சனி, 16 ஜூன், 2018

கௌரி லங்கேஷ் கொலை ..குற்றவாளி வாக்கு மூலம்

லங்கேஷை கொன்றது ஏன்? கொலையாளி வாக்குமூலம் !மின்னம்பலம் : மதத்தைக் காப்பாற்றும் நோக்கில்தான் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை கொலை செய்தேன் என குற்றவாளியான பரசுராம் வக்மோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் கௌரி லங்கேஷ், பத்திரிகையாளரான இவர், தலித்களுக்கு ஆதரவாகவும், மதவாதத்துக்கு எதிராகவும் தொடர்ந்து எழுதி வந்தார். பெங்களூரு, ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள தன் வீட்டின் முன்பாக மர்ம நபர்களால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பரசுராம் வக்மோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பரசுராம் வக்மோர் நேற்று(ஜூன் 15) வாக்குமூலம் அளித்துள்ளார். மே 2017 ஆம் ஆண்டு மதத்தை காப்பாற்றுவதற்காக ஒருவரை கொலை செய்ய வேண்டும் என என்னிடம் ஒரு கும்பல் வந்தது. ஆனால், நான் யாரை கொலை செய்யப் போகிறேன்,எதற்காக என்று தெரியாது.

இதற்காக, எனக்கு மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. செப்டம்பர் 3 ஆம் தேதி என்னை பெங்களூருக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவேறு அறைகளில் தங்க வைக்கப்பட்டேன். செப்டம்பர் 5 ஆம் தேதி மாலையில் என் கையில் துப்பாக்கியை கொடுத்து, கெளரி லங்கேஷ் வீட்டிற்கு முன்பு என்னை கொண்டுபோய் விட்டனர். கெளரி லங்கேஷ் காரை நிறுத்தி விட்டு இறங்கினார். நான் மெதுவாக இருமினேன்,அப்போது என்னை பார்த்து லங்கேஷ் திரும்பினார். உடனே, அவரை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டேன். அன்றிரவே நான் பெங்களூரை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால், தற்போது லங்கேஷை கொலை செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன் என வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கும்பலுக்கு மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. குறைந்தபட்சம் அவர்களுக்கு ஐந்து மாநிலங்களில் தொடர்பு இருக்கிறது. இந்த கும்பலில் 60 பேர் இருக்கலாம் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
லங்கேஷ், பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகியோரை கொல்வதற்கு ஒரே ஆயுதம் பயன்ப்படுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக