செவ்வாய், 12 ஜூன், 2018

சாமியார் பைய்யூஜி மகராஜ் தற்கொலையாம்? ம.பி. பாஜக அரசே காரணம் ...காங்கிரஸ் கட்சி.

மனஅழுத்தத்தினால் ஆன்மிகத் தலைவர் தற்கொலைமின்னம்பலம்: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்கள் சேவையாற்றிய ஆன்மிகத் தலைவரான பைய்யூஜி மகராஜ், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் சமூகப்பணிகள் ஆற்றி வந்தவர் பைய்யூஜி மகராஜ். ம.பி.யிலுள்ள இந்தூரில் இவருக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விலாஸ்ராவ் தேஷ்முக், கோபிநாத் முண்டே, சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் இவரது சீடர்களாக இருந்து வந்தனர். தன்னை ஆன்மிகக் குருவாக அறிவித்துக்கொண்ட இவர், அனைவருக்கும் ஆன்மிகம் சார்ந்த அறிவுரைகள் வழங்கினார். ஏழைகளற்ற, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே தனது குறிக்கோள் என்று கூறிவந்தார்.

இந்தூரில் வசித்துவந்த பைய்யூஜி மகராஜ், இன்று (ஜூன் 12) தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு கதவை உடைத்துக்கொண்டு இவரது அறைக்குச் சென்றனர் வீட்டிலிருந்த பணியாளர்கள். அதன்பின், உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தூர் பாம்பே மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது வீட்டில் ஒரு துப்பாக்கியும் தற்கொலை கடிதமொன்றும் கிடைத்ததாகக் கூறியுள்ளது ம.பி. காவல்துறை. “யாராவது குடும்பக் கடமைகளைக் கவனித்துக்கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிச் சோர்வடைந்துவிட்டேன்” என்று அந்தக் கடிதத்தில் பைய்யூஜி மகராஜ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதில் மீதமுள்ள விவரங்களை வெளியிட ம.பி. காவல்துறை மறுத்துவிட்டது.
இவரது மறைவுக்கு, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். “கலாசாரம், அறிவு, தன்னலமற்ற சேவை மூன்றும் ஒருங்கிணைந்த ஒரு மனிதரை இந்த நாடு இழந்துவிட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ம.பி. அரசில் ஐந்து சாமியார்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தார் சவுகான். அவர்களில் பைய்யூஜி மகராஜும் ஒருவர். ஆனால், தனக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை ஏற்க, அவர் மறுத்துவிட்டார்.
லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, 2011ஆம் ஆண்டு டெல்லியில் அன்னா ஹசாரே தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றபோது, அரசின் சார்பாக அவரைச் சமாதானப்படுத்த பைய்யூஜி மகராஜ் அனுப்பப்பட்டார். விலாஸ்ராவ் தேஷ்முக்கினால், மகராஜ் இந்த முயற்சியில் ஈடுபட்டார். அதன் பலனாக, ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தில் நான்காவது முறையாக மோடி முதலமைச்சர் பொறுப்பேற்றபோதும், பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றபோதும் அந்த விழாக்களில் பங்கேற்க மகராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதுவே, அரசியல் கட்சித்தலைவர்களிடையே இவர் எத்தகைய செல்வாக்குப் பெற்றிருந்தார் என்பதற்குச் சான்று.
பைய்யூஜி மகராஜின் இயற்பெயர் உதய்சிங் தேஷ்முக். ஜமீன்தார் மகனாகப் பிறந்தவர். மாடலிங் உலகில் பணியாற்றியவர். ஆடம்பரமான உடைகள், அணிகலன்கள், வாகனங்கள் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். இவரது இணையதளத்தில் ஆன்மிகத் தலைவர், ஊக்கமூட்டுபவர், சமூக சீர்திருத்தவாதி என இவரது அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது. பைய்யூஜி மகராஜின் முதல் மனைவி மாதவி 2015ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவர்களது ஒரே மகள் தனியே வசித்து வருகிறார். இதன்பின் பொதுவாழ்க்கையைத் துறப்பதாக அறிவித்த மகராஜ், கடந்த ஆண்டு ஆயுஷி சர்மா என்பவரைத் திருமணம் செய்தார். இதனால் இவரது பக்தர்களின் அதிருப்திக்கு ஆளானார். தற்போது, இவரது தற்கொலை பக்தர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த தற்கொலைக்கு ம.பி.யிலுள்ள பாஜக அரசே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது. “மாநில அரசு அளிக்கும் சலுகைகளை ஏற்றுக்கொண்டு, பாஜகவை ஆதரிக்க வேண்டுமென பைய்யூஜி மகராஜுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதனை அவர் நிராகரித்தார். இதனால் அவர் மனரீதியான அழுத்தத்திற்கு ஆளானார். எனவே, இந்த தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மானக் அகர்வால் என்பவர் கூறியுள்ளார்.
பைய்யூஜி மகராஜின் தற்கொலையானது, ம.பி.யிலுள்ள சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்தப்படுவதால் சர்ச்சை உண்டாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக