செவ்வாய், 26 ஜூன், 2018

எடப்பாடி பழனிச்சாமி : மக்கள் தாமாகவே விரும்பி எட்டுவழி சாலைக்கு நிலங்களை தருகிறார்கள்

பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கிறார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி பேட்டிமாலைமலர்: சேலம்:  நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு: கேள்வி:- தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?.
பதில்:- ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை 4 மாநிலமும் வழங்க வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.




கேள்வி:- தொடர்ந்து நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீர், இந்த மாதம் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?.

பதில்:- ஒவ்வொரு மாதமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாட்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிட்டு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும்.

கேள்வி:- பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலைமாறி, இன்றைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?.

பதில்:- சுமார் 56 கிலோ மீட்டருக்கு தர்மபுரியில் எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது. சேலத்தை பொறுத்தவரை 30 கிலோ மீட்டருக்கு எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது, இன்னும் 6 கிலோ மீட்டர் மட்டும் நடப்படவேண்டியிருக்கிறது. இதில், 100-க்கு 4 அல்லது 5 விவசாயிகள் தங்களுடைய நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங் களை பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு தாமாக முன்வந்து வழங்கி இருக்கின்றார்கள்.

இந்த பசுமை வழிச்சாலை மிக முக்கியமான சாலை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2006-ம் ஆண்டு என்று கருதுகின்றேன், கிருஷ்ணகிரியில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, அதேபோல, உளுந்தூர்பேட்டை சாலை இரண்டும் கிட்டத்தட்ட 2006-ல் அமைக்கப்பட்டது.

2009-ல் இருந்து 2011 வரை உளுந்தூர்பேட்டை சாலை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அப்பொழுது வாகனங்களுடைய எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். தற்போது வாகனங்களுடைய எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம், எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கேற்றவாறு சாலைகளை உருவாக்குவது அரசினுடைய கடமையாகும். அதற்கு மத்திய அரசாங்கம் இப்பொழுது முன்வந்து, இந்த பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அதற்கு மாநில அரசும் உதவி செய்கிறது.

கேள்வி:- இழப்பீட்டைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம்.....

பதில்:- அதாவது, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் வாயிலாக, தங்கள் பகுதியில் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்கூட பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கேள்வி:- அரசியல் கட்சிகள் மறியல் செய்தால், அன்றைக்கு மாலையே விடப்படும் சூழ்நிலைமாறி அவர்கள் மீது வழக்கு பதியக்கூடிய சூழ்நிலை.....

பதில்:- இதுவரைக்கும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது, யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அவர் கள் நடந்து கொள்கின்றபொழுதுதான் கைது செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைக்கு நாமக்கல்லைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றீர்கள். கவர்னர் அங்கே வருகின்றபொழுது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் கருப்புக்கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்திலே, சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துகின்ற விதத்திலே காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலை அவர்களை கைது செய்ய வேண்டி வந்தது.

கேள்வி:- விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது பற்றி.....

பதில்:- ஏற்கனவே நிலம் எடுக் கப்பட்டிருக்கிறது, இப்பொழுது நாங்கள்வந்து எடுக்கவில்லை. ஏற்கனவே, முந்தைய காலத்திலே இருந்து நிலம் எடுக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை. சேலத்தில் பார்த்தீர்களானால், ராணுவ வழித்தடம் வரவிருக்கிறது, இன்னும் தொழிற்சாலை அதிகமாக வரவேண்டும். படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் என்று சொன்னால், அந்த பகுதியிலே தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைகள் நம்முடைய பகுதியில் வருவதற்கு இன்றைக்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்த விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

கேள்வி:- இது தொடர்பாக ஒரு கருத்துகூட கேட்டவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கிறதே.....

பதில்:- இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது, 1200 பேருக்கு மேல், இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய சேலம் மாவட்டத்தில் 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, ஆங்காங்கே தாலுகா அளவில் நடத்தியிருக்கிறார்கள்.

கேள்வி:- நில மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில்:- இதுவரை இல்லாதவகையில் ஏழைகளுக்கு அதிகமான நில இழப்பீடு வழங்கப்படும். கடந்த காலத்தில் தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அப்பொழுதெல்லாம் நில இழப்பீட்டுத்தொகை குறைவாகத்தான் கொடுத்தார்கள். இன்றைக்கு அப்படியல்ல, ஏற்கனவே நம்முடைய மாவட்ட கலெக்டர், பலன் கொடுக்கின்ற மரங்களுக்கு என்னென்ன வகையிலே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்.

அதுமட்டுமல்ல, வீடுகளுக்கும், அதேபோல ஓட்டு வீடுகளுக்கும், தேய்மானம் இல்லாமல், கடந்த காலத்தில் தேய்மானங்களை கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள், அதையெல்லாம் தவிர்த்து, தேவையான அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

அதுமட்டுமல்லாமல், பசுமை வழிச்சாலை அமைக் கின்றபொழுது, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், இழந்தால், அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான இடத்தைக் கொடுத்து, பசுமை வீடுகள் அவர்களுக்கு அரசு கட்டிக்கொடுக்கின்றது.

கேள்வி:- இரும்பு ஆலையை தனியார் மயமாக்கத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்களே?.

பதில்:- இது மத்திய அரசாங் கத்தின் கீழ் வருகிறது. நம்முடைய இரும்பு ஆலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலே, இதை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும், பிரதமருக்கும், மத்திய அரசினுடைய துறை மந்திரிகளுக்கும் கடிதம் மூலமாக, இதை தனியார் மயமாக ஆக்கக்கூடாது என்ற, தமிழக மக்களுடைய உணர்வை பிரதிபலிக்கின்ற விதத்திலே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலும், இதை வலியுறுத்தி பேசப்பட்டிருக்கின்றது.

கேள்வி:- தொடர்ந்து எம்.பி.க்கள் பேசுவார்களா?.

பதில்:- ஏற்கனவே பேசப்பட்டது, பேசிக் கொண்டிருக்கிறார் கள், இன்னும் பேசுவார்கள்.

கேள்வி:- குறிப்பாக 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு மிகவும் விமர்சிக்கப்படுகிறது.....

பதில்:- தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நீதிமன்றம் என்பது ஒரு பொதுவானது. ஆகவே, அந்த நீதிமன்றத்தை விமர்சிப்பதை அனைவரும் தவிர்க்கவேண்டும்.

கேள்வி:- எந்த மாதிரியான நடவடிக்கை இருக்கும்?

பதில்:- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது, இதைப்பற்றி பேசுவது முறையாக இல்லை.

கேள்வி:- நீதிமன்ற தீர்ப்பு வந்தபொழுது அதை விமர்சிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பதில்:- நேற்றையதினம்கூட, தலைமை நீதிபதியே தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லியிருக்கின்றார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக