருமாறு ஜெயக்குமாரை அணுகுகிறார்.   அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்த ஜெயக்குமார், அவரை அனுப்பி விட்டு, அவர் பெயரில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி தொடங்குகிறார்.  அதில் பணம் கொட்டுகிறது.  அதற்கு பின்னர், ஜெயக்குமாருக்கு தொடர்ந்து சுக்கிர திசைதான்.   தற்போது, கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்வேறு பள்ளிகள் என்று பணம் கொட்டுகிறது.

அடுத்த தேர்தலில், ஜனதா தளம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.   வேட்பு மனுவுக்கான கடைசி தேதிக்கு முன்னதாக, புதுவை கண்ணன் புதிதாக தொடங்கிய பாண்டிச்சேரி முன்னேற்றக் கழகத்தின் சார்பாக  வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.  2016 தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைகிறார்.   தோற்றாலும், இன்று தேனீ ஜெயக்குமார் 2000 கோடிக்கு அதிபதி என்கின்றனர் பாண்டிச்சேரி மக்கள்.
இப்போது மீண்டும் சுப்பராயலு கதைக்கு வருவோம்.   தேனீ ஜெயக்குமாரின் வீட்டில், தொடர்ந்து பணியாற்றும் சுப்பராயலுவுக்கு தேனீ ஜெயக்குமாரின் இரண்டாவது மகள் ஆஷாவோடு காதல் ஏற்படுகிறது.  இருவரும் மிகவும் நெருக்கமாகிறார்கள்.  இந்த நெருக்கம், எட்டு மாதங்களுக்கு தொடர்கிறது.   இந்த  காதல் குறித்து தேனீ ஜெயக்குமாருக்கு எதுவுமே தெரியாது.

தேனீ ஜெயக்குமார் வீட்டில் பணியாற்ற சுப்பராயலுவுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை
ஒரு நாள் தேனீ ஜெயக்குமார், ஒரு நிகழ்ச்சிக்காக சீர்காழி செல்கிறார்.   அவர் சீர்காழி செல்லும் விபரம் அறிந்ததும் ஆஷா சுப்பராயலுவை அழைக்கிறார்.   சுப்பராயலுவும், ஆஷாவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.  சீர்காழி நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்படுகிறது.   ஜெயக்குமார் எதிர்ப்பார்த்த நேரத்துக்கு முன்னதாகவே வீடு திரும்புகிறார்.
வீடு திரும்பிய தேனீ ஜெயக்குமார், மகளை தேடி அவர் படுக்கையறைக்கு செல்கிறார்.  படுக்கையறையில், சுப்பராயலுவும் அவர் மகள் ஆஷாவும் கட்டிப் பிடித்தபடி உறங்கியதை காண்கிறார்.  அங்கேயே சுப்பராயலு அடித்து கொல்லப்படுகிறார். இது நடந்த்து 7 ஜுன் 1999.   எப்படி கொல்லப்பட்டார் என்பதில் மர்மம் உள்ளது.  ஆனால் கொல்லப்பட்டதில் சந்தேகம் இல்லை.
சுப்பராயலுவின் பெற்றோர், அவரை காணாமல் தேடுகின்றனர்.  அமைச்சரின் வீட்டுக்கு சென்று விசாரிக்கின்றனர்.  அவன் வேலைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.  அருகே இருந்தவர்களிடம் விசாரித்தபோது,  7ம் தேதி, சுப்பராயலு அமைச்சர் வீட்டருகே இருந்த பாரதி பேக்கரியில் டீ சாப்பிடுவதை பார்த்ததாக கூறுகின்றனர்.  ஆனால், அமைச்சர் வீட்டிலோ, சுப்பராயலு பணிக்கே வரவில்லை என்று கூறுகின்றனர்.
இறுதியாக அமைச்சரை பார்க்கின்றனர். அமைச்சர் பொறுமையாக இருங்கள் வந்து விடுவான் என்று கூறுகிறார்.  இரு வாரங்கள் கழித்தும் வராத காரணத்தால், 22 ஜுன் 1999 அன்று மீண்டும் அமைச்சரை பார்க்கிறார்கள்.  அவர் பேப்பரில் விளம்பரம் கொடுங்கள் என்று கூறுகிறார்.  1 ஜுலை 1999 அன்று, விளம்பரம் கொடுக்கப்படுகிறது.   தகவல் ஏதும் வராததால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமா என்று அமைச்சரிடம் கேட்கிறார்கள்.  அவர் கரையாம்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்கிறார். கரையாம்புதூரில் இருப்பது, போலீஸ் அவுட்போஸ்ட்.  முழு காவல் நிலையம் அல்ல.   முழுமையான காவல் நிலையம் இருப்பது வில்லியனூரில்தான்.   இதை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியபோதும், இல்லை நான் சொல்கிறேன் அங்கே இருப்பவர் எனக்கு தெரிந்தவர் என்கிறார்.  அமைச்சர் சொல்லியபடியே கரையாம்புதூரில் புகார் அளிக்கப்படுகிறது.  எப்ஐஆர் போடப்படவே இல்லை.

பிறகு அமைச்சரை மீறி, வில்லியனூரிலும் புகார் அளிக்கப்படுகிறது.  ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.    சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.  வழக்கு விசாரணை இறுதியில், நீதிபதி அக்பர் பாஷா காதிரி, வழக்கை சிபிஐ அமைப்புக்கு மாற்றி உத்தரவிடுகிறார்.
சிபிஐ சிறப்பு வழக்குகள் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் கலைமணி என்பவர் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.   முதல் கட்ட விசாரணையை தொடங்கிய கலைமணி, சுப்பராயலுவின் பெற்றோர் மற்றும் சகோதரர்களை விசாரிக்கிறார்.  அவர்களிடம் விசாரணை நடத்துகையில், கலைமணியே உங்கள் மகனை அந்த அறையிலேயே வைத்து கொலை செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

கொலை வழக்கின் ஆவணங்களை பாண்டிச்சேரி காவல் துறையிலிருந்து சிபிஐ சார்பாக கலைமணி பெற்றுக் கொள்ளும் ஆவணம்
சுப்பராயலுவின் தந்தை ராஜகோபால் நாயுடுவை, சந்தித்தபோது அவர் “ஆரம்பத்துல நல்லாத்தாம்பா போயிட்டு இருந்துச்சு.   அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை.  கலைமணி அய்யா சரியா பண்ணலை” என்றார்.

சுப்பராயலுவின் தந்தை ராஜகோபால்
எட்டு மாதங்கள் கழித்து, கலைமைணி சுப்பராயலுவின் பெற்றோரிடம், விழுப்புரம் ரயில்வே க்ராசிங் அருகே, சுப்பராயலு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் உடல் அடையாளம் தெரியாமல் சிதைந்து விட்டதால், ரயில்வே காவல் துறையினர் ஒரு வருடம் முன்பாக உடலை எரித்து விட்டதாகவும் கூறுகிறார்.   அதற்கு சான்றாக, எரிக்கப்பட்ட உடலில் இருந்த ஒரு சட்டையை ஆதாரமாக காட்டுகிறார்.  அந்த சட்டை சுப்பராயலுவுடையதுதான் என்று அடையாளம் காட்டுகின்றனர்.
சுப்பராயலு தற்கொலை செய்து கொண்டதாக, கலைமணி வழக்கை முடிக்கிறார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்களில் தில்லுமுல்லு நடைபெறுகிறது.    பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் பெரிய வீட்டு பிள்ளைகள், மதிப்பெண் குறைவாகவோ, அல்லது தேர்வே எழுதாமலோ இருப்பார்கள். அப்படிப்பட்ட பெரிய மனிதர்களின் பிள்ளைகளுக்கு, கம்ப்யூட்டரில் தவறான என்ட்ரி போட்டு, தேர்வில் 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் தயாரிக்கப்படுகிறது.  பல செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் இது போல திருட்டுத்தனத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப் படுகிறது.
அதை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றும், ஜெயராமன்  என்ற ஊழியர், இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கிறார்.    விசாரணை நடைபெறும் சூழல் ஏற்படுகிறது.   இந்நிலையில் திடீரென்று ஒரு நாள்ஜெயராமன் மர்மமான முறையில் இறந்து போகிறார்.  அந்த வழக்கின் விசாரணையும் சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஊழியர் கொலை தொடர்பான சிபிஐ அறிவிப்பு
சிபிஐயைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் இவ்வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்படுகிறது.   அந்த அதிகாரி இறந்து போன, ஜெயராமனின் போன் ரெக்கார்டுகளை ஆராய்கிறார்.   அதில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ராதா பாய் என்ற பெண்மணியோடு அடிக்கடி போனில் பேசியது தெரிய வருகிறது.
அந்த பெண்மணியின் போன் ரெக்கார்டுகளை ஆராய்கிறார்.     அந்த பெண்மணி மனோகர் என்பவரோடு ஒரு நாளைக்கு 12 முறைக்கு மேல் தொடர்ந்து பேசியது தெரிய வருகிறது.   அந்த மனோகரை விசாரணைக்கு அழைக்கிறார்.  மனோகர் 1996 முதல் 2001 வரை, அமைச்சராக இருந்த தேனீ ஜெயக்குமாரின் பிஏவாக இருக்கிறார்.  சிபிஐ அதிகாரி மனோகரை விசாரணைக்கு  அழைக்கிறார்.
இறந்து போன பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்.   அமைச்சர் பிஏ இல்லையா.   மனோகர் திமிராக பதிலளிக்கிறார்.   எதைக் கேட்டாலும் தெரியாது என்று எகத்தாளமாக பதில் வருகிறது.    பொறுமை இழந்த சிபிஐ அதிகாரி, பொளேரென்று ஒரு அறை விடுகிறார்.     அமைச்சரின் பிஏ என்ற எகத்தாளத்தில் இருந்த மனோகருக்கு பொறி கலங்கிப் போகிறது.   அதிர்ச்சியோடு சிபிஐ அதிகாரியை பார்த்ததும்,  அவர், எடுய்யா அந்த லத்தியை.  இவனை இன்னைக்கு உரிக்கலாம் என்கிறார்.
மனோகர் பதறிப் போகிறார்.    “சார் என்னை அடிக்காதீங்க சார்.  இந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல சார்.   நான் அந்த கொலையிலதான் சார் சம்பந்தப்பட்ருக்கேன்” என்று கூறி அழுகிறார்.
சிபிஐ அதிகாரிக்கு அதிர்ச்சி.   எல்லாத்தையும் முழுசா சொல்லு என்றவுடன், அமைச்சர் தேனி ஜெயக்குமார் வீட்டில்,  ஊர்க்காவல் படை ஊழியர் சுப்பராயலுவின் உடலை, அவரும், தேனீ ஜெயக்குமாரின் டிரைவர்  உதயக்குமார் என்கிற குமார் ஆகிய இருவரும் சேர்ந்து உடலை செங்கற் சூளையில் வைத்து எரித்ததையும், அந்தக் கொலையை, முருகன் என்பவர் உள்ளிட்ட கூலிப் படையினர் நடத்தியதையும் ஒப்பிக்கிறார்.
சிபிஐ அதிகாரி, அடுத்ததாக  தேனீ ஜெயக்குமாரின் ட்ரைவர் குமாரை பிடிக்கிறார்.   குமாரை நன்றாக “கவனித்ததும்” அவர் நடந்த அனைத்தையும் ஒப்புக் கொள்கிறார்.
ஜெயக்குமாரின் ட்ரைவர் குமாரை, தேனீ ஜெயக்குமாருக்கு ஸ்பீக்கர் போனில் பேசுமாறு உத்தரவிடுகிறார் அந்த சிபிஐ அதிகாரி.    ஜெயக்குமாரிடம், அவரை கலைமணி என்ற டிஎஸ்பி கைது செய்துள்ளதாகவும், அடி வெளுத்துள்ளதாகவும் கூறச் சொல்கிறார்.  குமாரும் அப்படியே பேசுகிறார்.  மறு முனையில் தேனீ ஜெயக்குமார், “கலைமணியா.  என்ன வேணுமாம் அந்த தேவிடியா பையனுக்கு.  பணமும் குடுத்தாச்சி.   வீடும் வாங்கிக் குடுத்தாச்சு.  எங்க வைச்சிருக்கான் உன்னை. சொல்லு” என்று கூறியதும் இணைப்பை துண்டிக்கிறார் சிபிஐ அதிகாரி.
இப்போது, தேனீ ஜெயக்குமாருக்கு இந்த கொலையில் உள்ள தொடர்பு உறுதியாகிறது.  அடுத்ததாக தேனீ ஜெயக்குமாரை விசாரிக்க செல்கிறார் சிபிஐ அதிகாரி.    அவர் தேனீ ஜெயக்குமாரை சந்தித்த உடனேயே, ஜெயக்குமார், செல்போனை சிபிஐ அதிகாரியிடம் அளிக்கிறார்.  மறு முனையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
தேனீ ஜெயக்குமாரிடம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்றும், அந்த வழக்கில் விசாரணையை உடனடியாக கை விட வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார் சிதம்பரம்.
உள் துறை அமைச்சர் நினைத்தால் மறு நிமிடமே சென்னையில் பணியாற்றும் அந்த சிபிஐ அதிகாரியை சிலிகுரிக்கு மாறுதல் செய்யலாம்.  பணி இடை நீக்கம் செய்யலாம்.  வேலையை விட்டு தூக்கலாம். இல்லை கைது கூட செய்யலாம் என்பது அந்த சிபிஐ அதிகாரிக்கு நன்றாகவே தெரியும்.
தேனீ ஜெயக்குமார், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பினாமி என்றே பாண்டிச்சேரி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
சிபிஐ அதிகாரி அப்படியே பின் வாங்குகிறார்.  விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட மனோகர் மற்றும் தேனீ ஜெயக்குமாரின் ட்ரைவர் குமார் ஆகியோர் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே கலைமணியால் புதைக்கப்பட்ட உண்மை, மீண்டும் ஆழ புதைக்கப்படுகிறது.
இவ்வழக்கில் தேனி ஜெயக்குமாரை காப்பாற்ற எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் நம்மிடம் இல்லை.   ஆனால் கலைமணிக்கு சென்னை அண்ணா நகரில் ஒரு ஃப்ளாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரியும்.
இந்த கட்டுரைக்காக, கலைமணியின் உயர் அதிகாரியான சிறப்பு குற்றப் பிரிவின் எஸ்பி, சரவணனை தொடர்பு கொண்டபோது, அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.

சிபிஐயில் தற்போது கூடுதல் எஸ்பியாக உள்ள கலைமணி
கரையாம்புதூர் சென்று, கொலை செய்யப்பட்ட சுப்பராயலுவின் குடும்பத்தினரை சந்தித்தேன்.   அவரின் தந்தை, உறவினர்கள், சகோதரர்கள், அந்த மரணத்தை கடந்து நீண்ட தூரம் வந்து விட்டனர்.   சுப்பராயலு, ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதை ஏறக்குறைய நம்புகின்றனர்.
ஆனால் சுப்பராயலுவின் தாய் காவேரிக்கு மட்டும், தன் மகனின் மரணத்தில் நியாயம் நடைபெறவில்லை என்பது நன்றாக தெரிந்திருக்கிறது.    6 ஜுலை 1999 அன்று நடந்த கொலை இது.    19 வருடங்கள் முடிந்து விட்டன.
அவரிடம் பேசத் தொடங்கியதுமே, நெஞ்சில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்.  என் புள்ளை வருவானாப்பா.  என் புள்ளை வருவானா என்று கதறி அழுதார்.

சுப்பராயலுவின் தாய் காவேரி
அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை
சுப்பராயலுவின் தாய் காவேரியின் கண்ணீர் பெரும் செல்வத்தை தேயக்கும் படையோ இல்லையோ, சுப்பராயலுவின் மரணத்துக்கு காரணமான தேனீ ஜெயக்குமார் மற்றும் அவரை காப்பாற்றிய கலைமணியை தேய்க்கும் படை என்றே நான் கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக