வெள்ளி, 1 ஜூன், 2018

சூதாட்டத்தில் தோல்வி... கணவர் கண்முன்னே மனைவி பலாத்காரம்.. ஒடிசாவில் பயங்கரம்

Jaya chitra - Oneindia Tamil  புபனேஷ்வர்: ஒடிசாவில் சூதாட்டத்தில் தோற்றதால், கணவரின் கண்முன்னேயே மனைவியை அவரது நண்பர் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 
ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள பாலியாபால் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், கடந்தமாதம் 23ம் தேதி தனது மனைவியை வைத்து நண்பர் தலாய் என்பவரிடம் சூதாட்டம் ஆடியுள்ளார். இதில் கட்டிட தொழிலாளி தோற்றுவிடவே, முன்னர் அளித்த வாக்குறுதிப்படி தன் மனைவியை தலாயிடம் ஒப்படைக்க அவர்  முடிவெடுத்துள்ளார். 
தன் மனைவியிடம் உண்மையைக் கூறினால் அவர் வரமாட்டார் என்பதால், குளம் வரை சென்று வரலாம் என கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த குளப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த தலாயிடம் தன் மனைவியை அவர் ஒப்படைத்துள்ளார். 
கணவர் கண்முன்னேயே அவரது மனைவியை தலாய் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அந்தக் கணவர், நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என மனைவியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், வீட்டிற்கு திரும்பியதும் தன் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பெற்றோர் துணையுடன் போலீசில் இது தொடர்பாக அவர் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் கணவரும், தலாயும் சூதாடியுள்ளனர். தலாயிடம் கையிலிருக்கும் பணத்தை இழந்த அந்த கணவன் இறுதியாக தனது மனைவியை வைத்து சூதாடியது தெரிய வந்தது. தற்போது தலாயுடன் அப்பெண்ணின் கணவரும் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியை வைத்து சூதாட்டம் ஆடி, அதில் தோற்றுப்போய், அவரை நண்பருக்கு கணவரே இரையாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக