புதன், 6 ஜூன், 2018

நானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டேன் ! இன்ஸ்பெக்டர் வாக்குமூலம் .. அதிகாரிகள் இல்லாததால் ...

THE HINDU TAMIL: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மேலதிகாரி உத்தரவின்றி தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடியில் தடையை மீறி நடந்த பேரணியில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும்மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும் அதையும் தாண்டி சில விதிமீறல்கள் திடுக்கிட வைக்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் துணை வட்டாட்சியர்கள் கூறியிருந்தாலும் அவர்கள் அந்தப் பகுதியில் பொறுப்பில் இல்லை என்பது வெளியாகி உள்ளது. அதைவிட துணை ஆட்சியர் உத்தரவிடாமலே காவல் ஆய்வாளர் ஒருவரே தன்னிச்சையாக துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

எப்சிஐ ரவுண்டானா பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு காவல் பணியிலிருந்தவர் ஆய்வாளர் மீனாட்சிநாதன். இவர் ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று இங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இங்கு யாருடைய அனுமதியுமின்றி தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது குறித்த தகவல் வந்தபோது அங்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் தனது பகுதியில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை, ஆனால் தென்பாகம் காவல் நிலையத்தில் தான் புகார் அளித்ததாக தனது பெயரில் வெளியான தகவலால் தனது குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தனது சங்கத்திற்கு புகார் அளிக்க அவர்கள் ஆட்சியருக்குப் புகார் அனுப்பினர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் உத்தரவு இல்லாமலே தானே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார். அவரது புகாரில் தான் எப்சிஐ கொடவுன் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகவும் அப்போது போராட்டக்காரர்கள் கலவரம் விளைவிக்கும் வகையில் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் வந்ததாகவும் அப்போது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடும் அதிகாரமுள்ள கோட்ட அதிகாரி எங்கே என்று தேடியபோது அவர் இல்லாததால் தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.
தனது பகுதியில் கலவரமே இல்லை என பொறுப்பு அலுவலர் கோபால் புகார் அளிக்க 'கலவரம் நடந்தது, அதிகாரியை தேடினேன் அவர் கிடைக்காததால் நானே உத்தரவிட்டேன்' என்று ஆய்வாளர் புகாரில் பதிவு செய்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக