புதன், 6 ஜூன், 2018

ஸ்டாலின் -தினகரன் சந்திப்பு?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் -தினகரன் சந்திப்பு?
மின்னம்பலம்: “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துதான் எடப்பாடியும் காத்திருக்கிறார். ஸ்டாலினும் காத்திருக்கிறார். தினகரனும் காத்திருக்கிறார். எப்படியும் நாளை தீர்ப்பு வந்துவிடும் என்றுதான் ஸ்டாலின் தரப்பில் சொல்லிவந்தார்கள். ஆனால், நாளை தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்த வாரத்தில்தான் தீர்ப்பு வரும் என்று சட்ட நிபுணர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஸ்டாலினைப் பொறுத்தவரை, எப்படியும் தீர்ப்பு 18 பேரின் எம்.எல்.ஏ.க்களின் பதவியைக் காப்பாற்றிவிடும்; அதையடுத்து உடனடியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி ஆட்சியைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். அதற்கான ஒவ்வொரு காயாக ஸ்டாலின் தரப்பினர் நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக எடப்பாடி ஆட்சியில் இருக்கிறார். இந்தத் தீர்ப்புதான் அவரை வீழ்த்த நல்ல ஆயுதம் என்று ஸ்டாலின் தரப்பினர் தினகரன் தரப்பினரிடம் பேசியிருக்கின்றனர். அந்த அடிப்படையில் திமுக சில வியூகங்களை வகுத்து வருகிறது.

அதனால் தினகரன் தரப்பிடம் இப்போது இருக்கும் 18 பேரை தக்க வைத்துக்கொள்ள தினகரனுக்கு அனைத்து உதவிகளையும் செய்யவும் திமுக தயாராக இருக்கிறது. இதுபற்றி தினகரனுக்கும் ஸ்டாலின் தரப்பினர் சொல்லிவிட்டார்களாம். 18 பேர் தீர்ப்புக்கு முன்னதாகவோ பின்னதாகவோ ஸ்டாலினையும் தினகரனையும் நேரடியாக சந்தித்துவிட வைத்து விட வேண்டும் என்று ஒரு முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் எடப்பாடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. சந்திப்புக்கான நேரம், இடம் இன்னும் முடிவாகவில்லை. அதை மிகவும் ரகசியமாக செய்ய வேண்டும் என இரண்டு தரப்புமே நினைக்கிறது. தினகரனும் ஆட்சியை முடித்துவிட்டு தேர்தல் மூலம் தன்னை நிரூபிக்கும் மூடுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இது இப்படி இருக்க, சில நாட்களுக்கு முன் நடந்த அமமுக தலைமை அலுவலக திறப்பு விழாவில் தினகரனின் தீவிர ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதை வைத்து இன்னொரு வதந்தி பரவியது. ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது வெற்றிவேல் ஏற்கனவே திட்டமிட்ட வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதாகவும், தங்க தமிழ்ச்செல்வன் உடல் நலம் இன்றி கோவையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது. தனது எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கூட கைநழுவிப் போய்விடக் கூடாது என்பதில் தினகரன் தெளிவாக இருக்கிறார் ’’ என்று வாட்ஸ் அப் மெசேஜ் செண்ட் பண்ணியது.
அதைப் படித்துவிட்டு ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டஸை போஸ்ட் செய்யத் தொடங்கியது.
“ஏற்கனவே நாம் பேசிக் கொண்ட மாதிரி திமுக கூடாரத்தில் நடப்பதெல்லாம் முதல்வர் எடப்பாடி உடனுக்குடன் தெரிந்துகொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் ஸ்டாலின் தீவிர ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கும் எடப்பாடி கடந்த சில நாட்களாகவே பலரையும் அழைத்து ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார். மூத்த சட்ட வல்லுநர்கள், சபாநாயகர் தனபால் மற்றும் தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சட்ட வல்லுநர்கள் தரப்பில் ரொம்பவே நம்பிக்கை தரும்படிதான் சொல்லியிருக்கிறார்கள். ‘தீர்ப்பு எப்படி இருந்தாலும் அப்பீலுக்கு இடமுள்ளது. எனவே ஆட்சிக்கு உடனடியாக எந்த ஆபத்தையும் வரவழைக்காது. மேலும், தீர்ப்பு வழங்கும் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை முன் வைக்கவும் சட்டத்தில் வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை நடந்தால் அது ஆட்சிக்கு மேலும் சாதகமாகவே அமையும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அடுத்து சபாநாயகரிடமும் ஆலோசித்திருக்கிறார். ‘பல பேர் எடியூரப்பா வழக்கை இதோடு ஒப்பிடுறாங்க. அது தப்பு. தகுதி நீக்கம் செய்யும் முன்பே டெல்லியைச் சேர்ந்த அரசியல் சட்ட வல்லுநர்களின் கருத்தையும் கேட்டுதான் செஞ்சிருக்கோம். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. அதனால் தீர்ப்பு நமக்கு சாதமாக வந்தாலும் வரலாம்’ என்றே சொல்லியிருக்கிறாராம் சபாநாயகர்.
ஆனாலும் தீர்ப்பு எப்படி வந்தாலும் தினகரன் தரப்பில் இருக்கும் 18 பேரில் பத்து எம்.எல்.ஏ.க்களாவது தம்மிடம் வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக என்ன விலை கொடுக்கவும் ஆளுந்தரப்பு தயாராக இருக்கிறது. பதினெட்டு எம்.எல்.ஏ.க்களையும் எல்லா வகையிலும் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தீவிரமாகியிருக்கின்றன. ‘இன்னும் மூன்று வருஷம் ஆட்சியில் இருந்து அனுபவிக்கப் போகிறீர்களா? இல்லையென்றால் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிக்கும் திமுகவின் திட்டத்துக்கு பலியாகப் போகிறீர்களா?’ என்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் கேட்டு வருகிறது எடப்பாடி தரப்பு. நடக்கப்போவது ஸ்டாலின் -தினகரன் சந்திப்பா அல்லது 18 எம்.எல்.ஏ.க்களில் சிலருடன் முதல்வர் சந்திப்பா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் கேள்வி’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக