சனி, 23 ஜூன், 2018

தமிழிசை : ஸ்டாலின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறார்! சேலம் எட்டு வழிசாலை ...

வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின்: தமிழிசைமின்னம்பலம்: பசுமைப் பாதைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் திமுக, தனது எதிர்மறை அரசியலைக் கைவிட வேண்டுமென்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று (ஜூன் 23) கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மத்திய அரசானது பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், மத்திய அரசையும் மோடியையும் எதிர்த்து வருபவர்கள் தலைகுனிய வேண்டுமென்றும் கூறினார்.
கர்நாடக முதலமைச்சராக குமாரசாமிக்குப் பதிலாக பாஜகவின் எடியூரப்பா இருந்திருந்தால், அங்கிருந்து ஆணைய உறுப்பினர்கள் யாரும் வரவில்லை என்றால், தமிழகத்தின் நிலையை எப்படி இருந்திருக்கும் என்று கேள்வியெழுப்பினார்.
“எய்ம்ஸ் மருத்துவமனை உட்படப் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொடுத்து வருகிறது பாஜக. கடந்த திமுக – காங்கிரஸ் கூட்டணியின் 10 வருட ஆட்சியில் தமிழகத்துக்குக் கொண்டுவந்த ஒரு மிகப்பெரிய திட்டத்தைச் சொல்ல முடியுமா? அவர்களால் சொல்ல முடியாது. ஆனால் கவர்னர் ஆய்வு செய்கிறார் என்று, இன்று அவருக்குக் கருப்புக்கொடி காட்டுகிறார்கள். தனது எதிர்மறை அரசியலை திமுக கைவிட வேண்டும். இப்போது பசுமைப்பாதையை எதிர்த்து போராடுவோம் என்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் கொண்டுவரப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக இருக்கிறார். இங்கு எந்த வளர்ச்சித்திட்டங்களும் வரக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார் தமிழிசை.
தமிழகத்தில் இருக்கும் பிற கட்சியினர், அரசியல் புரிந்துணர்வு இல்லாமல் பாஜகவை எதிர்ப்பதாகத் தெரிவித்தார். “ஆணையம் அமைக்கவில்லை என்று பாஜகவை எதிர்த்துப் போராட்டம் நடத்தினீர்கள்; கருப்புக்கொடி காட்டினீர்கள். குமாரசாமி இன்று தமிழகத்துக்கு எதிராக நடந்துகொள்கிறார்; அதற்கு எதிர்ப்பு காட்ட மறுக்கிறீர்கள். ஆணையத்தை அமைத்து, அதனை அரசிதழில் வெளியிட்டு, இன்று கர்நாடக உறுப்பினர்கள் இல்லாமல் ஆணையம் அமைந்திருக்கிறது. அதனால், நீங்கள் காட்டிய கருப்புக்கொடியையும் கருப்புப் பலூன்களையும் திரும்பப் பெறவேண்டும். உங்களது நடைபயணத்தை பெங்களூருக்கு மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் எதிர்க்கட்சிகளைச் சாடினார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது பற்றிப் பேசிய தமிழிசை, யார் கட்சி ஆரம்பித்து ஆவணங்களைச் சமர்ப்பித்தாலும், அங்கீகாரம் கிடைக்கும் என்று பதிலளித்தார். மக்கள் மனதில் அங்கீகாரம் கிடைப்பதே முக்கியம் என்று கூறினார். எதிர்க்கட்சிகளால் தான் வெற்றியைப் பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை தமிழகத்தில் சிலர் ஏற்படுத்தி வருவதாகவும், எத்தனை எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக