சனி, 2 ஜூன், 2018

ஸ்டெர்லைட் ஆலையோடு முடியப் போவதில்லை! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது லஞ்ச புகார்?

Prabha - Oneindia Tamil  சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டாலும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் இன்னும் கொதிப்பில்தான் இருக்கிறார்கள். 
' இத்தனை பிரச்சினைகளுக்கும் தொழிற்சாலை மூடப்பட்டதற்கும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான்' எனக் கொதிக்கிறார் கொங்கு ஈஸ்வரன். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரம் உற்பத்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன். மேலும் அந்த அறிக்கையில், ' ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்துக்கும் 13 பேர் சுடப்பட்டதற்கும் யார் காரணம் என்ற விவாதம் அனைத்து தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 
ஆளுங்கட்சிதான் காரணமென்றும், பிரதான எதிர்க்கட்சி தான் காரணமென்றும், காவல்துறை தான் காரணமென்றும், சமூகவிரோதிகள் காரணமென்றும் அவரவர் பிறர் மீது பழி போடும் வசனங்கள் தினசரி தொடர்கதையாகி போனது. 
 இதையெல்லாம் மக்கள் பார்த்து குழம்பிப் போயிருக்கிறார்கள். இத்துனை பிரச்சினைகளுக்கும் இப்போது தொழிற்சாலை மூடப்பட்டதற்கும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான்.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளி வருகின்ற கழிவுகளை எப்படி சுத்திகரிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளோடுதான் ஆரம்பத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதன்படி கழிவுகள் சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கடமை. 
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தங்களின் கடமையை சரியாகச் செய்தார்களா என்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்திருந்தால் பாதிப்புகள் வந்திருக்க வாய்ப்பில்லை. தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்து மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தத்தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யாததால்தான் தமிழகம் முழுவதும் புற்றுநோயும் தோல்நோய்களும் பரவி மக்களின் உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறது. 
மதுவிலக்குக் காவல்துறை பிரிவு எப்படி மதுவிற்பனைக்குத் துணை போகிறதோ அதைப்போல மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தொழிற்சாலைக் கழிவுகளை மக்களை ஏமாற்றி நீர்நிலைகளில் கலப்பதற்குத் துணைபோகிறது. எல்லோரும் குற்றம் சாட்ட வேண்டியது ஸ்டெர்லைட் தொழிற்சாலையையும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும்தான். வேறு யாரும் காரணமல்ல. இது ஸ்டெர்லைட் ஆலையோடு முடியப் போவதில்லை. தமிழகம் முழுவதும் காற்றும் நீரும் மாசுபடுவதைக் கட்டுப்படுத்துவதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தோற்றுப்போயிருக்கிறது. 
அந்த துறையின் செயல்பாடுகளை பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அரசுத் துறையில் லஞ்சம் அரசுத் துறையில் லஞ்சம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறைகளும் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தொழிற்சாலை கழிவுகளும் மருத்துவக் கழிவுகளும் நகராட்சி கழிவுகளும் நீர்நிலைகளில் கலப்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். 
இந்தச் செயலற்ற தன்மைக்கு காரணம் அந்த துறையில் தலைவிரித்தாடுகின்ற ஊழலும் லஞ்சமுமா? உடனடியாக தமிழக முதல்வர் கவனத்தில் எடுத்துக் கொண்டு களமிறங்க வேண்டும். இல்லையென்றால் முழு நிலத்தடிநீரையும் சுவாசிக்கின்ற காற்றையும் கெடுத்து தமிழகத்தை சுடுகாடாக மாற்றப்போவது நிச்சயம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக