புதன், 6 ஜூன், 2018

31 ஷோரூம்களில் திருடிய பொருட்களை வைத்தே ஷோரூம் திறந்த 3 பேர் கைது

tamilthehindu :  சென்னை< கைது செய்யப்பட்ட சர்ப்ராஸ், ராஜா, முகமது ஷரீப் படம் சிறப்பு ஏற்பாடு ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோட்டுர்புரம், சேலையூர், அண்ணாநகர் உட்பட 31 ஷோரூம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீஸார் கைது செய்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள டைடன் வாட்சுகள், வெள்ளி பொருட்கள், டிவிக்கள், 3 வாகனங்களை கைப்பற்றி உள்ளனர்.
2 மாதங்களில் 31 திருட்டுகள் கோடிக்கணக்கில் கொள்ளை சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரம், அண்ணாநகர், வடசென்னையில் சில பகுதிகள், சேலையூர் உட்பட 17 காவல் நிலையங்களில் 31 சம்பவங்கள் நடந்தது. இவர்களை பிடிக்க காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

துப்புத்துலக்க உதவிய கண்காணிப்பு கேமரா பதிவு
சென்னையில் ஷோரூம்களின் ஷட்டர்களை உடைத்த சம்பவத்தில் போலீஸார் அங்காங்கே கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்ததில் அனைத்துச் சம்பவங்களிலும் ஒரே வகையான செயல்பாடு இருப்பது தெரியவந்தது. ஒரே மாதிரியான நபர்களே ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
31 சம்பவங்களில் ஷோரூம்களில் கொள்ளையடிக்கப்பட்டது அனைத்தும், உயர் ரக வாட்சுகள், லாப்டாப்கள், செல்போன்கள், எல்ஈடி டிவிக்கள், தங்கம், வெள்ளி பொருட்கள் என ஷோரூம்களில் கிடைத்ததை துடைத்து அள்ளிச்சென்றனர். இப்படி கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும்.
தெலுங்கானாவிலும் கைவரிசை
கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தனிப்படை தேடி வந்த நிலையில் கடந்த 25-ம் தேதி நள்ளிரவு தெலுங்கானா மஹபுபாத் மாவட்டத்தில் உள்ள மாரிபேடா காவல் எல்லையில் உள்ள முக்கியமான நகைக்கடையில் 6 பேர் கும்பல் கொள்ளையடித்தது.
இன்னோவா காரில் வந்த அந்த கும்பல் 43 தோலா தங்கம்( ஒரு தோலா 10 கிராம்) 4 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை கைதுப்செய்த போலீஸார் அவர்களின் செயல்பாடுகள் சென்னை கொள்ளையில் ஈடுபட்டவர்களின் நடை உடைப்போன்று இருந்ததை பார்த்து அவர்களைப்பற்றி சென்னை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சென்னை போலீஸார் தங்களிடம் உள்ள கண்காணிப்பு பதிவுகளை அனுப்பினர். இதற்கிடையே மயிலாப்பூர் திருட்டின்போது தனிப்படையினர் சில கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்திருந்தனர். அதில் ஒரு ஸ்கார்பியோ வேனும், தொடர்ந்து கூடவே டாடா ஏஸ் வாகனமும் செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சியான கண்காணிப்பு கேமரா பதிவுகளை தொடர்ந்து சென்று சேகரித்தபோது அது கொரட்டூர் வரை சென்றது தெரிய வந்தது.
கொரட்டூரில் தனிப்படையினர் முகாமிட்டு அந்த வாகனங்கள் மீண்டும் வருகிறதா என்று கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் கோட்டூர்புரத்தில் இதே போன்றதொரு ஷட்டரை உடைத்து திருடும் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
பிடிபட்டது எப்படி
நேற்று மீண்டும் அதே வாகன அணிவகுப்பு சென்னைக்குள் நுழைந்துள்ளது. அதை தனிப்படை போலீஸார் குறிப்பிட்ட தூரத்தில் சந்தேகப்படாவண்ணம் கண்காணித்து பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வாகன அணிவகுப்பு கிண்டியை தாண்டி ஆதம்பாக்கத்திற்குள் நுழைந்து ஒரு எலக்ட்ரிகல் ஷோரூம் இருக்கும் சாலையில் நுழைந்துள்ளது.
அங்கு அவர்கள் வாகனத்தை நெருக்கமாக நிறுத்தி கொள்ளை அடிக்க முயன்றபோது போலீஸார் சுற்றி வளைக்க தப்பித்து ஓட அவர்கள் முயன்றபோது போலீஸார் ஸ்கார்பியோ வாகனத்தை புறப்படாமல் இருக்க கண்ணாடியை உடைத்து கைது செய்துள்ளனர். பிடிபட்ட அவர்களை போலீஸார் விசாரித்தப்போது பல சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்தது.
பிடிபட்ட கொள்ளையர்கள்
பிடிபட்டவர்களில் முக்கியமான குற்றவாளி கொளத்தூரை சேர்ந்த சையது சர்ப்ராஸ் நவாஸ்(36) என தெரியவந்தது. சென்னையில் 20 ஆண்டுகளாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சர்ப்ராஸ் நவாஸ் இதுவரை எட்டுமுறைக்கு மேல் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அவரது கூட்டாளிகள் முகமது ஷரிப்(26), கொரட்டூரை சேர்ந்த ராஜா(30) என்பதும் தெரிய வந்தது. இதில் முகமது ஷரிப், சர்ப்ராஸ் நவாஸின் உறவினர் ஆவார்.

<>சுவாரஸ்யமாக திருடும் கொள்ளையர்கள்

இவர்கள் கொள்ளையடிக்கும் விதம் சுவாரஸ்யமானது. பகலில் இவர்கள் எந்த ஷோரூமை கொள்ளை அடிக்க வேண்டுமோ அதை தேர்வு செய்துக்கொள்வார்கள். பின்னர் திட்டமிட்டு நோட்டம் பார்த்து குறிப்பிட்ட இரவில் கிளம்புவார்கள். வாகனங்கள் அணிவகுத்து செல்லும். அந்த வாகனங்களை கொள்ளை அடிக்கப்போகும் ஷோரூம் முன்பு அணைத்து நிறுத்துவார்கள்.
வெளியிலிருந்து பார்க்கும்போது வாகனங்கள் நிற்பது போன்று தெரியும் ஆனால் உள்ளே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து கையில் கிடைக்கும் பென்சில் வரை கொள்ளை அடித்து வேனில் ஏற்றிக்கொள்வார்கள். டாடா ஏஸ் வேன் நிரம்பிவிட்டால் ஸ்கார்பியோவில் ஏற்றிக்கொள்வார்கள். ஷட்டரை மூடிவிட்டு வாகன அணிவகுப்பு நேராக கொரட்டூர் ராஜா வீட்டுக்கு சென்றுவிடும். அங்கிருந்து பொருட்களை விற்பனைக்கு கொண்டுச்செல்வார்கள்.
தற்போது பிடிபட்ட மூவரிடமிருந்தும் அவர்கள் வீட்டிலிருந்து 500 டைட்டன் வாட்ச், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 3 டிவி, 11 கிலோ வெள்ளி, ஒரு ஸ்கார்பியோ, ஒரு டாட்டா ஏஸ், ஒரு சிறிய கார் என 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இரண்டு மாதத்தில் அவர்கள் அடித்த கொள்ளைச் சம்பவம் மொத்தம் 31 இருக்கும் என்று போலீஸார் கூறுகின்றனர்.

அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கருதுகின்றனர். கொள்ளை அடித்த பொருட்களை புகார்களின் அடிப்படையில் விசாரித்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
<>ஒளிவிளக்கு சினிமா<> பிடிபட்ட கொள்ளையன் சர்ப்ராஸ் நவாஸ் பலே கில்லாடி. ஷட்டரை உடைத்து திருடுவதில் கில்லாடி. இதுவரை 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வழக்குகள் அவர் மீது உள்ளது என போலீஸார் தெரிவிக்கின்றனர். சிறுவனாக இருக்கும்போது கொள்ளைத்தொழிலை ஆரம்பித்த சர்ப்ராஸ் ஒளிவிளக்கு படத்தில் வருவது போல் சிறுவனாக ஓடும் எம்ஜிஆர் கதாபாத்திரம்  ஓடும்போதே பெரியவனாகவும்  மாறி கொள்ளை தொழிலை தொடர்ந்து செய்யும் காட்சி போல தற்போது தனது 36 வயதிலும் கொள்ளையை நிறுத்தவில்லை.
>சொந்தமாக ஷோரூம் திறந்த கொள்ளையன் சர்ப்ராஸ்

தான் கொள்ளையடித்த பொருட்களை வெளியே விற்றால் நல்ல விலைக்கு போகவில்லை, உயிரை பணயம் வைத்து அரும்பாடுபட்டு கொள்ளையடிக்கிறேன், ஆனால் கால்வாசி விலைக்கு கூட விற்கவில்லை ஆகவே அரக்கோணத்தில் சொந்தமாக ஷோரூமே திறந்தேன். அதில் பில் இல்லாத சரக்கு என பேரம் பேசி 75 சதவீத விலைக்கு பொருட்களையும் பல பொருட்களை போலி பில் மூலம் அசல் விலைக்கே விற்றதாக சர்ப்ராஸ் சில ஆண்டுகளுக்கு முன் பிடிபட்ட போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடமில்லாததால் புது வேனை வாங்க முடிவு செய்த சர்ப்ராஸ்
அதன்பின்னர் அந்த கடையையும் போலீஸார் கைப்பற்றி சீல் வைத்ததால் அந்த முயற்சியையும் விட்டுவிட்டு கொள்ளையடிப்பது விற்று காசாக்குவது என்று வாழ்ந்துள்ளார். இதில் சமீப காலமாக கொள்ளையடிக்கும் பொருட்களை எடுத்துவர டாடா ஏஸ் வாகனம் இடம் பத்தவில்லை என்பதால் டாடா 407 வாகனத்தை புக் செய்துள்ளார். அதற்குள் போலீஸார் பிடித்துவிட்டனர்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக