சனி, 16 ஜூன், 2018

ஐ நா : காஷ்மீர் சுய நிர்ணய உரிமையை இந்தியாவு பாகிஸ்தானும் அங்கீகரிக்க வேண்டும்!

காஷ்மீர் பிரச்சினை: ஐநாவின் முதல் அறிக்கை!மின்னம்பலம் :‘2016இல் காஷ்மீரில் நடந்த போராட்டங்களில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐநாவின் உடன்பாட்டிலுள்ள சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’ என்று ஐநாவின் மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் நடந்துவரும் போராட்டங்களில் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரித்து இதுவரை சர்வதேச மனித உரிமை அமைப்புகள்தான் அறிக்கை வெளியிட்டுள்ளன. முதன்முதலாக ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் காஷ்மீர் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள ஐநாவின் 49 பக்க அறிக்கையில், ‘2016இல் நடைபெற்ற போராட்டங்களில் 10,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். பெல்லட் குண்டுகளால் 1,200 இளைஞர்கள் பார்வை இழந்துள்ளனர். எண்ணற்ற இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து சர்வதேச உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.


‘இந்தியாவும் பாகிஸ்தானும் அம்மாநிலத்தின் சுயநிர்ணய உரிமையை (பிரிந்து போகும் உரிமையாகும் இது, ஐநாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது) அங்கீகரித்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும்’ என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இது பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று விமர்சனம் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக