திங்கள், 11 ஜூன், 2018

காலாவின் உண்மையான வசூல் விபரம் கண்டுபிடிக்க முடியுமா? அரங்குகளுக்கு மகிழ்ச்சி இல்லை?

மின்னம்பலம் :இராமானுஜம்- மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் -
13 :    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் என்கிற நடிகர் பாட்ஷா பட வெற்றிக்குப் பின் விஸ்வரூப பிம்பமாகத் திரையுலகினரால் ஆராதிக்கப்பட்டார். பாட்ஷா பட வெற்றி விழாவில் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசியது பற்றி, அன்றைய முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா முன்னிலையில் ஆவேசமாக ரஜினிகாந்த் பேசியதைக் கேட்ட ஊடகங்கள், அவரை அன்று முதல் ரியல் சூப்பர் ஹீரோவாக எழுதத் தொடங்கின. இன்று வரை அது தடையின்றி, சுய பரிசோதனை இன்றித் தொடர்கிறது.
இந்தியிலும் தெலுங்குப் பட உலகிலும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நேர்மை இன்று வரை தொடர்கிறது. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு நல்ல வழக்கத்தை எந்தத் தயாரிப்பு நிறுவனமும் கடைபிடிப்பதில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைக்குப் பின் இந்த நிலை மாறும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன் படத்தைத் தயாரித்து சன் பிக்சர்ஸ். இந்நிறுவனம் அனைத்துக் கணக்குகளையும் வெள்ளையாகக் கையாளக்கூடியது. அந்நிறுவனமே தமிழ்நாடு வசூல், பட வியாபாரத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியவில்லை. காரணம் தமிழ் சினிமாவில் கையாளப்படும் கறுப்பு வெள்ளை வரவு செலவு கலாச்சாரம்தான்.

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான லைகா, தமிழ் சினிமாவில் தயாரிப்பு ,விநியோகத் துறையில் முதன்மை நிறுவனமாக உள்ளது. காலா படத்தின் ஏரியா விநியோக உரிமையை அதிகாரபூர்வமாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் லைகா அறிவித்தது. ஆனால், என்ன விலை, என்ன அட்வான்ஸ் என்பதை அறிவிக்கவில்லை. அது பற்றி விசாரித்தபோது, ‘இங்கு எதுவுமே நேர்மையாக இல்லை; எங்களால் பகிரங்கமாக உண்மைகளை சம்பந்தபட்டவர்களுடன் பேச முடிகிறது. பொது வெளியில் அறிவிக்க முடியவில்லை’ எனக் கூறினார் லைகாவில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத ஊழியர் ஒருவர். இந்த பலவீனமான போக்குதான் ரஜினி என்கிற பிம்பத்தின் உண்மை நிலவரத்தை எழுதாமல், மேலும் பிரம்மாண்டமான செய்திகளை எழுத ஊடகங்களைத் தூண்டுகிறது.
எந்த ஒரு முன்னணி நடிகருக்கும் எதிரான அல்லது உண்மைச் செய்திகளை எழுத ஊடகங்கள் தயக்கம் காட்டுவதற்குப் பிரதான காரணம், அடுத்த முறை பேட்டி கொடுக்க மாட்டார் என்கிற பயமே என்கிறார் பிரபல தமிழ் நாளிதழ் நிருபர் ஒருவர். இதுதான் தமிழ் கதாநாயகர்களின் பலம் என்கிறார் ஆங்கில நாளிதழ் செய்தியாளர்.
மூன்று நாட்களில் காலா 100 கோடியை வசூலித்தது என்று நேற்று காலை முதல் காட்சி ஊடகங்கள் கூறத் தொடங்கின. அதற்கான அடிப்படைத் தகவல் எங்கே என்றால் எவரிடமும் இல்லை. முதல் நாள் காலா வசூல் கபாலியைப் போல் இல்லை என்கிற தகவல் சினிமா வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவியது.
சென்னையில் சில குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் நேற்று வரை அரங்கு நிறைந்த காட்சியாக ஓடியதை வைத்து தமிழ்நாடு முழுவதும் காலா கல்லா கட்டியது என்ற பிம்பத்தை ஊடகங்கள் எழுதின. மூன்று நாட்களில் 100 கோடி என எழுதுவது தவறான செய்தி இல்லையா என அந்தச் செய்தி எழுதிய பத்திரிகையாளர்களிடம் கேட்டால், ‘ரஜினிக்கு எதிராக எப்படி எழுத முடியும்’ என்ற எதிர்கேள்வி வந்து விழுந்தது. காலா என்னதான் வசூல் செய்தது? நாம் தான் தவறாக மதிப்பீடு செய்து விட்டோமா என்ற பயத்துடன் 100 கோடி எங்கே எனத் தடம் பிடித்து அறிந்துகொள்ளும் முயற்சியைத் தொடங்கினோம்.
அமெரிக்காவில் கபாலியைக் கடந்தது காலா, மலேசியாவில் 300 திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சி என்றெல்லாம் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. காலா - எந்திரன் இரு படங்களின் மலேசிய விநியோக உரிமையை 35 கோடிக்கு வாங்கியிருந்தனர். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுமையும் தமிழ்ச் சமூகத்திடம் காலா படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புணர்வு காரணமாக, காலா மலேசிய உரிமைக்கு 10 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை வசூல் பரவாயில்லை, திங்கட்கிழமை படத்திற்கு முன்பதிவில் முன்னேற்றம் இல்லை என்கிறது மலேசியத் தகவல். ‘அதிகபட்சமாக 4 கோடி வருவாய் கிடைக்கும். 6 கோடி நஷ்டம் என்பது தவிர்க்க முடியாது’ என்கின்றனர். கபாலி மலேசியாவில் 9 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கபாலி படத்தின் அமெரிக்க உரிமை 8 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் விளம்பர யுக்தியால் கபாலி அமெரிக்காவில் 18 கோடி வருமானத்தைப் பெற்றுத் தந்தது. இந்த சாதனையை இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் நிகழ்த்தியதில்லை. கபாலி இதைச் சாதித்துத் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்தது. மலேசியா தவிர்த்து வெளிநாடுகளில் லைகா-ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மூலமாக காலா படத்தை ரிலீஸ் செய்தது அதிகபட்சமாக 6 கோடி வருவாய் என்கிறது அமெரிக்கத் தகவல்.
நார்வே நாட்டிற்கான காலா விநியோக உரிமை விலை 1.60 கோடி எனக் கூறப்பட்டது. 60 லட்சத்திற்கு மேல் படம் வேண்டாம் என அங்குள்ள விநியோகஸ்தர்கள் மறுத்துவந்தனர். தூத்துக்குடிக்கு ரஜினி சென்று வந்த பின் படத்தை நார்வேயில் வெளியிடுவது இல்லை என நார்வே தமிழ் படவிநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தடை விதித்துவிட்டதால் படம் அந்த நாட்டில் ரிலீஸ் ஆகவில்லை.
லண்டனில் படம் ரிலீஸ் செய்யப்பட்டாலும் அங்கு அதிகமாக தமிழ்ப் படங்களைப் பார்ப்பது புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள். காலா படத்தைப் புறக்கணிப்போம் என்று அவர்கள் சுவரொட்டி வெளியிட்டுப் பிரச்சாரம் நடத்தியதால் காலா அங்கும் கல்லா கட்டவில்லை. வெளிநாடுகளில் இந்தியாவைப் போன்று தினந்தோறும் 4 காட்சிகள் திரையிடப்படுவதில்லை. குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். கபாலி படத்தின் வெளிநாட்டு உரிமையை மொத்தமாகக் கொடுக்காமல் தனித்தனியாகப் பிரித்து வியாபாரம் செய்தார் தாணு. காலா படத்திற்கு அப்படி வியாபாரம் செய்ய முடியவில்லை,
வெளிநாடுகளில் அதிகபட்சமாக 20 கோடி வரை வருமானம் காலாவுக்கு கிடைக்கும். ஊடகங்கள் சொன்னபடி மீதி 80 கோடி இந்தியாவில் கிடைத்ததா என்பதை நாளை பகல் 1 மணிக்குப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக