ஞாயிறு, 24 ஜூன், 2018

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும்: ஸ்டாலின் எச்சரிக்கை

tamil.thehindu.com அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு “கொல்லைப்புறமாக” ஆட்சி செய்வது தொடர்ந்தாலோ, மீண்டும் ஆய்வு நடத்த ஆளுநர் முற்பட்டாலோ இன்று நடைபெற்றதை விட மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டுமென இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மாலை விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடையே ஸ்டாலின் பேசியதாவது: “இந்தப் போராட்டம் நிச்சயமாக இன்றோடு முடிகின்ற போராட்டம் அல்ல. தமிழகத்தினுடைய ஆளுநர் மாநில சுயாட்சிக்கு மரியாதை தந்து அவர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்று சொன்னால் இந்த போராட்டம் தொடரும்! தொடரும்! தொடரும். இது ஏதோ பேச்சுக்காக சொல்வது அல்ல திமுக காரன் சொன்னதை செய்வான்.

எனவே, கவர்னரை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுடைய அரசியல் மரபின் படி உங்களுக்கு இருக்கக்கூடிய சட்டத்தின்படி நீங்கள் ஆற்றக்கூடிய பணிகளில் நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். நீங்கள் ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதற்கு, இந்த ஆட்சியை வைத்துக்கொண்டு முற்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சுட்டு விரலுக்கு எடப்பாடி பழனிசாமி உங்களுக்கு குனிந்து, வளைந்து செயல்படலாம்.
ஜனநாயக ரீதியிலே போராடக்கூடிய போராட்ட உணர்வு படைத்திருக்கக் கூடியவர்களை எல்லாம் அடக்குமுறை வைத்து நீங்கள் அடக்கிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக உங்கள் கனவு திமுக விடம் எடுபடாது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். மாநில சுயாட்சிக்கு எதிராக குரல் கொடுத்தால், குறிப்பாக, திமுகவைச் சார்ந்திருக்கக்கூடிய எங்களை நீங்கள் திடீரென்று கைது செய்ய தொடங்கியிருக்கிறீர்கள்.
எப்பொழுது நீங்கள் கவர்னராக பொறுப்பேற்றீர்களோ அன்றிலிருந்து தொடர்ந்து நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஏதோ ஒரு முதல்வரை போல செயல்படுகிறீர்கள். நீங்கள் முதல்வராக வேண்டுமென்று சொன்னால் அ.தி.மு.க தலைமையை மாற்றிவிட்டு வந்து உட்காருங்கள். நாங்கள் நேருக்கு நேராக உங்களை சந்திக்க காத்திருக்கிறோம், தயாராக இருக்கிறோம்.
எனவே, "கொல்லைப்புறமாக" இந்த ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டு ஏதோ அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு ஆட்சியை நடத்தலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கனவு நிச்சயம் பலிக்காது. அதை தவிடுபொடி ஆக்குவது தான் எங்களுடைய முதல் வேலை.
ஆகவே, நான் மீண்டும் சொல்ல விரும்புவது இந்த ஆய்வுப்பணியை நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்வீர்கள் என்று சொன்னால். மீண்டும் மீண்டும் இப்பொழுது நடத்தக்கூடிய இந்த போராட்டத்தைவிட இன்னும் அதிகமான வகையில், வேகமான வகையில், தீவிரமான வகையில் எங்களுடைய போராட்டம் இருக்கும்.
இப்பொழுது கூட ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. விடுதலை செய்திருக்கிறீர்கள், மீண்டும் நாங்கள் கவர்னர் மாளிகைக்குக் கூட செல்வோம். அந்த உணர்வோடு தான் இருக்கிறோம். போகிறோமோ, போகவில்லையோ ஏதோ ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. காவல்துறைக்கு நான் காலையிலேயே சொல்லிவிட்டேன். நீங்கள் எங்களை விடுதலை செய்வது என்பது ஏதோ கண்ணாம்பூச்சி விளையாட்டைபோல கைது செய்கிறீர்கள், விடுதலை செய்கிறீர்கள்.
எனவே, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்று சொன்னால், மிகத் தீவிரமான ஒரு போராட்டத்தை நடத்தக்கூடிய ஒரு சூழ்நிலை நிச்சயமாக வரும், வரப்போகிறது. அது, எப்பொழுது என்று கேட்டால், ஏன் நாளைக்கே வரலாம் ஏன் இன்று இரவே வரலாம். எனவே, இந்த ஆட்சிக்கும் குறிப்பாக இந்த கவர்னருக்கும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துச் சொல்லி, பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.”
இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக