புதன், 6 ஜூன், 2018

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி: மத்தியப் பிரதேச விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி

THE HINDU TAMIL: மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகளிடம் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களின் விளைச்சலுக்கு போதுமான விலை தேவை, பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாண்டசூர் நகரில் கடந்த ஆண்டு ஜுன் 6-ம் தேதி போராட்டம் நடத்தினார்கள்.
இதில் விவசாயிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். ஆனால், ஒரு ஆண்டாகியும் இன்னும் விசாரணை நிறைவடையவில்லை. இந்நிலையில், மாண்டசூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து முதலாம் ஆண்டு நினைவையொட்டி ராகுல் காந்தி அங்கு சென்றிருந்தார்.

அங்குள்ள பிப்லியா மண்டி நகரில் கிஷான் சம்மிரிதி சங்கல்ப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அங்கு நடந்த கூட்டத்தில் பேசினார்.
பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பின் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
‘‘பிரதமர் மோடிக்கு ஆட்சிக்கு வரும் முன் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் செய்வேன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வேன் என்று கூறினார். ஆனால், 15 மிகப்பெரிய தொழில்அதிபர்களுக்கு மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடி தள்ளுபடி செய்து இருக்கிறார்.
விவசாயிகளின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், ஒருமுறைகூட அவர் வாய்திறந்து பேசவில்லை.
அதேசமயம், கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் அமரீந்தர் சிங் ஆகியோரிடம் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். அவர்கள் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தனர்.
மாண்டசூரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, விவசாயிகள் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகள் குறித்து கவலைப்படவில்லை.
அவர்கள் பணக்கார நண்பர்களுக்கு மட்டுமே உதவி செய்து வருகிறார்கள். அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். மோடி தலைமையிலான அரசு பணக்காரர்களுக்கானது, அவர்களுக்கு மட்டுமே சலுகையை வழங்குகிறது. மெகுல் சோக்ஷிக்கும், நிரவ்மோடிக்கும் நெருக்கமானவராக மோடி இருந்து வருகிறார்.
மெகுல் சோக்சிக்கும், நிரவ் மோடிக்கும் ரூ.30 ஆயிரம்  கோடியை நரேந்திர மோடி கடன் கொடுத்திஇருக்கிறார். ஆனால், அந்தப் பணத்தின் மூலம் விவசாயிகளுக்கு இருமுறை கடன் தள்ளுபடி வழங்க முடியும்.
நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் விவசாயிகளின் கடின உழைப்பால் வருவதுதான். பணக்காரர்கள் அல்ல. அதனால்தான் நாம் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். என்னுடைய முக்கியத்துவம் என்பது என்னுடைய நாட்டு மக்கள், அதன்பின் 2-வது காங்கிரஸ் தொண்டர்கள், 3-வது காங்கிரஸ் தலைவர்கள்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசு இருந்தாலும் எந்தவிதமான பயனும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் இதுவரை 1200 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், மாநிலத்தில் கோடிக்கணக்கில் கடன் வைத்துள்ள பெரும் கோடீஸ்வரர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தினர்களோ தற்கொலை செய்து கொள்ளவில்லை’’ என ராகுல் காந்தி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக