சனி, 9 ஜூன், 2018

வேல்முருகன் : அதிமுக அரசு திணிக்கப்பட்ட தலைமைச் செயலரால் இயக்கப்படுகிறது

THE HINDU TAMIL : ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வழியில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு திணிக்கப்பட்ட தலைமைச் செயலரால் இயக்கப்படுவதுதான் இதற்குக் காரணம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கால நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் போய் கையை விரித்துவிட்டது அதிமுக அரசு. ஆம். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை; காரணம் அணையில் போதிய நீர் இல்லை; நீர் வரத்தும் போதிய அளவுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதையும் சட்டப்பேரவையிலேயே, விவாதிக்க அனுமதி இல்லாத 110 விதியின் கீழேயே அறிவித்துவிட்டார் முதல்வர். ஏன் இப்படிச் செய்தார்?

வேறு வழியில்லை அவருக்கும் அவரது அரசுக்கும். உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், நீட் நுழைவுத் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டதைப் போல்தான் இதையும் ஏற்றுக்கொண்டுவிட்டார். தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இப்போதும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வழியில்லை.
குறுவை, சம்பா, தாழடி என எப்போகமும் இனி இல்லை என்பதாகவே சொல்வதாகப் படுகிறது. காவிரி நீர் கானல் நீரானால் வேறு என்ன நடக்கும்?
மத்திய பாஜக மோடி அரசு நினைப்பதுதான் நடக்கும்; அதாவது தமிழ்நாடு பாலைவனமாக்கப்படும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கான கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக்கப்படும். அதை நோக்கிய அறிவிப்புதான் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படாது என்பதும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இது அதிமுக அரசு செயல்பட அனுமதிக்கப்படாததன் விளைவுதான் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு திணிக்கப்பட்ட தலைமைச் செயலரால் இயக்கப்படுவதுதான் இதற்குக் காரணம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைகட்டி நிற்கவைத்து, ஆளுநரை - அதிகாரிகளைக் கொண்டு ஆட்சி நடப்பதில் தேர்தல், மக்களாட்சி, ஜனநாயகம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று ஆக்கப்பட்டிருக்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக