சனி, 23 ஜூன், 2018

லாலுவுக்கு பிணை விடுப்பு நீடிப்பு ...

லாலுவுக்கு ஜாமீன் நீட்டிப்பு!மின்னம்பலம்: மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கொன்றில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மருத்துவ சிகிச்சைக்காக ஆறு வார காலம் ஜாமீன் பெற்றிருந்தார். இவரது ஜாமீனை நீட்டித்து, நேற்று (ஜூன் 22) உத்தரவு பிறப்பித்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்.
1991-96 காலகட்டத்தில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் ஒருங்கிணைந்திருந்தபோது, மாட்டுத் தீவன ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது, அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உட்படச் சிலர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ. மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில், லாலு குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது ராஞ்சி சிபிஐ நீதிமன்றம். தும்கா மாவட்டக் கருவூல மோசடி வழக்கில் தண்டனை பெற்று, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் ராஞ்சி சிறையில் இருந்து வந்தார் லாலு. அவரது மூத்த மகன் தேஜ்பிரதாப் திருமணத்தை முன்னிட்டு, கடந்த மே மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பாஜகவின் பாபர் மசூதி இடிப்பு ஊர்வலத்தை  பிகாரில் தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்த புரட்சியாளன் லாலுவுக்கு  எதிரான பழிவாங்கல் தொடர்கிறது

அதன்பின், லாலுவின் மருத்துவ சிகிச்சைகளுக்காக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரப்பட்டது. அவருக்கு ஆறு வார காலம் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் இது முடிவடையும் நிலையில், ஜாமீனை நீட்டிக்கக் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது லாலு தரப்பு. இந்த வழக்கு, தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கும் நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
லாலுவின் உடல்நலம் சீராக இன்னும் இரண்டு மாத காலம் ஆகுமென்று லாலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது ஜாமீனை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம். தற்போது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர் கோடை விடுமுறையில் உள்ளனர். எனவே, கால்நடைத் தீவன ஊழலை விசாரிக்கும் வழக்கமான அமர்வில் அடுத்த வாரம் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு செய்யும் முடிவில் உள்ளதாகத் தெரிவித்தார் லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார்.
கடந்த மாதம் பாட்னாவிலிருந்து மும்பைக்குச் சென்ற லாலு பிரசாத் யாதவுக்கு, பாந்த்ராவிலுள்ள மருத்துவமனையொன்றில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. சிறுநீரகக் கோளாறு, உயர் அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட 15 நோய்களுக்காக, இவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக