புதன், 27 ஜூன், 2018

சீனா - 50 புதிய நகரங்கள் மக்களின்றி வெறுமையாக .... 60 மில்லியன் மாடி வீடுகளில் யாருமே இல்லை?


Sriravindrarajah Rasiah : சனத்தொகை குறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்
சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 50 புதிய நகரங்கள் மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் "பேய் நகரங்கள்" Ghost Cities என்று வர்ணிக்கப்பட்டுகின்றன. 60 மில்லியன் மாடி வீடுகள் யாருமே இல்லாமல் பாழடைகின்றன. வெளிநாட்டில் சீனர்கள் வீடுகளை வாங்கிப் பூட்டி வைத்திருப்பது தொடர்கிறது. கனடா, அவுஸ்திரேலியாவில் பாவிக்காத வீடுகளால் அரசாங்கத்திற்கு மின்சாரம், தண்ணீர் பாவனை இல்லாதபடியால் வருமானம் குன்றியமையால் வரிகள் அதிகம் கட்ட வேண்டும் சட்டம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் டுபாயில் உள்ள அடுக்கு மாடிகள் இரவில் வெளிச்சம் இல்லாமல் பாவனையற்று இருப்பதைக் கண்டேன். வீட்டு சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் வாழ்வதால் இப்படியான நிலமை உள்ளது. தற்பொழுதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் சனத்தொகை குறைவதால் பல வீடுகள் குடியிருப்பவர்கள் இன்றி அல்லது குறைந்து பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. சில வீடுகள் போரினால் உட்பட்டு பாழடைந்தும் உள்ளன. உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிலையிது.

வெளிநாட்டில் உள்ளவர்களின் பண உதவியுடன் யாழ்ப்பாணத்தில் புதிய கோபுரங்கள், புதிய கோயில்கள், புதிய தேர்கள் ஆக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். சீரடி பாபா, ஆஞ்சனேயர் கோயில்களில் கூட்டம் அதிகம். ஆனால், பழைய கோயிலுக்குப் போவோர் தொகை குறைந்து கொண்டு வருவதனால் பூசை நேரங்களில் பக்தர்கள் குறைந்துள்ளது. பூசகர்களுக்கும் தட்டுப்பாடு. திருவிழாக் காலத்தில் ஓரளவு பக்தர்கள் வருவது உண்மை. தேர்கள் இழுப்பதற்கு ஆட்கள் இல்லை. சுவாமி தூக்குவதற்குக்கூட ஆட்கள் இல்லை. திருவிழாச் செய்வதற்கு பக்தர்கள் இல்லை. நல்லூர் முருகன் கோயிலில் வெளிநாட்டிலிருந்து திருவிழாச் செய்வது வரவேற்கப்படவில்லை. கோயில்கள் வருமானம் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளின் எள்ளெண்ணை சட்டிகள் விற்பனையினால் ஏற்படுகின்றன. இதே நிலைதான் வெளிநாட்டிலுள்ள சைவக் கோயில்களிலும் இருப்பதைக் காணலாம். கடவுளுக்குப் பயம் இல்லாவிட்டாலும் சனிக்கிரகத்துக்குப் பயம் அதிகம் சைவர்களிடம் உள்ளது.
கனடா, இங்கிலாந்து போன்ற இடங்களில் பல கோயில்கள் தனிப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பக்தர்கள் நலனுக்காக தாராளமாக பகல், இரவு உணவுகள் இலவசமாகப் பரிமாறப்பட்டு வருகின்றது. எவ்வளவு வீண் போகின்ற விபரம் தெரியாது. பிரசாதம் கொடுப்பதுடன் நிற்காமல் சோறு, கறிகள், இடியாப்பமா, பிட்டு, மற்றும் உணவுகள் கிடைக்கின்றன. சிங்கப்பூரில் நூடுல்ஸ் சில கோவில்களில் பரிமாறுகின்றனர். பக்தர்களை இழுக்கும் போட்டியில் சைவக் கோயில்கள் ஈடுபட்டுள்ளது சரியானதாகுமா என்பது கேள்விக்குறி. செல்வச்சந்நிதி, நயினை நாகபூசணி அம்மன் கோயில்களுக்கு வெளிநாட்டவர்கள் தினமும் வருவதாலும், ஏழைகள் அங்கேயே தங்கி இருப்பதாலும் தினசரி அன்னதானம் பக்தர்களிற்கு மிக உதவியாக உள்ளது. ஒரு காலத்தில் கதிர்காம மடங்கள் பக்தர்கள் நலன் காத்துச் சேவைகள் செய்தன.
சனத்தொகை பெருகுவதால் பட்ட இடர்களிலும் பார்க்கக்கூடியது சனத்தொகை, பக்தர்கள் குறைவால் ஏற்படும் இழப்புகள் அதிகம். இதனை நன்கறிந்த வெளிநாடுகள் அகதிகளை வரவேற்று அவர்கள் சந்ததி பெருக்கத்தால் தாம் பெறும் நன்மைகளை ஆராய்ந்து திட்டமிட்டுச் செயற்படுகின்றன. நமது குறைவினை (weakness) தமக்கச் சாதகமாகப் பயன்படுத்தும் வளம்பொருந்திய நாடுகள் தொடர்ந்து முன்னேற்றம் அடைகின்றனர்.
பல காரணங்களுக்காக வெளிநாட்டில் குடிபுகுந்த நாம் அடைந்த பலன்கள் (பொருளாதாரம், அமைதி, கல்வி, தொழில்வாய்ப்பு) அதிகம். அத்துடன் குடும்பச் சிதைவுகளால் ஏற்பட்ட தாக்கங்கள் பல. புதிய சூழல் (கலாசாரம், மொழி, சுவாத்தியம், வாழ்க்கை முறை, பழக்கங்கள், உணவு) ஆரோக்கியமானதாகவும், கவலைக்குரியதாகவும், போட்டி, பொறாமையை சிலரிடம் வளர்வதையும் காண்கிறோம். நம் தாய்நாடு வளர்ச்சி குன்றி வருவதற்கு நாமும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. http://www.abc.net.au/news/2018-06-27/china-ghost-cities-show-growth-driven-by-debt/9912186

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக