புதன், 6 ஜூன், 2018

ரஜினிக்கு சொம்படிக்கும் காவி கஸ்தூரியும் கைடு ரவிந்திரன் துரைசாமியும் !

வினவு  திரைப்படத்தின் பிசினஸ் என்பது வெறும் வியாபாரம் மட்டுமே, அதை ரஜினியின் அரசியலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று குப்பைக்கட்டு கட்டுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
 நேற்று (05.06.2018) நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு விவாதம். “ரஜினி கமல் செய்வது அரசியலா, வர்த்தகமா, விளம்பரமா என்று தலைப்பில் நெறியாளர் விஜயன் நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் மார்க்கெட் இல்லாத நடிகை கஸ்தூரி, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, தி.மு.க.வின் அப்பாவு, பா.ம.க.வின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.< இதில் ரவீந்திரன் துரைசாமியும், கஸ்தூரியும் நடுநிலையாளர்கள் என்ற பாதுகாப்பான பெயரில் காலர் மைக்கே வெட்கப்படும் அளவில் ரஜினிக்கு பக்கவாத்தியம் அடித்தார்கள். தமிழகத்தில் வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு கூட வாக்குகள் இல்லாத கட்சி என்று கிண்டல் செய்யப்படும் பாரதிய ஜனதாவிற்கு நேரடி விவாதங்கள் மூலம் வாழ்வளித்த தொலைக்காட்சிகளில் முக்கியமானது தந்தி டி.வி. அந்த டிவியில் நடுநிலையாளராக இறக்கப்பட்டு மோடியின் ரசிகராக காட்டிக் கொண்டவர் இந்த ரவீந்திரன் துரைசாமி. இவர் ஒரு வழக்கறிஞராம். எந்தக் கோர்ட்டில் என்ன வழக்கு வாதாடுகிறாரோ தெரியவில்லை.

இவர் ஒரு நடமாடும் தமிழக அரசியல் கலைக்களஞ்சியம் என்று பலரும் நம்புமளவுக்கு, வரலாறு, தேர்தல் முடிவுகள், அரசியல் ஆளுமைகள், அவர்களது கொள்கைகள், அந்தக் கொள்கைகளின் யூடர்ன்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அதே நேரம் அந்த யூடர்ன் அல்லது அந்தர் பல்டிகளை தனது தேவைக்கேற்ப பயன்படுத்துவார். அதனாலேயே இவரோடு மல்லுக்கட்ட ஓட்டுக்கட்சிகளின் நிலைய வித்வான்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். இருப்பினும் மோடியின் ஒளிவட்டத்தை மட்டும் சற்று கவனமாகவே தூக்கி காட்டுவார்.
அப்பேர்ப்பட்டவர் மோடி-பா.ஜ.க.-வின் அஜெண்டாவாக உருட்டப்படும் ரஜினி குறித்து இந்த விவாதத்தில் எப்படி அம்மணமாக நடந்து கொண்டார் என்பதைப் பார்க்கலாம்.
“இத்தனை உயிர் குடித்த போராட்டங்கள் இல்லாமல் தமிழகம் எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்” என்று ஒரு செலவே இல்லாத டிவிட்டரில் டிவிட்டினார் ரஜினி. அரசே அறிவித்த 13 உயிர்களை கொன்று குடித்தது போலீஸ் தான் என்று ஒட்டு மொத்த தமிழகமும் ஆத்திரத்தில் கொதித்த போது, இல்லை அதற்கு காரணம் சமூகவிரோதிகள் விஷமிகள் என்று போராடிய மக்களையும் கொல்லப்பட்ட மக்களையும், படுகாயமுற்ற மக்களையும், இந்த மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து இயக்கங்களையும் நாக்கூசாமல் அவதூறு செய்தார் ரஜினிகாந்த். பின்னர் சமூக வலைத்தளங்களில் தமிழக இளைஞர்கள் ரஜினிகாந்தை கதறக் கதற அம்பலப்படுத்தினார்கள் இருப்பினும் ரஜினியை முன்னிறுத்திய பா.ஜ.க. மற்றும் அதன் அறிஞர்களான குருமூர்த்தி போன்றோர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அனைத்தும் ரஜினி சொன்னது சரிதான் என்று திரும்பத் திரும்ப பேசி வந்தனர்.
அதில் தினமலம் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் தினமலர் முதல் மோடி மீடியா என்று நடந்து கொள்ளும் தமிழ் இந்து வரை அனைவரும் உண்டு. அடுத்ததாக சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படும் ரஜினிகாந்த் தன்னுடைய காலா திரைப்படத்திற்கு அனுமதிக்கப்பட்ட திரையரங்க கட்டணத்தை தாண்டி யாரும் விற்கக் கூடாது என்று சொல்வாரா என பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டது. தி.மு.க.-வும் முரசொலி பத்திரிக்கையில் தூத்துக்குடி போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினியைக் கண்டித்து எழுதியது. இதை வைத்து நெறியாளர் விஜயன் ரவீந்திரன் துரைசாமியிடம் கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு அவரோ பா.ம.க., தி.மு.க., போன்ற கட்சிகள் அரசியல் விளம்பரங்களுக்காக இதை பேசுகிறார்கள் என்று ஒரே அடியாக அடித்து விட்டார். கூடுதலாக ரஜினிக்கும் இது விளம்பரம்தான் என்றார்.
இது தொடர்பாக பா.ம.க. பாலு கொஞ்சம் சிலிர்த்த போது வீரப்பனை அரக்கன் என்று சொன்ன ஜெயலலிதாவை இவர்கள் ஏன் எதிர்க்கவில்லை, ரஜினி என்பதால் எதிர்க்கிறார்கள் என்று குட்டினார். மொத்தத்தில் ரஜினி காலா தொடர்பான விவாதங்கள், கேள்விகள், குறுக்கீடுகள் வரும்போது அவர் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் என்ன?
ரஜினிகாந்த் எனும் சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் மட்டுமல்ல, அஜித் – விஜய் போன்ற நட்சத்திரங்களின் படங்களும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. காரணம் திருட்டு வி.சி.டி. படையெடுப்பால் நான்கு நாட்கள் மட்டுமே ஒரு திரைப்படம் ஓடும் என்றார். வி.சி.டி. எல்லாம் பழைய சாமான்கள் கடைக்குப் போய் வருடங்கள் பல ஆனதும், தற்போது டொரண்ட் மூலம் செல்பேசி வழியாக மக்கள் வி.சி.டி.யை விட மலிவாக அல்லது இலவசமாக படங்களை பார்க்கிறார்கள் என்பது இந்த கலைக்களஞ்சியத்திற்கு தெரியவில்லை.
அடுத்து நான்கு நாட்கள் மட்டுமே ஓட்ட வேண்டிய நிலையில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய சினிமா வியாபாரம். ஆகவே திருட்டு வி.சி.டி.யை ஒழிக்காமல் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இந்த கட்டணத்தை – அதாவது கட்டணக் கொள்ளையை – நிறுத்த முடியாது என்று நியாயப்படுத்துகிறார் துரைசாமி. அதாவது திருட்டு வி.சி.டி. எனும் ஒரு மோசடி அமலில் இருப்பதால் பிளாக் டிக்கெட் என முறைகேட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். அதற்கு ரஜினி எந்த விதத்திலும் காரணம் அல்லவாம். “சிஸ்டம்” கெட்டுப் போய் விட்டதாக அவர் கூறி இருந்தாலும் தன்னுடைய படத்திலேயே அந்தக் கெட்டுப்போன சிஸ்டத்தை ஏற்றுக் கொண்டு இஷ்டப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதே இதன் பொருள்.
அரசியலில் அவர் ஆயிரம் நீதி போதனைகள், ஆன்மீக அரசியல் எனும் இந்துத்துவ இலக்குகள், “சிஸ்டெம்” கெட்டுப் போய்விட்டது என்ற உளறல்கள் அனைத்துக்கும் பொருளே இல்லையாம். இந்த திரைப்படத்தின் பிசினஸ் என்பது வெறும் வியாபாரம் மட்டுமே, அதை ரஜினியின் அரசியலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று குப்பைக்கட்டு கட்டுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. முதலில் ரஜினிக்கு காலா திரைப்படத்தில் கிடைத்திருக்கும் ஊதியம் எவ்வளவு? 50 கோடியோ 100 கோடியோ எவ்வளவோ இருக்கட்டும். இந்த படத்தின் வியாபாரம் என்பது இந்த படத்திற்கான தயாரிப்பு செலவோடு அதைத்தாண்டி ஓரிரு மடங்கு லாபமும் வேண்டும். இதுதான் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் எனும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நோக்கம் அல்லது வியாபார உத்தியாக இருக்கும். 100 அல்லது 200 கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அதிக விலைக்கு வாங்கினால் மட்டும் தான் அந்த லாபம் ரஜினி மருமகனுக்கும், மகளுக்கும் இறுதியில் ரஜினிக்கும் போய்ச் சேரும். அதேபோல அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக விலைக்கு தள்ளினால்தான் அவர்கள் கொஞ்சமோ அதிகமோ லாபம் எடுக்க முடியும்.
இறுதியில் காலா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 1000, 2000 ரூபாய் கொடுத்தால் மட்டும் தான் ரஜினிக்கும் மருமகனுக்கும் படியளக்க முடியும். இப்போது இந்த முறைகேட்டிற்காக ரஜினியை கண்டிக்க முடியாது, ஏனெனில் இந்த சிஸ்டம் அப்படித்தான் செயல்படுகிறது என்று வெட்கமே இல்லாமல் பேசுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
இது கூட பரவாயில்லை, ரஜினி பேசும் அரசியல் பா.ஜ.க.-வின் அரசியல்தான் என்று அப்பாவு அடித்துச் சொன்ன போது மற்றுமொரு பொய்யை கூசாமல் வெளியிட்டதோடு, பா.ஜ.க.-வின் நிகழ்ச்சி நிரல் ஒன்றையும் இலவச விளம்பரமாக வெளியிட்டார் ரவீந்திரன் துரைசாமி. அதாவது தூத்துக்குடி போராட்டத்திற்கு காரணம் மீனவர்கள். அந்த மீனவர்கள் கிறித்தவர்கள் என்பதால் கிறித்தவ சபைகளே தென்மாவட்டங்களின் போராட்டத்திற்கு தூண்டு கோலாக இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். பேசுகிறதாம். இதனால் கிறித்தவர்களல்லாத மக்கள் தத்தமது பகுதிகளில் இருக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக மீனவர்களே இருப்பதாக கருதுவதாகவும் பிரச்சாரம் செய்கிறதாம் சங்கப் பரிவாரம். ஆனால் ரஜினியோ தூத்துக்குடிக்கு சென்று மீனவர்களுக்கு ஆதரவாக பேசுவதால் அவர் பா.ஜ.க.-வின் அரசியலைப் பேசவில்லை என்று முழு பூசணிக்காயை ஊறுகாயில் மறைக்கிறார் துரைசாமி.
ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வால், பா.ஜ.க.-வின் அமைச்சர்கள் – தமிழக தலைவர்கள், தினமலர் – தினமணி – தி இந்து போன்ற ஊடகங்கள், எடப்பாடி அரசு, மத்திய அரசு அனைவரும் தூத்துக்குடி போராட்டம் குறித்து என்ன பேசுகிறார்களோ அதைத்தான் இன்னும் பிரலப்படுத்தி பேசினார் ரஜினி. இப்படி இருக்கும் போது அதாவது போராடிய மக்களை தூண்டி விட்ட விஷமிகள், சமூக விரோதிகள் என்று கொச்சைப் படுத்தி பேசிய ரஜினி, திரேஸ்புரத்தின் மீனவர்களுக்கு ஆதரவாக பேசுகிறாராம். ரஜினிக்கு தூத்துக்குடி ஸ்கிரிப்ட் எழுதி அனுப்பியது குருமூர்த்தி என்றால், அவருடன் நேரடியாக சென்று இயக்கியது, பாதுகாத்தது மத்திய உளவுத் துறை அதிகாரிகள். தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதால் ரஜினியை இறக்குகிறோம், நீங்கள் எல்லாரும் ஆதரியுங்கள் என்று வெங்கய்யா நாயுடு  கவர்னர் மாளிகையில் அனைத்து ஊடக பிரமுகர்களையும் அழைத்து பேசியதாக அப்பாவு சொன்னதும், நெறியாளர் விஜயன் ஆதாரம் கேட்டார். வேணும்னா என் மேல் வழக்கு போடுங்கள் என்று அப்பாவு பேசியதும், விஜயன் ஏதோ சமாளித்தார்.
ரஜினி யார் சொல்லி பேசுகிறார் என்பது தெரியாது, அவர் சொந்தமாகவும் பேசியிருக்கலாம் என்று கோதாவில் அடுத்து குதித்தார் கஸ்தூரி. அரசியலே மோசம், அனைவரும் விளம்பரங்களை தேடுகிறார்கள், பிளாக் டிக்கெட் எல்லாம் சகஜம் என்று பேசிய கஸ்தூரி இப்படி அப்பட்டமாக ரஜினி – கமலுக்கு ஜிங்ஜாக் அடிப்பதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நம்புமளவுக்கு ஒரு மகா முட்டாள் என்பதால் இந்த காமடி பீஸை இதற்கு மேல் இழுக்கத் தேவையில்லை.
ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியதிலிருந்து, அது தொடர்பாக தந்தி டி.வி. நடத்திய கருத்துக் கணிப்புகளில் எல்லாம் தமிழகத்தில் ஜெயா, கருணாநிதிக்கு பிறகு வெற்றிடம் இருக்கிறது, அந்த இடத்தில் ரஜினிக்கு வாய்சும், மாசும் இருப்பதாக தொடர்ந்து பேசியவர் இந்த துரைசாமி.
அதனால்தான் கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்தே ஆகவேண்டும், அது வரை அதாவது ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை, அனைவரும் யானையைப் பார்த்த பார்வையற்றவர்கள் (இங்கே குருடர்கள் என்றார் துரைசாமி. இதிலும் கலைக்களஞ்சியம் அப்டேட்டடாக இல்லை) போல அவரை பா.ஜ.க.விற்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றார் துரைசாமி.
அய்யா இந்தக் கத்திரிக்காய் முற்றுவது இருக்கட்டும், இது விளைந்ததே காவித் தோட்டத்தில்தான். நீங்கள் காவித் தோட்டத்தின் பிரமுகர்களிடம் ஏதோ டீல் பேசி வாங்கிய வரங்களுக்கு மேல் கூவுகிறீர்களே, அந்த டீலை என்னவென்று விளக்கினால், மற்ற சமூக ஆர்வலர்கள் பயிற்சி எடுப்பதற்கு உதவியாக இருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக